பொருளடக்கம் 209 / 300
கண்ணிறைந்த காரிகை
அச்சுப் பக்கம் 449–450 · ஸ்கேன் 466–467 · அதிகாரம் 128 (குறிப்பறிவுறுத்தல்) — குறள் 1272
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
எதிர்பாராத சந்திப்பு - ஒருவரையொருவர் இழந்துவிட்ட நிகழ்ச்சி - இல்லம் திரும்பிய காதலன், அவளைப்பற்றிய நினைவுடன் - அலைமோதும் உள்ளத் துடன் உறக்கமின்றித் தவிக்கிறான். அவள் நிலையும் அப்படித்தான் இருக்கு மென்று கருதுகிறான். மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ள, அவளுக்கு மடல் தீட்டுகிறான். இதயச் சுமையை இறக்குவதற்கு யாரிடமாவது பேசவேண்டும். அல்லது அந்தச் சுமையான செய்தி குறித்து எழுதியாவது தீர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் அவன், அவளுக்கு எழுதும் மடல்தான் இது!
“தேன் தமிழே! திருவிழாக் கூட்டம்! தீவட்டி வெளிச்சத்தில் உன் செந்தாமரை முகம் பொன்மெருகேறிக் காணப்பட்டதை, இதயத்தால் சுவைத்துக் கொண்டேயிருந்தேன். அந்த நேரம் அப்படியொரு சூறாவளிக் காற்று எங்கிருந்துதான் வந்ததோ; தெரியவில்லை! அதுவும் நமக்கு நன்மையே செய்தது. தெருவில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த எல்லாத் தீவட்டிகளும் அந்தச் சூறாவளியில் அணைந்துவிட்டன! ஒரே இருள்! திருவிழாவுக்கு வந்த யானை கட்டறுத்துக் கொண்டு ஓடியது. மக்கள் அச்சத்தால் அலறிக்கொண்டு அங்குமிங்கும் சிதறிக் கீழேயும் விழுந்தனர். நீ என்ன ஆனாய்? எங்கிருக்கிறாய்? என்று தெரியாமல் இருட்டில் தடுமாறி நடந்துகொண்டிருந்தேன்.
“அப்போது என் கால் விரல்களில் மலர் ஒன்று தட்டுப்படுவது போல் இருந்தது. மலரை மிதித்துவிடக் கூடாதேயென்று அந்த இருளிலும் கீழே குனிந்து மலரை எடுக்க முயற்சி செய்தேன். என் கைவிரல்களை ஒரு மெல்லிய கை அழுத்திப் பிடித்து உடனே விட்டுவிட்டது! அடடா! என்ன சுகம்! என்ன சுகம்! அந்த ஒரு நொடியில்? யாராக இருக்குமோ என்ற பயம் - இருந்தாலும் கீழே விழுந்து கிடக்கும் ஒரு பெண்ணுக்கு உதவி செய்வது தவறில்லையே என்ற நினைப்புடன் உன்னைத் தூக்கினேன். ஆமாம், உன்னைத்தான் தூக்கினேன். அது நீயாகத்தான் இருந்தாய். கண்மணிதானே என்றேன். என் குரலைப் புரிந்து கொண்டு, அந்த இருளில் என்னைத் தழுவிக் கொண்டாய். அச்சம் பறந்துவிட்டது. அனல்மேவிய இரு இணை இதழ்கள் அழுத்தமாகப் பொருந்திக் கொண்டன. தேன் கிண்ணத்தில் ஊறிக் கொண்டிருந்த உன் பலாச்சுளை நாவினை, நான் விழுங்கிவிடவே முயற்சித்துப் பார்த்தேன்.
“அதற்குள் திருவிழா நடத்தியவர்கள், எழெட்டுத் தீவட்டிகளை ஏற்றிக் கொண்டு மக்களுக்கு ஒளி காட்டித் துணை நிற்க வந்துவிட்டனர். நாம் எதுமறியாத சாதுக்கள்போல விலகி நின்றோம். என் உள்ளத்தில் அந்தச் சூறாவளிக் காற்றுக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன். தேன்குடமே! கனவென்று கவலைகொண்டு மடல் தீட்டுகிறேன் உனக்கு! உறக்கமில்லாத போது கனவு எப்படி வரும் எனக் கேட்காதே! அப்படியொரு கற்பனை! அதிலேயொரு இன்பம்!”
மடலை எழுதி முடித்துவிட்டுக் குறளைக் கையில் எடுக்கிறான்.
“கண் நிறைந்த அழகுடையவளும், மூங்கில் போன்ற தோளுடையவளுமான என் காதலிக்குப் பெண்மைத் தன்மை நிறைந்து விளங்கக்கூடிய இயல்பு மிகுதியாக உள்ளது.”
என்றெண்ணியவாறே இன்பத்துப்பாலைப் புரட்டுகிறான். அதற்கும் குறள் தீட்டியிருக்கிறார் வள்ளுவர்!
“கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது”
அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்; பாடல் - 1272
காம்பு = மூங்கில்
நீர்மை = இயல்பு
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்