பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 217 / 300

நிலத்தியல்பால் நீர்திரிந்து

அச்சுப் பக்கம் 464465 · ஸ்கேன் 481482 · அதிகாரம் 46 (சிற்றினம் சேராமை) — குறள் 452

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இழித்துரைத்தல், பழித்துப் பேசுதல், கடுமொழி கூறுதல், சுடுமொழி பொழிதல், ஊரார் தூற்றிடத் தீவினைகளில் ஈடுபடுதல், உலகம் பழிக்கும் செயல்களில் உவப்புடன் இணைந்திடல் - இப்படிச் சிறுமைக்குணமுடைய கூட்டமொன்று ஆதிக்கம் பெற்று ஆடிக்களித்தது! அதற்கெதிரான முழுவினர், பண்பாடு காத்திடவும் பழம் பெருமை போற்றிடவும் பணிகள் பல ஆற்றினர். அந்தக் குழுவினர் பணியைக் குலைத்திடும் நோக்குடன், சிற்றினத்தாராம் சிறுமைக் குணத்தினர், தமது ஆதிக்க வல்லமையைக் காட்டியும் அளவிலாப் பொருளாசையைக் காட்டியும் ஒருசிலரைத் தம்பால் இழுத்துக் கொண்டனர். ஆசைகள் அலைமோதிய நெஞ்சினர் அவர் வயப்பட்டதில் ஆச்சரியம் இல்லை அல்லவா? பண்பாட்டுக் குழுவில் இருந்து நழுவி சிற்றினத்துடன் சேர்ந்தோரிலும் புலமை மிக்கோர் இருந்தனர். இருந்தென்ன பயன்? அங்கு போய்ச் சேர்ந்தவுடன், அவர்கள் பெற்றிருந்த புலமையும் ஆற்றலும் புகழும் எங்கே போய் ஒளிந்துகொண்டன. குழுவில் இருந்தபோது புலியென நடைபோட்டோர் புழுவென நெளிந்தனர், சிற்றினக் கழிவுநீர்த் தொட்டியில்! அழகு தமிழ் நடமாடிய நாவில் அழுக்குச் சொற்கள் ஆலவட்டம் சுழற்றின! எழிலார்ந்த மொழிக் கருவூலங்களாகத் திகழ்ந்த அவர்தம் எழுத்துக்கள், கல்லறைச் சவங்களாக அழுகி நாற்றமெடுத்தன! அவர் என்செய்வார்! சேர்ந்த இடம் அப்படி!

பாறையின் உச்சியிலிருந்து பளிங்குபோல் நீர் கொட்டுகிறது! அந்த நீர் வீழ்ச்சியில் ஆடவர் பெண்டிர் குளித்துக் களிக்கின்றனர். வெள்ளியை உருக்கி ஊற்றுவதுபோல் கண்கொள்ளாக் காட்சி, அந்தக் குளிர் நீர்வீழ்ச்சி! தங்கநிற மேனியில் அத் தண்ணீர் பட்டுத் தெறிக்கும்போது பொங்கும் மகிழ்ச்சியால் பூக்களைப் போல் சிரிக்கின்றனர் பூவையர்! பாறையை விடுத்துத் தரையில் விழுந்த தெளிநீர் கண்ணாடிபோல ஓடுகிறது! அதன் பின்னர் களிமண் நிலத்தில் தாவுகிறது! பளிங்காகவும் கண்ணாடியாகவும் தெரிந்த நிலையில் விளங்கிய அந்த அருவியின் நீர், தனது இயல்பை இழந்து, தான் சென்றடைந்த கரிசல் நிலத்தின் வண்ணத்தைப் பெறுகிறது. இதைத்தான் வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்:

“சேர்ந்த நிலத்தினுடைய தன்மையால் - நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல் மக்களுடைய அறிவும்; தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.”

இதோ குறள்:

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு”

அதிகாரம் - 46 - சிற்றினம் சேராமை; பாடல் - 452

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்