பொருளடக்கம் 213 / 300
வசையிலா வண்பயன்
அச்சுப் பக்கம் 457–458 · ஸ்கேன் 474–475 · அதிகாரம் 24 (புகழ்) — குறள் 239
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
தோற்றப் பொலிவும் தோள் வலிவும் கொண்டவர்தான் வீரராகியர்! ஒரு காலத்தில் நாட்டுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தார்! பகை நாட்டுடன் நடந்த போரில் சிறைப்பட்டு, நீண்ட நாட்களுக்குப்பிறகே விடுதலை பெற்றார். இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட நல்லுறவு உடன்பாட்டின் அடிப்படையிலேதான் வீரராகியருக்கு விடுதலை கிடைத்தது. சிறையில் வாடிய அவரது தியாகத்தை மன்னர் மதித்தார் என்றாலும் பகை நாட்டாரை வீழ்த்துகின்ற திறமை வீரராகியருக்கு இல்லையென்பதை உணர்ந்து, அவரிடமிருந்து தளபதிப் பொறுப்பைப் பறித்து வேறொருவருக்கு அளித்துவிட்டார்.
பதவியிழந்த தளபதி வீரராகியர், பழைய நூல்களுக்கு விளக்கவுரை விரிவுரைகள் எழுதிக் காலத்தைக் கழித்துவந்தார். முதுமையும் அவரைத் தழுவிக்கொள்ளத் தொடங்கியது. வயது ஏற ஏற வீரராகியருக்குக் குடும்பத்தைப் பற்றிய கவலையும் தன் முதுமைக் காலத்திலும் தனக்குப் பிறகும் வசதியோடும் ஆடம்பரத்தோடும் தன் குடும்பம் வாழ்ந்திட செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்ற ஆசையும் தோன்றியது!
மண்மீது அவருக்கிருந்த பற்று இளமைக் காலத்தில் நாட்டுப் பற்றாக இருந்தது. இப்போதோ அது நிலவுலப் பற்றாக மாறிவிட்டது! தோட்டம் துரவுகள், காட்டு நிலங்கள், மலை வளங்கள் இவற்றைச் சேர்த்திட வேண்டுமெனத் துடித்தார்.
மன்னனிடம் சென்று, தனது அறிவாற்றலை மட்டுமாவது பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் பதவியை யாசித்தார். மன்னவரோ, மெளனம் சாதித்துவிட்டார்.
சிறிது காலத்திற்குப்பிறகு மன்னர் இயற்கை எய்திடவே, மன்னரின் தம்பி ‘செந்தமிழ்வேள்’ என்பான் ஆட்சிக்கு வந்தான். அவனிடமும் சென்று வீரராகியர் கெஞ்சினார் பதவிக்கு! முதியவராயிற்றே என்ற இரக்க நெஞ்சத்துடன் இளைய மன்னன் ‘வேள்’, அவரை அமைச்சர்களின் ஆலோசனை அவைக்குத் தலைவராக நியமித்தான். அந்தப் பதவியைப் பயன்படுத்திக்கொண்டு, அவர் வேண்டிய மட்டும் கையூட்டுகளைப் பெற்றுத் தன் குடும்பத்தைச் செல்வச் செழிப்பில் ஆழ்த்திக்கொண்டார்.
ஏதோ ஒரு காரணத்தால் பக்கத்து நாட்டான் திடுமெனப் படையெடுத்து, வேளின் அருகிருந்த அதிகாரிகள் துணையுடன் வேளின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்! அதுவரையில் வேளின் புகழ்பாடி விருந்த பொருளீட்டிக்கொண்ட வீரராகியர், இப்போது பக்கத்து நாட்டானின் சிறப்புகளை முழக்கத் தொடங்கினார்.
போரில் சதிச்செயல் புரிந்தவர்களால் தோல்வியுற்ற ‘வேள்’, மீண்டும் தனது நாட்டைக் கைப்பற்ற படை தயாரித்துக்கொண்டிருந்தான். வீரராகியரோ தனக்குப் பதவியளித்த வேள் மீது குறைகள் பலவற்றை அடுக்கி, அதன் காரணமாக பகைநாட்டானின் பாசத்தைப் பெற்று அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டார்.
நாடிழந்து பல்வேறு பகுதிகளில் பாசறையமைத்துப் படை திரட்டிக் கொண்டிருந்த வேளிடம், அவனது தளபதிகளில் சிலர் சென்று வீரராகியர் போக்குக் குறித்துக் கூறினார்கள்.
“இப்படித்தான் வாழவேண்டுமென்றில்லாமல், எப்படியும் வாழலாம் என்று திட்டம் வகுத்துக்கொண்டவர்கள், நிலைக்காத செல்வத்தைப் பெறலாம்! ஆனால், நிலைத்த புகழைப் பெற முடியாது.”
இதை வேள் சொல்லிவிட்டுத் தளபதிகளைப் பார்த்து, “இத்தகைய மனிதர்களைப் பற்றி வள்ளுவர் கூறியுள்ளது தெரியுமா?” எனக் கேட்டுவிட்டு அதையும் விளக்கினான்:
“புகழற்ற வாழ்வுடன் தங்களது உடம்பைச் சுமந்து கொண்டிருக்கிறார்களே; அந்த உடம்பைச் சுமந்த நிலம்கூட வளமான விளைவு இல்லாமல் குன்றிவிடும்.”
அதற்கு இது குறள்:
“வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்”
அதிகாரம் - 24 - புகழ்; பாடல் - 239
வசை - பழிப்பு
வண்பயன் - வளமான பயன்
இசை - புகழ்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்