பொருளடக்கம் 214 / 300
இற்றிறந்தார் கண்ணேயும்
அச்சுப் பக்கம் 459–460 · ஸ்கேன் 476–477 · அதிகாரம் 105 (நல்குரவு) — குறள் 1044
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
வறுமையில் வாடும் புலவரின் மகன் அவன். இருபது வயது தாண்டிய இளைஞன். அவனிடம் கற்பனைச் செல்வம் கரை புரண்டதே தவிர, அவர்கள் வீட்டில் அடுப்பு ஒரு வேளை எரிவதற்கே அலைந்து திரிந்து கடன் வாங்கவேண்டும். கட்டழகன்கூட அந்தக் காளை! வறுமைக்கோடு, செல்வச் செழிப்பு இவற்றையெல்லாம் பார்த்து அளவெடுத்துக்கொண்டா காதல் எனும் காட்டாறு பெருக்கெடுத்து ஓடுகிறது? அந்த வெள்ளத்தில் சிக்குண்டான் அந்த இளங்கவிஞன், வளம் தழைத்த குடும்பத்தின் வசந்தம் அவள்! வாலிபக் கவிஞனின் வண்ணத் தமிழுக்கு அடிமையானாள்! வழக்கம்போல் இரு குடும்பத்தாருக்கும் தெரியாமல் மலர்ந்த காதல்; மணம் வீசத் தொடங்கிற்று!
நாட்கள் நகர நகரக் கவிஞனின் இளம் இதயத்தில் நடுக்கம் பிறந்தது. “நீயோ விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரம்! நானோ மண்ணில் கிடக்கும் கரிக்கட்டை! நமக்குள் மணப் பொருத்தமிருக்கலாம்; மணப்பொருத்தம் உண்டென்று யார்தான் ஒப்புவார்? அதிலும் பெருஞ்செல்வத்தில் புரளும் உன் பெற்றோர் ஏற்றிடுவரோ” எனக் கூறித் தன்னை மறந்து விடுமாறு கேட்டுக்கொண்டான், அவளிடம்!
திடுக்கிட்டாள்! திகைத்தாள்! “நீங்கள்தான் பேசுகிறீர்களா? ‘மீனை அள்ளும் வலையோ - வலையில் துள்ளும் மீனோ இந்தக் கண்கள்?’ எனக் கவிதையால் கேட்டு என் இமைகளை இதழ்களாக்கி முத்தமிட்டீர்களே; அந்தக் கண்களை நீரில் உறைவைக்க எப்படியத்தான் துணிந்தீர்கள்?” அழுதாள் அவள்!
அவன் ஊமையாக உட்கார்ந்திருந்தான்.
“ஏழையின் மகனைக் காதலிப்பதாக என் தாய் தந்தையரிடம் நான் சொல்லவில்லை. உண்மைதான்! என்னுடன் நீங்களும் ஒத்துழைத்து ‘ஆம்’ என்று கூறவேண்டும்! மணம்
முடிந்தபிறகு என் வீட்டாரைச் சமாதானப்படுத்திக்கொள்ள என்னாலே முடியும்! வாருங்கள், முதலில் உங்கள் தந்தையிடம் சென்று சம்மதம் பெற்று வரலாம்!”
அவள் பேச்சைக் கவனித்தவாறு, அவன் அசையாமல் உட்கார்ந்திருந்தான். அவள் விடவில்லை; அவனை இழுத்துக்கொண்டு புலவரைக் காணப் புறப்பட்டாள்.
இருவரும் புலவர் முன்னே நின்றனர். அவரோ, தூங்கும் அடுப்புகளுக்கருகே ஒரு கிழிந்த பாயில் அமர்ந்து பழைய ஓலைகளில் கவிதைகளைப் பதித்துக் கொண்டிருந்தார். இருவரையும் கண்டு வியப்பு மேலிட்டவராகத் தன் மகனிடம் கேட்டார்; “யார் இந்தப் பெண்?”
“அப்பா!” என்று மட்டுமே இளங்கவிஞனின் உதடுகள் அசைந்தன! அதற்குள் அந்தத் துணிச்சல்காரக் கிள்ளை, “நாங்கள் இருவரும் இதயமாரக் காதலிக்கிறோம், தங்களின் வாழ்த்துப் பெற்றுத் திருமணம் செய்துகொள்ள...” என்று முடிக்கவில்லை! புலவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!
“கால் பணத்துக்கு வழியில்லை! கடன் கொடுக்கவும் இனிமேல் ஆள் இல்லை! காதல் வாழ்கிறதோ காதல்! என்னடா முட்டாள்! இதெல்லாம் என்னடா கூத்து? எங்கே அகப்பட்டாள் இந்த வேசிக்குட்டி?”
பொலபொலவென வார்த்தைகளைக் கொட்டிவிட்டார்! அச்சமின்றி அவனை அழைத்துவந்த அந்தப் பச்சைக்கிளி, “அய்யோ!” எனக் காதுகளைப் பொத்திக் கொண்டு திசை தடுமாறி ஓடிற்று! அவனும் அவளைத் தொடர்ந்து பறந்தான்! சுழன்றோடும் பேராறு! அந்தச் சுழலில் அவள் சிக்கிச் சாவதற்குள் அவன் தடுத்துத் தூக்கிவிட்டான்.
மெல்ல அவள் செவ்விதழ்கள் அசைந்தன! “நற் குடும்பத்தில் பிறந்தவர் நீங்கள்! உங்கள் தந்தையும் அவ்வாறே! இப்படி எண்ணியிருந்த என்னைப் பார்த்தா இந்த இழிமொழி! இல்லை; இடிமொழி!”
தேம்பித் தேம்பி அழுதாள்! அவளை இறுக அணைத்துக்கொண்டான்! அந்த அணைப்பின் மகிமையால் மூடிக்கொண்ட அழகிய கண் இமைகளில், தன் இதழ்களால் ஒத்தடம் கொடுத்தான்.
“என் கோகிலமே! நீ குறள் படித்ததில்லையா? வறுமையெனும் கொடுமை; நல்ல குடியிற் பிறந்தவர்களையும் அதன் கொடுமையின் வெப்பத்தால் இழிவான சொற்கள் பிறப்பதற்கான ஒரு சோர்வை உண்டாக்கிவிடும் என எவ்வளவு உருக்கமாகக் கூறுகிறது! அதற்கு என் தந்தையென்ன விதிவிலக்கா! அதனால் அந்த இழிதகைச் சொல்லைப் பொருட்படுத்தாதே!”
அவள், அவன் மடியில் மட்டுமல்ல; அந்த விளக்கத்திலும் ஆறுதல் பெற்றாள்! ஆற்றோரத்தில் “நிச்சயதாம்பூலம்” நடத்திக்கொண்டனர்! மாற்றிக் கொள்ளத் தாம்பூலம் இல்லாவிட்டாலும்; தாம்பூலங்களாயின தளிர் இதழ்கள் நான்கும்.
“இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்”
அதிகாரம் - 105 - நல்குரவு; பாடல் - 1044
இற்பிறந்தார் = நல்ல குடிப்பிறந்தவர்; இளி = இழிவு; இன்மை = வறுமை
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்