பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 204 / 300

மயிர்நீப்பின் வாழா

அச்சுப் பக்கம் 438439 · ஸ்கேன் 455456 · அதிகாரம் 97 (மானம்) — குறள் 969

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அரசவையில் அவன் விகடகவி! அவனது நகைச்சுவையைப் பெரிதும் வியந்து போற்றுவர், தலைநகரில் உள்ளவர்கள்! கொலுமண்டபத்தில் அவன் உதிர்க்கும் நகைச்சுவைகளை அரசரும் அமைச்சர்களும் அரண்மனைவாசிகளும் நல்ல பொழுதுபோக்காகக் கருதுவார்கள்.

பொருள் பொதிந்த விகடங்களும் உண்டு! பொருளற்றதும் கேலிக்குரியதுமான விகடங்களும் உண்டு! அவன் ஆற்றலைப் புலப்படுத்தும் விகடங்களுக்கு அரசர் பரிசளித்து மகிழ்வார். சில நேரங்களில் விகடகவியின் பொருளற்ற விகடங்களை அரசர் சுட்டிக்காட்டி, அவற்றை அலட்சியப்படுத்திவிட்டுப் போய் விடுவார்.

ஒரு நாள் கட்டுடல் வாய்ந்த காளையொருவன், மன்னன் முன் வந்து நின்று, தனக்கு நிகராக வாட்போர் புரியும் திறன் படைத்தோர் யாரேனும் இருப்பின், அவருடன் போரிடத் தயாராக இருப்பதாகத் தோள் தட்டினான்.

அந்த வீரனை எதிர்ப்பதற்கு அறைகூவல் விடுத்து அந்நாட்டுத் தளபதி வாய் திறப்பதற்கு முன்பு, விகடகவி அந்த வீரனை நோக்கித் தனது மீசையை முறுக்கித்தான் தயாராக இருப்பதாகச் சொல்லிவிட்டான்.

மன்னர் விகடகவியை எச்சரித்து, “இது உனக்குத் தேவையில்லாத வேலை!” என்றார்.

விகடகவியோ பின் வாங்குவதாக இல்லை. “அரசே! இது என் மானப் பிரச்சினை! இனி நான் விடுத்த அறைகூவலைத் திரும்பப் பெற முடியாது! மோதிப் பார்த்துவிடுகிறேன்” என்று புறப்பட்டான்.

கொலுமண்டபத்தில் வாட்போர் தொடங்கிற்று. வீரனின் வாள்வீச்சு மின்னலையும் மிஞ்சி நின்றது. விகடகவி, வாளைக் கீழே போட்டுவிட்டு எந்தப் பக்கம் ஓடலாமென்று திருதிருவென விழித்தான். அவையோர் கைகொட்டி நகைத்தனர்.

அரசர், விகடகவியைப் பார்த்துக் கேட்டார்:

“மானப் பிரச்சினையென்று கூறினாயே! இப்போது என்ன செய்யப் போகிறாய்?

‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்’

என்ற குறளுக்கு உனக்குப் பொருள் தெரியுமா?

தன் உடலில் உள்ள மயிர் நீங்கினால் கவரிமான் உயிர் வாழாதாம்! அதுபோல மானம் அழிய நேர்ந்தால் கவரிமானைப்போல உயிரை விட்டு விடுவார்கள் மானமுள்ளவர்கள்! இப்படி வள்ளுவர் கூறியிருக்கிறார். உன் முடிவு என்ன?”

இந்தக் கேள்வியை அரசர், குறும்புச் சிரிப்புடன் கேட்டதும் விகடகவி, “அரசே! இதோ பாருங்கள்!” என்று கூறிவிட்டு கொலுமண்டபத்தை விட்டு ஓடினான். அனைவரும் திகைத்தனர். சிறிது நேரத்தில் விகடகவி மொட்டைத் தலையுடன் அரசவைக்குத் திரும்பினான். எல்லோரும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தனர்.

“அரசே! நான் திருக்குறளில் ஓர் எழுத்தை மாற்றிவிட்டேன். மாற்றியதற்கு ஏற்ப என் மானப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டேன்” என்றான் விகடகவி! அவன் மாற்றிய குறளையும் பாடிக் காட்டினான்.

“உயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் மயிர்நீப்பர் மானம் வரின்”

விகடகவியின் திருத்தப்பட்ட இந்தத் திருக்குறளைக் கேட்டு, வாட்போர் வல்லான் உட்பட அனைவரும் கைகொட்டிச் சிரித்தனர்.

“இப்படியொரு விகடகவி இருப்பது இந்த நாட்டு மக்களுக்கே நல்ல பொழுதுபோக்கு” என்று அரசர் கூறியதுடன், அவனது மொட்டைத் தலையை மறைக்க ஒரு பட்டுத் தலைப்பாகையையும் பரிசாக வழங்கினார்.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்”

அதிகாரம் - 97 - மானம்; பாடல் - 969

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்