பொருளடக்கம் 208 / 300
செயற்கை அறிந்த
அச்சுப் பக்கம் 447–448 · ஸ்கேன் 464–465 · அதிகாரம் 64 (அமைச்சு) — குறள் 637
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
ஆதனார் சிற்றரசின் அமைச்சப் பொறுப்பை, கூத்தன் என்பான் ஏற்றுக் கொண்டான். நிருவாகத் திறமையில் அவனுக்குத் தனித் தன்மையுண்டு! அரசன் உறுதியாக நம்பி, அமைச்சப்பணிகளில் எந்தத் தலையிடுமின்றி அந்தப்புரத்திலேயே ஆடிக் களித்துக்கொண்டிருந்தான். கூத்தனுக்குத் தன்னை மக்களிடம் ஒரு பெரும் மேதையென்று காட்டிக் கொள்ளவும் - தும்பை மலரையொத்தத் தூய்மையானான் என்று காட்டிக்கொள்ளவும் - பெரு விருப்பம்!
நாட்டு மக்கள் அவ்வாறு தன்னை நம்ப வேண்டுமென்று, அரசின் சார்பில் பல திட்டங்களை வெளியிட்டான். அவற்றை நிறைவேற்றிடும் எண்ணம் அவனுக்குத் தொடர்ந்து இருந்திடவில்லை. எனவே திட்டங்கள் வாயளவில் வடிவெடுத்து செயலளவில் வாடிக்கிடந்தன.
மதுவருந்தும் கொடிய பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கப் போகிறேன் என்று அமைச்சன் கூத்தன் திடுமென ஓர் அறிவிப்பை விடுத்தான். அந்த அறிவிப்பு கடுமையான ஆணையாகப் பிறப்பிக்கப்பட்டது.
அந்த ஆணையில் அரசனின் உத்திரவு முத்திரை இடப்படவேண்டும். அரசனோ மதுவருந்தி மதிமயங்கி மங்கையர் மடியை மஞ்சமாக்கிக்கொண்டு கிடந்தான். அதனால் அந்த ஆணையில் அவனது ஒப்புதல் முத்திரையைப் பெறுவது கூத்தனுக்கு எளிதாகவே இருந்தது.
ஆணை பற்றிய விளக்கங்கள் ஆதனார் முழுவதும் அறிவிக்கப்பட்டன. அமைச்சன் கூத்தனை அணுகி அவ்வூர்ப் பெரியோர் பலர் முறையீடு செய்து கொண்டனர். “மதுப்பழக்கம் தீமை தரக்கூடியதுதான்! நாங்கள் மறுக்கவில்லை. எனினும் இவ்வளவு கடுமையாகச் சட்டங்களைத் தீட்டி, மக்களைத் தண்டிப்பது தகாது!” என்றனர்.
அவர்களின் முறையீட்டைக் கேட்ட கூத்தன், மேலும் தன்னைப் புனிதனைப் போலக் காட்டிக்கொள்ளச் சீற்றத்துடன் பேசினான்:
“பெரியவர்களே! உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? அரசின் ஆணையை மீறுகிறவர்களை நாடு கடத்தக்கூடச் சட்டம் இருக்கிறதல்லவா? இதோ இந்தச் சட்டநூல் என்ன கூறுகிறது; படியுங்கள்”
என முழங்கினான். பெரியவர்கள் மெளனமாக நின்றனர்.
“நீங்கள் என்னை அணுகி இந்தச் சட்டத்தைக் கொடிது என்று கூறுகிற காரணத்திற்காகவே, இதனை மேலும் கடுமையாக்குகிறேன். இனிமேல் எனது ஆணையை மீறி மதுவருந்துகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்” என்று கூத்தன் கூச்சல் போட்டுவிட்டு, அவ்வாறே ஆணை பிறப்பித்தான்.
ஆணையை மீறிக் குடித்தவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்! ஆணையின் வேகம் அடங்கவில்லை. வெகு விரைவில் ஆதனார் மக்கள் தொகையில் முக்கால் பகுதி குறைந்துவிட்டது. கால் பகுதி மக்கள் தொகையே மிஞ்சி நின்றது.
நாடு கடத்தப்படும் ஆணை, தங்களுக்கு நலம் பயக்கும் ஆணையென்று கூறிக்கொண்டு பெரும்பாலான மக்கள் அடுத்த நாடு சென்றுவிட்டனர். ஆதனார் அரசின் செலவிலேயே அவர்கள் பக்கத்து நாடுகளில் கொண்டுபோய் விடப்பட்டனர். அந்த நாடுகளில், மதுவருந்துகிறவர்களைத் திருத்திடும் முயற்சிகள் உண்டே தவிர நாடு கடத்தும் சட்டங்கள் இல்லை.
ஆதனாரில் விவசாயப் பணிகள், ஊரைச் சீர்படுத்தும் பணிகள், எந்தப் பணியையும் நிறைவேற்ற ஆட்களே இல்லை! ஆதனார் வளமின்றித் தவித்து வறுமையில் ஆழ்ந்தது!
காரணத்தைப் புரிந்துகொண்ட கூத்தன், அவன் பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக அறிவித்தான். அதுமட்டுமல்ல; ஆதனார் மக்கள் அனைவருக்கும் அரண்மனையிலேயே மதுபானக் கடை திறக்கப்படும் என்றும் முரசறையச் செய்தான்.
அவனது அறியாமையை எள்ளி நகையாடாதார் எவருமே இல்லை.
“நூலில் சொல்லப்படுபவைகளைத் தெரிந்து கொண்டிருந்தாலுங்கூட அவற்றை நடைமுறைப்படுத்தும்போது உலகத்தின் இயற்கையை உணர்ந்து அதனோடு பொருந்துமாறு செயல்படவேண்டும்.”
என்ற குறளின் கருத்தை அமைச்சன் கூத்தன் இப்போதாவது உணர்கிறானா என்று, அந்த ஊர்ப் பெரியவர்கள், கொலுமண்டபத்திலேயே கேலிச் சிரிப்புடன் கேட்டனர். கூத்தனோ, கொலு மண்டபத்திற்கே வராமல் இருந்து விட்டான்.
“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்”
அதிகாரம் - 64 - அமைச்சு; பாடல் - 637
(செயற்கை = நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை)
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்