பொருளடக்கம் 200 / 300
கதுமெனத் தாம்நோக்கி
அச்சுப் பக்கம் 429–430 · ஸ்கேன் 446–447 · அதிகாரம் 118 (கண்விதுப்பழிதல்) — குறள் 1173
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
நீலக் கண்ணாடிக்கு முன் நின்றுகொண்டிருந்தாள், அவள்! நேர்வகிடு எடுத்துச் சீவியிருந்த தலையோ - நெற்றியில் ஒளிவிட்ட குங்குமமோ - குறையொன்றிலாக் குளிர் நிலவின் முகமோ - செம்பருத்திப் பூவின் நிறங்காட்டும் இதழோ - செம்மாதுளைக் கனியிரண்டின் அழகோ - அந்தக் கண்ணாடியில் அவள் கண்களுக்குத் தெரியவில்லை! அதில் அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அவள் கண்கள் மட்டுமே! அந்தக் கண்களின் இமைகளில் முட்டிநின்றன நீர்த்துளிகள்! “அழுகிறாயா?” என்று கேட்டு மெல்ல நகைத்தாள்! அந்தச் சிரிப்பில் வேதனையும் சினமும் மாறி மாறித் தலையூக்கி நின்றன!
விழிகளையே நோக்கிக் கொண்டிருந்த விழிகளில் நுழைந்து, அவள் நினைவை அசைத்தது ஒரு நிகழ்ச்சி! ஆம்; கடந்தகால நிகழ்ச்சி!
காளையை அடக்கிட வந்தனர் சில காளையர்! அவர்தம் கட்டுடலைக் கண்டு மயங்கினர், மொட்டுடல் மங்கையர் சிலர்! அன்று வென்றவர்களில் அவள் அத்தானும் ஒருவன்! நெஞ்சுப் பகுதியில் காளையின் கொம்புக் கீறலுடன் வஞ்சியை நோக்கி வந்தான்! அப்போது அவள் விழிகள், அவனுக்கு ஆலவட்டம் சுழற்றின! மாட்டுக் கொம்பின் காயம் வலிக்குதோ என்று விழிகள் கேட்டன! மான் கொம்பின் ஒத்தடம் குணப்படுத்துமென்று அவன் விழிகள் விடையளித்தன. அதன்பிறகு நடந்தவைகளும் அவள் கண்முன் தெரிந்தன! ஆனால், நீள்விழிகளில் நீர்த்திரை விழுந்து, அந்த உச்சக்காட்சியை உடனே மறைத்துக் கொண்டது.
நேற்றுக் காளையைத் தொட்டுத் தட்டி, வெற்றி மாலைகளைத் தோளில் பெற்று, அன்று அவன் தொலைவில் வரும்போதே, இமைக்கதவை உடைத்துக் கொண்டு, புருவ வாயில்கூட காத்திராமல் பறந்து சென்று, அவன் பரந்த மார்பில் தொத்திக்கொண்ட இந்தக் கண்களுக்குத்தான் அப்போது மட்டும் என்ன அவசரம்!
இன்று அவன், பொழுதெல்லாம் தழுவிக் கிடக்காமல், “போய் வருகிறேன் விரைவில்!” என்று சொல்லிப் போய்விட்டானாம்; அதனால் இப்போது எவ்வளவு ஆத்திரம்!
“நன்றாக அழு கண்ணே; அழு! நீ அழுவது எனக்குக் கேலிக் கூத்தாகத்தான் இருக்கிறது! அன்றைக்கு அப்படி விரைந்தோடி அவரை நோக்கி; என்னை அவருடையவளாக்கினாயே; இன்று அவரைப் பிரிந்து நீ அழுவது வேடிக்கைதான்!”
இப்படித் தன் கண்களைப் பார்த்துக் கேலி செய்கிறாள், கண்ணாடிக்கு முன் நிற்கும் கண்ணாட்டி, கண்ணீர் பெருக்கியபடி!
அதை விளக்குவதே இதோ, இந்தக் குறள்:
“கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து”
அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்; பாடல் - 1173
கதுமென = விரைவாக
கலுழும் = அழும்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்