பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 211 / 300

அணங்குகொல் ஆய்மயில்

அச்சுப் பக்கம் 453454 · ஸ்கேன் 470471 · அதிகாரம் 109 (தகையணங்குறுத்தல்) — குறள் 1081

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“எடுத்தேன் கவியொன்று வரைந்திட ‘என்னை எழு’தென்று சொன்னது வான்”

என்பதாகப் பாரதிதாசன் பாடுகிறாரே கண்ணா; நீங்கள் எடுத்துக் எழுதத் தொடங்கினால் என்னை எழுதென்று எதிரே வந்து நிற்பது எது? அல்லது யார்?” எனக் கேட்டாள், அவன் தோள்மீது முகத்தைப் பதிய வைத்துக்கொண்டு அந்தப் பாவை!

“யாரைப்பற்றி எழுதுவதில் எனக்கு எல்லையற்ற பூரிப்பு! எதைப்பற்றி எழுதுவதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி! உனக்கே தெரியுமே கண்ணே!”

என்றான், அவள் தாமரைக் கன்னங்களை வருடியபடி அவன்!

“சொல்லுங்களத்தான்! நீங்கள் சொல்லக்கூடாதா? அதை நான் சுவைக்கக்கூடாதா?”

சிணுங்கினாள்! சிந்திடும் புன்னகையால் கெஞ்சினாள்! “உம்” என்று கொஞ்சினாள்!

“பழங்கதை படிப்போர் சிலர், தேவலோகம் என ஒன்றிருக்கிறது - அங்கே தேன்பலாச் சுவைகளாய் ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமையென தெய்வப்பெண்கள் இருக்கின்றனர். மோனத்தவமிருக்கும் முனிவர்களை யெல்லாம் மோகம் தலைக்கேறித் தங்கள் இதழ்பானம் பருக வைக்கும் எந்திழையர்.

அவர்களின் கால் தரையில் படாது - கண் இமைகள் அசையமாட்டா என்றெல்லாம் கற்பனைகளை அளந்திடுவர் அல்லவா; அப்பெண்களை அணங்குகள் எனக் கூறுவர் ஒரு சாரார்! அந்த அணங்குகளைப்பற்றி எழுதலாமா என எண்ணினேன்; அவர்களை வென்றிடும் கற்புடைக் கட்டழகி - கயற்கண்ணழகி - என் கண்மணியொருத்தி என்னையே நினைத்து நெஞ்சு நெக்குருகிடும்போது அணங்குகளையா எழுதுவேன்?”

“யாரத்தான் அந்தக் கட்டழகி - கண்ணழகி - கண்மணி?”

அவள் பவள உதடுகள் துடித்தன; பதிலைத் தெரிந்து கொள்ள இதயம் விம்மியதை, அவள் மார்பகம் காட்டிக்கொடுத்தது!

“வண்டார் சோலையில் வண்ணமிகு மயில்கள் பலவற்றில் ஒரு மயிலை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்தேன். அதை எழுத்தோவியமாக்கலாமா என எண்ணினேன்! ஆனால், நான் ஆய்ந்து தேர்ந்த மயிலின் வனப்பையும் வசீகரத்தையும் இரண்டாவது இடத்திற்குத் தள்ளிவிட்ட எழில் ரதமாக, அவள் ஜொலிக்கின்றாள்! அதனாலே அவளை அணங்கு என்று பாராட்டுவதா? ஆய்மயில் என்று போற்றுவதா? இரண்டு புகழாரங்களும் புறங்காணுகின்றன! காரணம்; அவள் கனத்த ஒளிமிகு காதணிகளை அணிந்த பூமகளாகவே இருக்கிறாள். அணங்கையும் மயிலையும் அழகிலும் சாயலிலும் வெற்றி கொள்கிறாள்! சரி! விண்மகளுமல்ல; விரித்த தோகை மயிலுமல்ல; மண்மகள் என்று, என் மனங் கவர்ந்தவளைச் சிறப்பிக்கலாமா எனச் சிந்தித்தேன் - எதுவும் வேண்டாம்; என் நெஞ்சம் மயக்கியவள் என்று அவளைப்பற்றிக் குறித்துக்கொண்டேன்.”

அவன் பதில் கேட்டபிறகும் அந்தப் பாவைக்கு நிறைவு ஏற்படவில்லை! “யார்தான் அந்த நெஞ்சு மயக்கி?” என்று சினந்து கேட்டு எழுந்துபோக முயன்றாள்!

“நீயேதான்!” என்று அவள் இடை தொட்டிழுத்து மடியில் கிடத்தினான்.

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு”

என்ற குறளை இசையுடன் பாடினான்! ஊடினாள்! பின்பு கூடினாள்!

அதிகாரம் - 109 - தகையணங்குறுத்தல்; பாடல் - 1081

மாலும் = மயங்கிடும்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்