பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 215 / 300

கொடும்புருவம் கோடா

அச்சுப் பக்கம் 461461 · ஸ்கேன் 478478 · அதிகாரம் 109 (தகையணங்குறுத்தல்) — குறள் 1086

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அழகு சுமந்து வரும் பெண்ணைப் பருவச் சுமையால் கனத்துப் பருத்த இதயம் படைத்த ஒரு வாலிபன் பார்க்கிறான். பார்த்தவன், தன் பாதையில் போவதுதானே நியாயம்? அந்த அழகியின்மீது பழி கூறி விட்டுப் போகாவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது போலும்! மனித வழக்கமே அப்படித்தான் ஆகிவிட்டது. வானத்தில் தவழும் நிலவைப் பார்த்து, “ஏ, நிலவே! ஏன் என்னை இப்படித் தகிக்கிறாய்?” என்று கோபித்துக் கொள்வான். சலசலவெனப் பாயும் நீரோடை நிலங்கிழித்துச் செல்வதைப் பொறாமைக் கண்களோடு மனிதன் பார்த்து வயிற்றெரிச்சலை வெளியிடுவான். ‘நான் வரும்போது நீரோடை இப்படி இசைபாடிச் செல்வதா?’ என்று கவிதா உள்ளத்தோடு வசை பொழிவான். அத்தகைய ஓர் இளைஞனைத்தான் இதோ நம் கண் முன்னே - மன்னிக்கவும் - ஒரு மங்கையின் கண் முன்னே - நிற்க வைத்துக் கதை வைக்கிறார் வள்ளுவர் பெருந்தகையார்.

“கொடுமை பொருந்திய புருவங்கள் கோணுதல் இல்லாமல் தடுக்குமானால், இவளுடைய கண்கள் என்னை நடுங்க வைக்கும் அளவுக்கு என் மீது பாயமாட்டா!”

அவளது பார்வையில் பட்டுத் தெறிக்கிறதாம் அவனது பருவ நெஞ்சம்! அந்த இன்பவேதனையில் புலம்புகிறான். அய்யகோ; அணை சரியாகப் போட்டுப் பட்டுத் தடுக்கப்பட்டிருந்தால் விரகதாப வெள்ளம் என்னை மூழ்கடித்திருக்காதே! என்ற கருத்திலே கூறுகிறான், ‘அவள் சுந்தர விழிகளை - அவள் புருவங்கள் சுவர் போலத் தடுத்திருக்கக்கூடாதா’ என்று! வள்ளுவர் நடையில் அதைப் படியுங்கள்:

“கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண்”

அதிகாரம் - 109 - தகையணங்குறுத்தல்; பாடல் - 1086

நடுங்கு அஞர் செய்யல - நடுக்கம் தரும் துன்பத்தைச் செய்ய மாட்டா.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்