பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 207 / 300

முயங்கிய கைகளை

அச்சுப் பக்கம் 445446 · ஸ்கேன் 462463 · அதிகாரம் 124 (உறுப்புநலன் அழிதல்) — குறள் 1238

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காதலன் பிரிந்து சென்றால் காதலியின் உடல் பசலை படர்ந்துவிடுமாம். தோள்கள் மெலிந்துவிடுமாம். வளையல்கள் கழன்று விழுந்துவிடுமாம். காதலனின் பிரிவு, இவ்வளவு கடுமையான துன்பங்களைக் காதலிக்குத் தந்து வாட்டிவிடும் என்கிறார் வள்ளுவர்! சரி, பிரிவின் கொடுமையை விவரிப்பதற்குக் குறளில் இப்படியெல்லாம் தமிழ், கொஞ்சிக் கூத்திடுகிறது; ஒப்புக் கொள்வோம் - இதோ இன்னொரு அதிசயத்தையுமல்லவோ அவர் நிகழ்ச்சியாக்கி அதனைக் காட்சியாக்கி நம்முன்னே காட்டுகிறார்!

காதலன் அருகேயிருக்கும்போது காரிகையொருத்திக்குப் பசலை படர்ந்து விடுகிறதாமே! அது எப்படி? ஏன்?

கதவைத் தாளிட்டான்! கட்டிலில் அமர்ந்தான்! கனிவகைகளை உண்டான்! பாலை மட்டும் பிறகு அருந்தலாமென்று அவன் கண்ணாடை காட்டிட, சூடு ஆறாத பாத்திரத்தில் அதை மூடியபடி வைத்தாள். எரிந்து கொண்டிருந்த பெரிய விளக்கிற்கு ஒய்வு வழங்கிவிட்டு, சிறியதோர் அகல் விளக்கை மட்டும் ஒளியுதவிடுமாறு பணித்தாள். அவன் மடியில் அவளும் - அவள் மடியில் அவனுமாக மாறி மாறிச் சாய்ந்தனர். சொற்கள் கோக்கப்படாத இசை இருவரிடையே எழுந்திட, இதழ்களோ எண்ணப்படாத முத்தங்களைத் தாள ஓசைகளாக ஆக்கிக்கொண்டிருந்தன. காலை முதல் மேனியை அழகு படுத்திக்கொண்டிருந்த ஆடைகளுக்கு நன்றி தெரிவிக்காமல் அவற்றை இப்படியா தூக்கி எறிவது? ஒருவேளை அவைகள், உடல்களை இறுக்கின என்ற கோபம் போலும்! அழகுக் கோலத்தை மிகைப்படுத்திக்கொண்டிருந்த ஆடைகளும் அணிகளும், தாங்கள் ஒரேயடியாகப் புறக்கணிக்கப்பட்டதை எண்ணி வருந்தி அந்த அறையின் மூலைகளில் சிதறிச் சுருண்டு கிடந்தன.

அகல் விளக்கின் சுடர் இனிய தென்றலில் ஆடிக்கொண்டிருந்தது! அவர்கள் உடல்களும்தான்!

“நம் இருவர் உடல்களையும் ஒரே உடலாகப் படைத்திருந்தால் எப்படியிருக்கு மத்தான்! அப்படியே பிரியாமல் ஒட்டிக்கொண்டேயிருக்கலாம்; இல்லையா?”

இது அவளது கேள்வி!

“நாம் எப்படிப் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைத்தான் - நம்மைப் படைத்ததாக ஒருவனிருந்தால் - அவனுக்கு இப்போது காட்டிக் கொண்டிருக்கிறோம்.”

அவன் பதில் அளித்தவாறு மேலும் அழுத்தமாகத் தழுவிக்கொண்டான்.

வெட்கத்தால் முகம் சிவந்துபோன அகல்விளக்கின் அழகிய சுடர், எந்த வழியாகவாவது வெளியே ஓடிவிடலாமா என்று சுற்றிச் சுழன்று முட்டி மோதிப் பார்த்தது; முடியவில்லை. கட்டிலின் காட்சியை வேறு வழியின்றி அந்தச் சிறிய விளக்குக் கண்டு களித்துக்கொண்டிருந்தது.

அவள் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உதடுகளால் வருடினான். அவளோ அவனது உள்ளங்காலில் பதித்த இதழ்களைப் பறிக்காமலே, அவனது உச்சந்தலை வரையிலே இன்பத்தைப் பொழிந்து பதிலுக்கு இன்பத்தைப் பெற்றுக் கொண்டாள். வட்டியும் முதலும் உடனுக்குடன் அட்டியின்றிக் கொடுக்கப்படும் இடம் கட்டிலறைதானே! மொய் எழுதினால் பதிலுக்கு ஒன்றுக்கு மூன்றாக மொய் எழுதப்படும் இடமும் அதுதானே!

“தழுவினாள்; தழுவினாள்!” என்றில்லாமல் தழுவினாள்! தழுவினாள்! தழுவியே கிடந்தாள்!

இப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது! ஆம் - அவள் எழிலுறு நெற்றியில் பசலை நிறம் படர்ந்துவிட்டது!

அமுதத்தால் நனைத்தும் - அமுத கலசங்களால் அணைத்தும் - பிணைந்து கிடந்தவிடையே உருவாகிய பிணக்குத்தான் என்னே!

பிறகு ஏன், அவளது நெற்றியில் பசலை நிறம் படரத் தொடங்கியது?

பிரிவில் வந்து தலை நீட்டும் அந்தப் பிணி, கூடிக் கிடக்கும் காதலர்களில் அடியெடுத்து வைப்பானேன்?

ஓ! ஓ! இப்போது காரணம் மிக எளிதாகப் புரிந்துவிட்டது!

என்ன காரணம்?

“காதலன் காதலியைத் தழுவிக்கொண்டிருந்த கரங்களைச் சற்றுத் தளர்த்தி விடுகிறானாம்! அந்தச் சிறு பிரிவைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் பசிய வண்ணையல் களை அணிந்த அந்தப் பாவையின் நெற்றியில் பசலை நிறம் ஓடிவந்து பாய்ந்து விடுகிறதாம்!”

இதோ - அந்தக் குறள்.

“முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்”

அதிகாரம் - 124 - உறுப்புநலன் அழிதல்; பாடல் - 1238

முயங்கிய = தழுவிய

ஊக்க = தளர்த்திட

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்