பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 210 / 300

புறங்கூறிப் பொய்த்துயிர்

அச்சுப் பக்கம் 451452 · ஸ்கேன் 468469 · அதிகாரம் 19 (புறங்கூறாமை) — குறள் 183

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“விடியான்” என்று அவனுக்கு ஊரார் வைத்த பெயர் வேடிக்கைக்காக அல்ல! அவன் கால்பட்ட இடம் விடிந்ததே இல்லை. அவன் தொட்டது துலங்கியது மில்லை; தொடாதது எதுவுமில்லை. தன்னுடைய நலமொன்றையே குறிக்கோளாகக் கொண்டு, யாருடனும் ஒட்டிச்சென்று ஒட்டிக் கொள்வான். ஒட்டிக் கொண்ட பிறகு, அந்த இடத்தில் வேறு யாரையும் நெருங்க விடமாட்டான். உப்பரிகைகளில் அவனுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். விடியானின் தொடர்பால் அந்த நண்பர்கள் ஒட்டாண்டிகளாகி, ஒட்டுத் திண்ணைகளில் வாழ நேரிடும். அவ்வளவு தான்! விடியான், தனது தன்னல வேட்டைக்கு வேறிடம் பார்த்துக் கொள்வான்.

இப்படியொரு வாழ்வை அமைத்துக்கொண்ட அவன், பிறரைப் பார்த்து ‘சுயநலவாதிகள்’ என்பான்! பதவிப் பித்தர்களென்பான்! ஆனால், அவனது இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் “பதவி! பதவி!” என்றே சுயநல வேட்கையுடன் துடித்துக் கொண்டிருந்தது.

அவனை உயிராக நேசித்த ஒரு நண்பனைச் சோதனையான நேரத்தில் கழுத்தறுத்துவிட்டு, அவ்வூரில் வளமாக வாழ்ந்த பேராளன் என்பவன் நட்பைத் தேடிப் பெற்றான். அவனது திறமையான தந்திரப் பேச்சிலும் - எதிரேயிருந்து முகத்துக்கு

நேராகப் புகழ்கிற ஆற்றலிலும் - பேராளன் தனது மனத்தை விடியானிடம் பறிகொடுத்தான்.

பேராளனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு! அந்த நண்பர்கள், பேராளனைத் தூய்மையாக நேசித்தார்கள். அவர்களுடன் சேர்ந்துகொண்டு விடியான், பேராளனின் அலுவல்களையெல்லாம் தானும் கவனிப்பது போல நடித்துவந்தான். அந்த நண்பர்கள் இல்லாத நேரம் விடியான், பேராளன் காதில் அந்த நண்பர்களைப் பற்றி ஏதாவது ‘கோள்’ மூட்டி வந்தான். எல்லோரையும்விடத் தனக்கே பேராளனிடம் தனிப்பட்ட செல்வாக்கு ஏற்படுமாறு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டான். அவன் சதியில் ஏமாந்துபோன பேராளனும் தனது உயிர்க்குயிரான நண்பர்களை ஒவ்வொருவராக விலக்கிவிட்டான். பேராளனை, இணைபிரியாமல் இருந்தும், இரண்டொரு தடவை பேராபத்துக்களில் இருந்து காப்பாற்றிய இளவேனில் என்ற நண்பன் மட்டுமே அருகிருந்தான்.

ஒரு நாள் இளவேனில் இல்லாத சமயம் பேராளனிடம், விடியான் தனது வலையைப் பின்னிடத் தொடங்கினான்.

“அந்த இளவேனில் இருக்கிறானே; அவன் மனம் ஓர் எரிமலை! உன்னைப் பற்றி அவன் பிறரிடம் பேசும்போது அந்த எரிச்சலைக் கொட்டுகிறான். மிகுந்த பொறாமை பிடித்தவன்.”

இந்த வார்த்தைகளைப் பேராளனின் காதில் விடியான் நுழைத்துக் கொண்டிருக்கும்போது, இளவேனில் அந்த இடத்தில் வேகமாக நுழைந்து, விடியானின் காதைப் பிடித்துத் திருகிக்கொண்டே அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்துவிட்டான். பேராளன், இளவேனிலைத் தடுக்காவிட்டால் விடியான் கீழே விழுந்தவன் எழுந்திருக்கவே முடியாது!

“அடே! மூடா! அறநூல்கள் சொல்லும் ஆக்கம் என்ன தெரியுமா? புறங்கூறிப் பொய்யாக உயிர் வாழ்வதைவிட வறுமையுற்று இறந்துவிடுதல் எவ்வளவோ மேல்!”

என்று இளவேனில் உரக்கக் கத்தினான். பேராளன், விடியானை அணைத்துக் கொண்டு இளவேனிலைக் கடிந்து கொண்டான்.

“நான் சொல்லவில்லை நண்பா! குறள் சொல்வதைச் சொன்னேன்; நான் வருகிறேன்!”

என்று கோபமாகக் கூறிவிட்டு இளவேனில் அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

குறள் என்ன கூறுகிறது?

“புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும்”

அதிகாரம் - 19 - புறங்கூறாமை; பாடல் - 183

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்