பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 203 / 300

அ. கண்ணுள்ளார் காத / ஆ. இமைப்பின் கரப்பாக்கு

அச்சுப் பக்கம் 435437 · ஸ்கேன் 453454 · அதிகாரம் 113 (காதற் சிறப்புரைத்தல்) — குறள் 1127, 1129

அச்சிட்ட பொருளடக்கம் இப்பகுதியை அச்சுப் பக்கம் 435-இல் குறிக்கிறது; அப்பக்கம் முந்தைய பகுதியை நிறைவு செய்கிறது. இப்பகுதியின் உரை ஸ்கேன் 453 (அச்சுப் பக்கம் 436)-இல் தொடங்குகிறது.

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

சோலை மலர் மெய் சிலிர்க்க, இன்பத்தென்றல் வந்து இறுகத் தழுவுதல் போல் அவளை அவன் தழுவினான். இளஞ்சூடு பரவிற்று இருவர் உடலிலும்! பலாச்சுளை நாவினால் அவன் ஈறு தடவி, இனிய நகைகாட்டுகின்ற இதழ்களுள்ளே இருக்கின்ற பற்களிலே சுவையேற்றி, தேனருவி வாய்க்குள்ளே பாலருவி கலந்து புத்தம் புதுக் கலவையைக் கண்டேன் என்று அவன் கூறி, முத்தம் பல நூறு பொழிந்திட்டான்! “மானே! மயிலே! தேனே! அமுதே! அழகுக்கு அழகு செய்வதால் குற்றம் என்ன? சேல் கெண்டைபோல் துள்ளுகின்ற விழியோரம் மை எழுதிக் கொண்டால் இன்னும் சிறப்புச் சேருமே, என் சிற்றிடைச் செல்வமே!” எனக் கேட்டுப் பதிலை எதிர்பார்த்துத் தலையை அவள் கழுத்தோரம் பதித்திருந்தான். அவளோ தாமரைக் கரங்களால், அவன் தலை நிமிர்த்தித் தன் இதழ் அருகே அவன் இதழை வைத்துக் கொண்டு வீணையாக அதிர்ந்தாள், விடை பகரும் ஆவலுடன்!

“அத்தான்! மை எழுதத் தெரியாது இந்த மங்கைக்கு என எண்ணிவிட்டீர்! மை எழுதும்போது என் கண்ணுக்குள் இருக்கின்ற உம்மை என் விரல் நுனிதான் மறைத்திடுமோ - அன்றி இமை அசைத்து உமக்கு முன்னே திரைபோல நின்றிடுமோ - என அஞ்சித்தான் கண்ணாடியின்முன் நின்று என் கண்களிலே உம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்! உமது அசைவுகள் ஒவ்வொன்றும் என் விழிகளுக்கு முக்கனியின் விருந்து அத்தான், விருந்து!”

நீள் விழியாள் பதில் கேட்டு, வாள்வீரன் நிலைகுலைந்தான். தோள்மீது போட்டுக் கொண்டாள் தோகை முகம் காணல் இயலாதென்று, தொடைமீது அவளைச் சாய்த்துக் கொண்டான். அவளோ இமை கொட்டாமல் அவனையே விழுங்கிக் கொண்டிருந்தாள்.

“என்னடி கண்ணாட்டி! இமைக்காமல் பார்க்கின்றாய்! மேல்வழியில் வாழ்கின்ற தேவர்களே கண் இமைத்திடார் எனக் கதையளப்பார்! அக்கதையை நீ மெய்யாக்குகின்றனையோ?”

எனக் கேட்டான்! அவள் சொன்னாள்:

“என் அழகத்தான்! அன்பு அத்தான்! மை எழுதினால் கண்ணில் இருக்கும் நீர் மறைவீர் என்று எழுதவில்லை! இப்போது நான் கண் இமைக்கும் நேரங்கூட, நீர் மறைவதை நான் விரும்பவில்லை. அந்தச் சிறுதுளி நேரங்கூட நீர் என்னைப் பிரிந்தால் இந்த ஊரார் உம்மை, என்னிது அன்பில்லாதவர் என்று கூறிடுவர்.”

விளக்கம் தந்தவளின் விழிகள் பெற்ற முத்தங்களுக்கு கணக்கே இல்லை! தந்தவனுக்கு அந்தத் தந்தச்சிலை திருப்பித் தந்ததற்கும் அளவே இல்லை! இருவரிடை எழுந்த உணர்ச்சிப் பெருக்கிற்கு ஓர் எல்லையும் இல்லை!

“கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து”

“இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர்”

அதிகாரம் - 113 - காதற் சிறப்புரைத்தல்; பாடல்கள் - 1127, 1129

கரப்பாக்கு = மறைத்தல்

ஏதிலர் = அன்பில்லாதவர்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்