பொருளடக்கம் 205 / 300
பயன்தூக்கார் செய்த
அச்சுப் பக்கம் 440–441 · ஸ்கேன் 457–458 · அதிகாரம் 11 (செய்ந்நன்றி யறிதல்) — குறள் 103
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
கரை புரளும் காவிரியாறு, அந்தச் சோலையினூடே வெள்ளி நிலவிலே தனது உடலைக் குறுக்கிக்கொண்டு ஓடியவாறிருந்தது. கரையோரம் கனிகுலுங்கும் மரத்தினடியில் வழக்கமாக அமர்ந்து கற்பனைக் கவிதைகளை நெய்திடும் அந்தக் கவிஞனும் அன்று வரத் தவறவில்லை. ஆற்றுமுகியின் அலைக்கரங்களை, நிலவின் ஒளி விரல்கள் நெருடுகின்ற காட்சியிலே கவிஞன் உள்ளம் பறிகொடுத்திருந்தான். அப்போது சிறியதோர் படகு! அதில் செப்புச்சிலை போல - சிங்காரித்த சின்ன ரதம் போல - ஓர் பேரழகி! அவளோ துடுப்புக் கொண்டு அந்தப் படகை, ஆற்றின் எதிர்க் கரைக்கு ஓட்டிக்கொண்டிருந்தாள்! “இரவு நேரம்! தனியாக ஒருத்தி! எங்கே போவாள்?” இந்தக் கேள்வி இளங்கவிஞனைத் தாக்கிற்று! கற்பனையை விடுத்து, கன்னி இளமானின் படகையே பார்த்துக் கொண்டிருந்தான்.
எதிர்க்கரையை நெருங்கிக் கொண்டிருந்த படகிலிருந்து ஒரு கூக்குரல்! “அய்யோ!” அந்த ஓலியைத் தொடர்ந்து அடுத்த ஓலி கிளம்பவில்லை. கவிஞன் திடுக்கிட்டு எழுந்தான். நிலவொளியில் நன்றாகவே தெரிந்தது; அந்தப் படகு கவிழ்ந்து போய்விட்டது.
இளங் கவிஞன் ஆற்றில் குதித்தான்; கவிழ்ந்த படகினை நோக்கி விரைந்து நீச்சலடித்தான்! அந்த அழகியைத் தொட்டுத் தூக்கிக்கொண்டு சென்று எதிர்க் கரையில் கிடத்தினான்; அவளுக்குத் தரவேண்டிய சிகிச்சைகளைத் தயக்கமின்றித் தந்து ‘உயிர் பிழைத்தாள்’ என்று உவகையுற்று நின்றான். அவள் களைப்பில் அயர்ந்து
படுத்திருந்தாள். நீரில் நனைந்த உடை! அவள் உடலோடு ஒட்டி, அந்த வெண்ணிலவின் வெளிச்சத்தில் அவளது கவர்ச்சியைப் பெருக்கிக்கொண்டிருந்தது!
சிறிது நேரத்தில் கண் விழித்தாள்! அவனையே உற்றுப்பார்த்தாள்!
“நீங்களா என்னைக் காப்பாற்றினீர்கள்?”
“ஆமாம்! அதிருக்கட்டும்; இந்த இருட்டில் தனியாக ஒரு படகில்... எவ்வளவு துணிவு உனக்கு!”
“இந்தக் கரையை அடுத்த சிற்றூரில் என் காதலர் இருக்கிறார்! அவரைக் காணக்கூடாதென்று கட்டுக்காவல் எனக்கு! அவர் உடல் நலமின்றியிருக்கிறார் எனச் செய்தி கேட்டேன்! அதனால் காணப் புறப்பட்டேன்!”
அந்த அழகி தனது காதலனைக் காணப் போகிறாள் என அறிந்ததும்; கவிஞன் அவளை நோக்கிக் கூறினான், பரிவுடன் சில வார்த்தைகள்:
“அன்புத் தங்கையே! நீயும் உன் காதலனும் வாழ்க! வாழ்க! உங்கள் இதயக் காதல் வெல்க!”
அந்த வாழ்த்துக் கேட்டு அவள் நெகிழ்ந்துவிட்டாள்! ‘ஆபத்திலிருந்து காப்பாற்றினேன்; ஆரணங்கே! அருகில் வா’ என்றெல்லாம் புதிய ஆபத்துக்குத் தொடக்க விழா நடத்தாமல், அண்ணனாக நின்று, தன்னைத் தங்கையாக ஏற்றுக் கொண்டவனின் கால் தொட்டு வணங்கினாள்.
“என்ன பலன் கிடைக்குமென்று கணக்கிட்டுப் பாராமல் உதவி புரிகிற ஒருவனின் அன்புடைமையைக் கணக்கிட்டுப் பார்த்தால் அது கடலைவிடப் பெரியதாகும்.”
இந்தக் குறளின் பொருள், இருவர் உள்ளத்திலும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது”
அதிகாரம் - 11 - செய்ந்நன்றி யறிதல்; பாடல் - 103
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்