பொருளடக்கம் 201 / 300
இன்மையின் இன்னாது
அச்சுப் பக்கம் 431–432 · ஸ்கேன் 448–449 · அதிகாரம் 56 (கொடுங்கோன்மை) — குறள் 558
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“அழகு மிளிர் குழந்தைகள் இரண்டை அளவோடு பெற்றிருக்கிறீர்; குவிந்து மேடிட்டுக் கிடக்கிறது செல்வம், எனச் சொல்ல முடியாவிட்டாலும் குறைவின்றி வளங்கொண்டு வாழ்கிறீர்! கண்ணுக்கு எட்டிய வரையில் உள்ள கழனிகளுக்குச் சொந்தக்காரர் என்ற நிலையில்லாவிடினும் வந்த விருந்தோம்பி, வாழ்வில் இனிமை கண்டு திகழத்தக்க நிலையில், போற்றுதற்குரிய குடும்பத்தின் சொந்தக்காரராக இருக்கின்றீர்! வாய்த்துள்ள மனைவாட்டியோ வாய்ந்தளம் காட்டுகின்ற மங்கையரின் வரிசையில் இடம் பெறாது, இல்லத்துக்கேற்ற எழில் விளக்காக உமக்கு அமைந்துள்ள பாங்கினையும் காண்கிறேன். இத்துணை இருந்தும் உமது முகத்தில் சோகத்தின் சாயல் படர்ந்து கிடப்பானேன்?
“சென்ற தடவை உம்மைச் சந்தித்தபோது சிரித்துச் செழித்த முகத்துடன் காணப்பட்டீர்! இப்போது இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? இனிய குடும்பம்! இன்ப வாழ்வு! இதற்கிடையே உம் உள்ளத்திற்கு வந்துள்ள இடர்தான் என்னே?
இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தார், வெளிநாட்டில் சில ஆண்டுகளைக் கழித்துவிட்டுத் தாய்நாட்டுக்குத் திரும்பிய தனிகைமலை!
தனிகைமலை, தனது ஆருயிர் தோழராகக் கொண்டது அருளப்பரை! அந்த அருளப்பர், கடந்த தடவை அகமும் முகமும் மலரத் தன் தோழர் தனிகைமலை
யுடன் உரையாடினார் - உலவிடச் சென்றார் - உற்றார் உறவினரைக் கூட்டி விருந்தளித்து மகிழ்ந்தார். ஆனால், இந்த முறை அவர் கண்களில் ஒளியில்லை; உரையில் உற்சாகமில்லை. இந்தப் பெரும் மாற்றத்தைக் கண்ட காரணத்தினால்தான் தனிகைமலை, அடுக்கடுக்காகக் கேள்விகளைத் தொடுத்தார். அருளப்பர், மெல்லிய குரலில் விளக்கம் கொடுத்தார்:
“பொருள் இல்லாமல் வறுமையால் வாடுகிற துன்பத்தைவிட, சில நேரங்களில் வளமான நிலைகூட அதிகத் துன்பத்தைத் தருகிறது. அது எப்போது தெரியுமா? முறையின்றி நடைபெறுகிற கொடுங்கோல் ஆட்சியின்கீழே வாழும் போது! இப்படி வள்ளுவர் கூறியிருக்கிறார் அல்லவா? அந்தக் குறள் என்னைப் போன்றவர்களின் இதயக் குரலாக இன்றைக்கு இருக்கிறது.”
அருளப்பரின் இந்த விளக்கத்தைக் கேட்டு, தனிகைமலை சொன்னார்:
“ஆமாம்; முறையற்ற அரசின் கீழ் உள்ள குடிமக்களின் உள்ளத்தை வள்ளுவர் எவ்வளவு அழகாகச் சித்தரித்துள்ளார். மெய்தான் தோழரே! நல்வாழ்வு என்பது இல்வாழ்வுடன் முடிந்து விடுவதல்லவே! ஒரு நல்லரசின் கீழ் அமைகிற வாழ்வுதானே நல்வாழ்வாக இருக்க முடியும்!”
இவ்விரு தோழர்களின் நல்லரசு பற்றிய உரையாடலுக்கு அடிப்படையாக விளங்குகிற குறள் இது:
“இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்”
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை; பாடல் - 558
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்