பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 206 / 300

ஏமுற்றவரினும்

அச்சுப் பக்கம் 442444 · ஸ்கேன் 459461 · அதிகாரம் 88 (பகைத்திறம் தெரிதல்) — குறள் 873

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மாங்காடு ஓர் அழகிய சிற்றூர். அங்கே மருத்துவரைத் தெரியாதவர் யாருமிலர். பெரிய குடும்பத்தில் பிறந்தவன். செல்வச் செழிப்பின் காரணமாகவே அவனை அந்த ஊரார் ஏற்றிப் போற்றி மதித்து நடந்து வந்தனர். அறிவுத் திறன் பெற்றவன் என்று அவனை யாரும் புகழத் தயாராக இல்லை. அவனிடம் பரிசில் பெற விரும்பிக் கையேந்தி நின்ற சில புலவர்கள் மட்டுமே அவனது அறிவைக் கடலுக்கு ஒப்பிட்டும் - திறமையை வானுக்கு ஒப்பிட்டும் கவிதைகளைப் பாடித் திரிந்தனர்.

எதுவும் தெரியாதவன்கூட ஏற்றம் பெற்றுவிட்டால் எல்லாம் தெரிந்தவனைப் போல நடிக்கும் இந்த உலகில், ஏதோ ஒன்றிரண்டு தெரிந்த மருத்துவர், தன்னை எல்லாம் தெரிந்த அறிவுச் சுரங்கம் என எண்ணிக்கொண்டு பீடுநடை போட்டதில் வியப்பில்லை.

மாங்காட்டில் பொங்கல்விழா நடைபெற்றது. அதனையொட்டிக் காளைகளை அடக்க, கட்டிளங்காளைகள் முன் வந்தனர்.

அவர்களில் வெற்றிபெற்ற அறுவருக்கு அந்த ஊரார் சார்பில் பொற்கிழி அளிக்கும் நிகழ்ச்சி. மருத்துவரின் கரங்களால் அவற்றை வழங்க வேண்டுமென ஊரார் விரும்பினர். மருத்துவர், அந்த வீர இளைஞர்களைப் பாராட்டுவதற்குப் பதில் இகழ்ந்துரைத்தான். “மாடுகளோடு போரிட்டுப் பயிற்சி செய்வது பெரியவீரமோ? முரட்டுத்தனத்திற்கும்

முட்டாள்தனத்திற்கும் பெயர் வீரமென்று எவன் சொன்னான்? சரி! சரி! ஏதோ பரிசுக்காக உயிரைப் பணயம் வைத்துப் பிழைக்கிறீர்கள்; போய்த் தொலையுங்கள்!” என்று கூறிக்கொண்டே அவர்களுக்குப் பொற்கிழியை வழங்கினான். பரிசு பெற்ற இளைஞர்கள், மருத்துவரை மனத்துக்குள் திட்டிக்கொண்டு சென்றனர்.

திருமண நிகழ்ச்சியொன்று! அதைத் தொடர்ந்து அந்த இல்லத்தில் நடந்த ஏற்பாடு. ஆடிய பெண்ணை வாழ்த்துமாறு மருத்துவரை அழைத்தனர். முறையாக நாட்டியம் கற்றவள் அவள். நாட்டிய இலக்கணம் பற்றிச் சிறிதும் அறியாத மருத்துவர், அவள் ஆட்டத்தில் குறையிருப்பதாகக் கூறினான். அந்தப் பெண், அவனது வார்த்துரை முடியும் முன்பே அரங்கத்தைவிட்டுக் கோபமாக வெளியேறினாள்.

தங்களுக்குக் கல்வி கற்பித்து ஆளாக்கிய ஆசிரியப் பெருமகனார்க்கு நன்றி சொல்லும் விழாவொன்றினை, மாங்காட்டு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாத்தலைவராக மருத்துவர்தான் அழைக்கப்பட்டிருந்தான்.

ஆசிரியரைப் பாராட்டுவதற்குப் பதில், அவர் இன்னும் என்னென்ன கற்றிட வேண்டுமென, அவருக்கு அறிவுரை வழங்கினான். வெறுப்புற்ற மாணவர்கள் மருத்துவரைக் கேலி செய்து வெளியேறினர்.

ஊரில் கொலை களவு போன்ற தீய செயல்கள் பெருகிவிட்டன என்பதறிந்து அதனைத் தடுத்திடப் படைவீரர்களைப் பாதுகாப்புக்காக அரசினர் அனுப்பி வைத்தனர்.

“மாங்காட்டில் மருத்துவரை மீறி, களவும் கொலையும் நடந்துவிடுமா? என்னை விட்டுப் பலம் வாய்ந்ததோ இந்தக் காவல்படை?” என எகடியம் செய்தான் மருத்துவர்.

காவல் படையினர், மாங்காட்டிலிருந்து அடுத்த ஊருக்குச் சென்று விட்டனர்; மருத்துவருக்கு அறிவு புகட்ட வேண்டுமென்ற ஆசையுடன்!

ஒரு நாள் இரவு, மருத்துவர் இல்லத்தில் கொள்ளைக்காரர் நுழைந்தனர். கொடுவாட்களைச் சுழற்றி அவனைப் பயமுறுத்தினர். மருத்துவர் குடும்பத்தார் சிதறியோடினர். மருத்துவரும் அந்த நள்ளிரவில் திக்குத் தெரியாமல் ஓடினான்.

அகல்விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது, ஒரு வீட்டின் முகப்பில்-! அங்கே நுழைந்து “அய்யோ! காப்பாற்றுங்கள்” என அலறினான். அந்த வீட்டுக்குரியவள், அவனால் இழித்துரைக்கப்பட்ட நாட்டியப்பாவை! அவள், அவனுக்கு இடம் தர மறுத்துக் கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.

மருத்துவர் அங்கிருந்து ஓடினான்! ஓடினான்! ஓடிக்கொண்டேயிருந்தான். பொழுதும் விடிந்தது. கூட்டமாக மாணவர்கள் வந்தனர். அவர்களிடம் நின்று “என்னைக் கொள்ளைக்காரர் துரத்துகின்றனர்” என்று கதறினான்; ஏற்கனவே மருத்துவர் மீது வெறுப்புக்கொண்ட மாணவர்கள், அவனைச் சூழ்ந்து நின்று கேலியாகக் கும்மியடிக்கத் தொடங்கினர். அதைத் தாங்கமுடியாமல் மருத்துவர் ஓடினான்.

மிரண்டுபோன காளையொன்று அவனை முட்டித்தள்ளத் துரத்தியது. அப்போது இரு இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்தம் வீரத்தைப் பழித்த மருத்துவர், இப்போது அவர்கள் காலில் விழுந்து “அபயம்” கேட்டான். அந்த இளைஞர்கள் முரட்டுக் காளையை அடக்கி மருத்துவரைக் காப்பாற்றினார்கள் என்றாலும் அவனது ஆணவம் அளவுக்கு அவனை ஏளனம் செய்து அனுப்பினார்கள்.

பித்துப்பிடித்தவனைப்போல ஆகிவிட்ட மருத்துவர், தள்ளாடியவாறு தன் வீடு நோக்கி வந்தான். வீட்டைச் சுற்றிக் காவலர்கள் நின்றனர். படைக் காவலர்களைப் பார்த்ததும் மருத்துவர் “அய்யா! வீரர்களே! என்னை மன்னித்து விடுங்கள்! ‘நான்’ என்ற அகந்தையால் எல்லோரையும் பகைத்துக்கொண்டேன். பெரிய அறிவாளி என்ற நினைப்பில் எல்லோரையும் இகழ்ந்தேன். இப்போதுதான் புரிகிறது; ஒரு பித்தனின் அறிவைவிட என் அறிவு குறைவானது!” எனக் கூறிக் கொண்டே அவர்களைத் தொழுது வணங்கினான்.

படைவீரர்களால் காப்பாற்றப்பட்ட அவனது குடும்பத்தாரும் மருத்துவரைப் பார்த்து, “இனிமேலாவது எல்லோருடைய பகையையும் தேடிக்கொள்ளாதே!” என்று அறிவுரை கூறினர். மருத்துவர் திருந்தினானா என்பதுதான் தெரியவில்லை.

“ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்”

அதிகாரம் - 88 - பகைத்திறம் தெரிதல்; பாடல் - 873

ஏமுற்றவர் - பித்துப்பிடித்தவர்

ஏழை - அறிவற்றவன்

தமியன் - தனித்தவன்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்