பொருளடக்கம் 202 / 300
ஈன்ற பொழுதின்
அச்சுப் பக்கம் 433–435 · ஸ்கேன் 450–452 · அதிகாரம் 7 (மக்கட்பேறு) — குறள் 69
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“நல்லம்மா! நல்லம்மா!” என்று மகிழ்ச்சிபொங்கிட அழைத்தவாறு அந்த ஊர்ப் பெரியவர் உலகநாதன், வீட்டுக்குள் நுழைந்தார். நரைத்த முடியும் நடுங்கும் உடலும் என்றாலும் உலகநாதனின் குரலில் மட்டும் வலிமை குன்றிடவில்லை. “என்னய்யா! இவ்வளவு பூரிப்பு?” என்று நல்லம்மாள், மரியாதையுடன் எழுந்து உட்கார்ந்து கொண்டாள்; கூடத்தில் விரித்திருந்த சற்றே கிழிந்த பட்டுப்பாயின் மீதுதான் அவள் படுத்திருந்தாள். காய்ச்சல், இருமல், உடலெங்கும் வலி - நோயின் தொல்லையால், அவள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அந்தத் துன்பத்துக்கிடையேயும் பெரியவருக்கு மரியாதை காட்ட வேண்டுமென்ற பண்பு, அவளிடத்தில் இருந்தது.
“நீ எழுந்திருக்காதே! நோயாளி! சும்மா படுத்துக் கொள்!”
பெரியவர் அருகே அமர்ந்தார்.
நல்லம்மாளின் நோய்க்குக் காரணமில்லாமற் போகவில்லை.
ஒரு திங்களுக்கு முன்புதான் அவளது முப்பது வயது மகனை, அவள் சாவின் வாயிலே அள்ளிக் கொடுக்க நேர்ந்தது. ஒரே மகன், அவனைத் தவிர அவளுக்கு யாரும் ஆதரவில்லை. அவளைக் கைம்பெண்ணாக்கிவிட்டு அவள் கணவன் பிரிந்து ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. இப்போது மகனும் தந்தையைத் தொடர்ந்து சென்று, தாயைத் தனியாக ஆக்கிவிட்டான்.
நல்லம்மாளின் மகன் கட்டிளங்காளை! அவன் இறந்துபோனது மட்டுமல்ல; அவன்மீது ஒரு பழியும் வந்து சேர்ந்தது.
வண்டியோட்டுவது அவன் தொழில். ஒரு நாள் கணவன் மனைவி இருவர் அவன் வண்டியிலேறி வேற்றூர் சென்றனர். இரவு நேரம்! மலைப்பாதை! தொலைவில் விலங்கினங்கள் உறுமும் ஒலிகூடக் கேட்டது! வண்டிக்குள் இருப்பவர்களோ செல்வந்தர் வீட்டுக்குரியவர்கள்; இளமை ததும்பும் வயதினர்; ஏராளமான நகைகளை அந்தப் பெண் சுமந்து கொண்டிருக்கிறாள்.
இரண்டு நாள் கழித்துச் செய்தி வந்தது: ‘நல்லம்மாளின் மகன், தன் வண்டியில் வந்த கணவன் மனைவியைக் காட்டுப் பாதையில் மிரட்டி, ஆடவனைக் கொன்றுவிட்டு, அந்தப் பெண்ணின் கற்பையும் சூறையாடிவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டான். அந்தப் பெண்ணும் கொல்லப்பட்டு விட்டாள். இருவரைக் கொலை செய்துவிட்டு ஓடிய நல்லம்மாளின் மகனும் திருடிச்சென்ற நகைகளுடன் மலைப்பாதையில் கண் தெரியாமல் வழுக்கிக் கீழே உருண்டு செத்துவிட்டான். நகைகளைக் காவலர் மீட்டுவிட்டனர்’ இந்தச் செய்தியைக் கேட்டு அலறி விழுந்தவள்தான் அந்த அன்னை! பிறகு நோய் அவளைப் பிடித்துக் கொண்டது.
மகன் மறைந்ததுமட்டுமல்ல; தீயவன் என்ற பெயரையல்லவா சூட்டிக் கொண்டு மறைந்துவிட்டான். இதற்காகவா அவனை வலியையும் வேதனையையும் தாங்கிப் பெற்றேன், வளர்த்தேன் என்று நல்லம்மா புலம்பிக் கொண்டேயிருந்தாள்.
உலகநாதன், நல்லம்மாளிடம் சொன்னார்: “அம்மா! நடந்த கதையே வேறாக இருக்கிறது. உன் மகன், வண்டியில் அவர்களை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையில் செல்லும்போது ஒரு கொள்ளைக்கூட்டம் வழிமறித்துவிட்டதாம். உடனே உன் மகன் கீழே குதித்து, அந்தக் கயவர் கூட்டத்தை எதிர்த்திருக்கிறான். அவனை அந்தக் கூட்டத்தினர் சுற்றி வளைத்து வண்டிச் சக்கரத்திலேயே கட்டிப் போட்டு விட்டனர். பிறகு கணவன் மனைவியைக் கைப்பற்றினர். கணவன் கொலையுண்டான். அந்தப் பெண்ணைக் கற்பழித்தே கொன்று விட்டனர். அவள் அணிந்திருந்த நகைகளை மூட்டையாகக் கட்டி அந்தக் கூட்டத்தாரில் ஒருவன் தூக்கிச் செல்ல முனைந்தபோது, வண்டிச் சக்கரத்திலிருந்து தன்னை மீட்டுக் கொண்ட உன் மகன், ஒரேபாய்ச்சலில் அந்த நகை மூட்டையைப் பிடுங்கிக் கொண்டு ஊரை நோக்கி ஓடிவந்திருக்கிறான். கொள்ளைக் கூட்டம் அவனை அந்த இருட்டில் துரத்தியிருக்கிறது. வழி தெரியாமல் தடுமாறி உன் மகன் மலையிலிருந்து உருண்டிருக்கிறான்.”
நல்லம்மாள், விழிகளை அகலத் திறந்து பெரியவரைப் பார்த்தாள்.
“இவ்வளவும் உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“அந்தக் கொள்ளைக் கூட்டம் பிடிபட்டு விட்டது. அந்தக் கூட்டத்தார், காவலர்களிடம் தெரிவித்த உண்மை இது! ‘என்னை நம்பி என் வண்டியில் வந்தவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், அவர்களின் உடைமையைக்
காப்பாற்றியாவது அவர்களின் வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்கிறேன். என்னைத் தடுக்காதீர்கள்’ என்று கூறிவிட்டுத்தான் உன் மகன் அந்த நகை மூட்டையுடன் ஓடிவந்திருக்கிறான்.”
நல்லம்மாளின் கண்களில் புதிய ஒளி! அவள் இதழ்களில் பரவசம்! முகத்தில் ஒரு மலர்ச்சி!
“பெரியவரே! அவனைப் பெற்றபொழுது நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேனோ! அதைவிட அதிகமான மகிழ்ச்சியை அவன் சான்றோன்தான் எனக் கேட்டபோது அடைகிறேன்.” என்றாள்! நல்லம்மாள் அந்த மகிழ்ச்சிப் பெருக்கு உடலையே பாய்ந்து சுருண்டு படுத்தாள். பெரியவர், அவள் உடலைத் தொட்டு அசைத்துப் பார்த்தார். அந்த உடல், இனி அசையாத நிலை பெற்றுவிட்டது. அமைதியை அவள் உள்ளத்திற்கு வழங்கக்கூடிய அருமருந்தாக அந்த மகிழ்ச்சிச் செய்தி அவளுக்கு அமைந்தது போலும்!
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”
அதிகாரம் - 7 - மக்கட்பேறு; பாடல் - 69
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்