பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 216 / 300

பணிவுடையன் இன்சொல்லன்

அச்சுப் பக்கம் 462463 · ஸ்கேன் 479480 · அதிகாரம் 10 (இனியவை கூறல்) — குறள் 95

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

பழங்காலத்தில், சிற்றூர் ஒன்றில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. போட்டியைக் காணப் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. அந்தவூரின் தலை நரைத்த முதியவர் ஒருவர் போட்டியின் நடுவராக இருந்து, வெற்றி பெற்றவர் பெயரை அறிவித்து, வாகைமாலை சூட்டுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எத்தகைய போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

விலை உயர்ந்ததும் மதிப்பு மிகுந்ததுமான அணிகளை, யார் பூண்டு வருகிறார்களோ அவர்களில் வெற்றி பெற்றவர் யார் என்பதை அந்த முதியவர் ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவார்.

அந்த ஊரிலேயே பெருஞ்செல்வத்திற்குரியவன், வீரசிங்கம் என்பான்! அவனை மிஞ்சக்கூடிய பொருள் வசதியும் அணிமணிகளும் கொண்டவர்கள் அந்த வட்டாரத்திலேயே யாரும் கிடையாது! அவன் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாக முன்னரே அறிவித்துவிட்டான்.

“நானும் அந்தப் போட்டியில் கலந்து கொள்கிறேன்”

என்று இன்னொருவனும் அறிவிப்புச் செய்திருந்தான்! அவன் பெயர் அன்பானந்தன்! வீரசிங்கத்திற்கு அடுத்தபடியாகச் செல்வம் படைத்தவன்!

அன்பானந்தன், வெற்றியிலே மிக ஆர்வங்கொண்டுள்ளான் என்றும் அதனால் தனது செல்வத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு இணையற்ற அணிகளைப் பூண்டு அந்தப் போட்டியில் கலந்துகொள்ளக் கூடுமென்றும் எனவே வீரசிங்கம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென்றும் அவனைச் சுற்றியிருந்தோர் அறிவுரை கூறினர்.

வீரசிங்கமும் வெற்றியொன்றையே குறிக்கோளாகக்கொண்டு, விலை மதிப்பற்ற அணிகளைத் தயார் செய்யுமாறு பொற்கொல்லர்களுக்குப் பொருள் வழங்கினான்.

போட்டிக்குரிய மேடையில் வீரசிங்கமும் அன்பானந்தனும் தோன்ற வேண்டிய வேளை வந்துவிட்டது! குழுமியிருந்தோர் விழிகளை அகலத் திறந்து, அந்த மேடையையே நோக்கியவண்ணமிருந்தனர்!

முதலில் வீரசிங்கம் வந்து நின்றான். கதிரொளியை வெல்லக்கூடிய வைரமணிகள் கொண்ட குண்டலங்கள் அவன் காதுகளில்! பத்தரைமாற்றுப் பொன்னிழையில் கோக்கப் பட்ட ஒன்பான்மணிகளும் குலுங்கிடும் மாலையும் அதன் முகப்பில் கொற்கை முத்துக்களால் ஆன பதக்கமும் கழுத்தை ஈர்த்து அகன்ற மார்பில் புரண்டுகொண்டிருந்தன.

மாணிக்கக் கல் பதித்த காப்புகள் கைகளில்!

போட்டி காண வந்திருந்தோர் வீரசிங்கத்தின் அணிகளைக் கண்டு, திறந்த வாய் திறந்தபடியிருந்தனர். அவனை வென்றிட அன்பானந்தனால் இயலாது என முடிவு கட்டினர். அப்போது அன்பானந்தன் அந்த மேடைக்கு வந்தான். கூட்டம் ஆச்சரியத்தில் மூழ்கியது. காரணம்! அன்பானந்தன் காதுகளிலோ- கழுத்திலோ- கைகளிலோ எந்த அணியும் இல்லை!

அவனைப் பார்த்த வீரசிங்கம் கலகலவெனச் சிரித்தான்! இறுமாப்புடன் நெஞ்சை உயர்த்தி, வெற்றிப்பூரிப்பில் விழிகளை மக்கள் மத்தியில் ஓடவிட்டான்! “முதியவர் எம்மிரு வரையும் ஒப்பிடவே தேவையில்லை! நானே வென்றேன்!” என்று முழங்கினான்.

“வீரசிங்கம் அவர்களே! தாங்களே வெற்றி பெற்றதாக இருக்கட்டும்! போட்டி நம் இருவருக்குமிடையே அல்ல! ஒன்றை மறந்து விட்டீர்கள்! நாம் இருவரும் சேர்ந்து முதியவராம் இந்தப் பெரியவரின் அறிவாற்றலுக்குத் தேர்வு வைத்திருக்கிறோம்! அவர் கூறட்டும் தீர்ப்பை!”

அன்பானந்தன், இவ்வாறு கூறியதும் வீரசிங்கம் கேலியாகச் சிரித்து- “என்னை வெற்றிகொள்ள, வேறொரு செல்வந்தன் இந்த ஊரில் இருக்கிறானா? இல்லை! இல்லை!”

என்று உரக்கக் கத்தினான். அன்பானந்தன், அவனைப் பார்த்து, “வெற்றி வீரரே! நீவிர் வாழ்க!” என்று வாழ்த்தினான்.

அப்போது முதியவர் குறுக்கிட்டார்! “இந்த இருவரில் வெற்றி பெற்றவர் அன்பானந்தனே! வீரசிங்கமல்ல!” முதியவர் தீர்ப்புக் கேட்டு கூட்டத்தினர் அதிர்ந்தனர்! அவர் விளக்கினார்: “பணிவான இயல்பும், இன்சொல்லும்தான் ஒருவனுக்கு உண்மையான அணிகலன்களாகும்! மற்றைய அணிகள் எவ்வளவு விலைமதிப்பற்றவையாக இருப்பினும் அவை அணிகள் அல்ல; என்று வள்ளுவர் கூறியிருக்கிறார் - அதையொட்டியே இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.”

முதியவரின் விளக்கம் கேட்டு, வீரசிங்கம் தலைகுனிந்தான்! அன்பானந்தன் கழுத்திலே வெற்றிமாலை ஏறிக்கொண்டது!

“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற”

அதிகாரம் - 10 - இனியவை கூறல்; பாடல் - 95

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்