பொருளடக்கம் 212 / 300
பகையகத்துப் பேடிகை
அச்சுப் பக்கம் 455–456 · ஸ்கேன் 472–473 · அதிகாரம் 73 (அவை அஞ்சாமை) — குறள் 727
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அடேடே! என்ன கூர்மையான வாள்! கடுமையான இடியொலிகளுக்கிடையே காரிருளில் பளிச்சிடுகின்ற மின்னலைப்போலக் கண்ணைப் பறிக்கிறதே, அந்த வாளின் பளபளப்பு! அந்த வாளை உருவாக்கித்தந்த கொல்லரின் திறமையே திறமை! அந்த வாள் போன்ற படைக்கலன்களைப் பெற்றிருக்கிற ஒரு படையைத் தோல்வியென்பது தொட்டுப் பார்க்கவும் முடியாது. களத்தில் அந்த வாள் சுழன்றாலே, பகைவர் அதிர்ச்சியடைவர். ஒரே வீச்சில் இரண்டு மூன்று தலைகளைத் தூக்கியெறிந்து பந்தாடக்கூடிய வலிமைமிக்க வாள்; இதோ அந்த வாளை, ஒரு கரம் தூக்கிப்பிடிக்கிறது; வாளின் ஒளிக்கீற்று வான்மீது கோடுகளைக் கிழிக்கிறது.
ஓலைச்சுவடிகள் இறைந்து கிடக்கின்றன. அந்தச் சுவடிகளுக்கு மத்தியில் அந்த மனிதன். அவன் விழிகள், சுவடிகளின் மீது மொய்த்துக் கிடக்கின்றன. அகமென்றும் புறமென்றும் ஐம்பெருங் காப்பியமென்றும் எத்தனை எத்தனையோ சுவடிகள்! அத்தனையும் அவன் படித்து மனத்தில் பதிய வைத்து விட்டானா? அல்லது பார்ப்பவர்களுக்கு அப்படியொரு மயக்கமா? அழகு சிந்தும் நூல்கள் - அறிவு மணக்கும் நூல்கள் - பண்பாடு உணர்த்தும் நூல்கள் - அறமுரைக்கும் நூல்கள் - அனைத்தையும் வாரிக் கட்டிக்கொள்கிறான்; எழுந்து கம்பீரமாக நடக்கிறான். அவனைப் பார்த்து இருவர் பேசிக்கொள்கிறார்கள். “ஏ, அப்பா! எவ்வளவு கருத்துக்கள் மூளையில்
ஏறியிருக்கின்றன. இன்று அவைக்களத்தில் இவரை எதிர்த்து வாதிடுவோர் புறமுதுகிட்டு ஓடுவர்! அதில் சந்தேகமேயில்லை.” புகழ்ந்தவர்களைப் பார்த்து ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு அவன் போய்விடுகிறான்.
இப்போது முதல் காட்சிக்குச் செல்வோம். கூர்மைகொண்ட போர்வாளை ஒரு கரம் எடுத்ததல்லவா! அந்தக் கரத்துக்குரிய உருவம், களம் நோக்கி வாளுடன் சென்றது. அந்த உருவைப் பார்த்துப் பகைவர்கள் நகைத்தனர். உருவமோ வெட்கப்படவில்லை. கைவாளைச் சுழற்றியது. அப்போது ஒரு யானை, தனது துதிக்கையால் அந்த வாளை அலட்சியமாகத் தட்டிவிட்டு அந்த உருவத்தை உற்று நோக்கியவாறு நின்றது! அது கண்டு நடுங்கிய அந்த உருவம் ‘அய்யோ’ என அலறியவாறு ஓடியது. “பேடி! பேடி!” என உரக்கக் கூறிச் சிரித்தனர் களத்தில் நின்றோர்.
மீண்டும், இரண்டாவது காட்சிக்குச் செல்வோம். ஆர்ப்பரிப்புடன் அவைக் களத்திற்கு வாரிக் கட்டிய ஓலைச்சுவடிகளுடன் சென்றவன்; அவனை எதிர்த்து வாதிடக் கூடியவர்களை ஒருமுறை நோக்கினான். “ஆகா! தமிழிலக்கிய நூல்கள் அனைத்துடனும் வந்திருக்கிறானே; இன்று வெற்றி நம் பக்கமே!” என அவனைச் சார்ந்தோர் மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவன் கையில் தமிழ்ப் பெருநூல்கள்! அவற்றையே கருத்தில் தாங்கியிருந்த எதிர் அணியினர் அதே நூல்களில் இருந்து சான்றுகளைக்காட்டி உரையாற்றினர். திடீரென்று ஒரே பரபரப்பு! ‘ஓலைச் சுவடி மனிதனைக் காணவில்லை! ஓடிவிட்டான் அவையைவிட்டு!’ மண்டபம் சிரிப்பால் அதிர்ந்தது!
பகையைச் சந்திக்கப் பளபளப்பான வாளுடன் சென்றவனையும் - அவையைச் சந்திக்கப் பற்பல நூல்களுடன் சென்றவனையும் - நமது அகக்கண்கள் மாறிமாறிக் காட்சிகளாக்கிக் கொள்கின்றன!
நாமும் நம்மையறியாமல் சிரித்துவிடுகிறோம்!
வள்ளுவரும் அவையஞ்சும் அந்த மனிதனைப் பார்த்துச் சிரிக்கிறார். அவனை யாருடன் ஒப்பிடுவது எனச் சிந்திக்கிறார். பகையஞ்சும் அந்தப் பேடி, அவர் நினைவுக்கு வரவே; குறள் வடித்துக் கொடுத்துவிடுகிறார்.
அதுவே இது:
“பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல்”
அதிகாரம் - 73 - அவை அஞ்சாமை; பாடல் - 727
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்