பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 199 / 300

மனத்துக்கண் மாசிலன்

அச்சுப் பக்கம் 427428 · ஸ்கேன் 444445 · அதிகாரம் 4 (அறன்வலியுறுத்தல்) — குறள் 34

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“குற்றம் புரிந்தனையா இல்லையா?” என்று கொலுமண்டபத்தில் அந்தக் குரல் ஓங்கி ஒலித்தது! அமைச்சர்கள், தளநாயகர்கள், வேலேந்திய வீரர்கள், அனைவரும் புடை சூழ இருந்த அவைக்களத்தில் அவன் வீர முழக்கமிட்டான். கொற்றக்குடை நிழலில் வீற்றிருந்த மன்னனோ, தன் உடைவாளை உருவியவாறு எழுந்தான்! அப்போது அரண்மனைக்கு வெளியே பெரு முழக்கம்! ஆம்; கொலு மண்டபத்தில் குரலெழுப்பியவனுக்கு ஆதரவாக - அரசனுக்கு எதிராக - எழுந்த முழக்கம்! வாளை உருவிய வேந்தன், அசையாமல் நின்றான். மண்டபம் முழுவதும் ஒரே அமைதி.

“மக்களுக்கெனச் சேமித்து வைக்கப்பட்ட உணவு தானியக் களஞ்சியத்தை யாரோ கொள்ளையடித்துச் சூறையாடிக் கொண்டு ஓடிவிட்டார்கள் என்பது சூது! சூழ்ச்சி! மன்னவா! நீயே அந்தக் கொள்ளைக் கூட்டத்துடன் உறவுகொண்டு களஞ்சியத்துத் தானியங்களை யெல்லாம் இந்தப் பஞ்சகாலத்தில் பக்கத்து நாட்டுக்குக் கொண்டுபோய் விற்றுவிட்டு, சொந்த நாட்டுக்காரர்களைப் பட்டினி போட்டுக் கொல்கிறாய்! உன் கருவூலம் தங்கப்பாளங்களால் நிரம்பிவிட்டது - ஆனால், நாட்டில் மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சாகிறார்கள்! இப்போது சொல்! நீ குற்றவாளியா? இல்லையா?”

மன்னன் இடியொலியெனப் பதில் அளித்தான்: “இல்லை! இல்லை! நான் குற்றவாளி இல்லை!” என்று! அத்துடன் நிறுத்தவில்லை -

“தளபதிகளே! இந்தத் தலைக்கனம் கொண்டவனைச் சிறையில் அடைப்பீர்! வீரர்களே! குதிரைப்படை புறப்படட்டும். அதன் குளம்புகளில் கோட்டைக்கு வெளியே கூடியிருக்கும் கும்பல் நசுங்கிப் பிதுங்கி நாசமாகட்டும்! உம்! என் ஆணையை உடனே நிறைவேற்றிடுக.”

என்று கர்ச்சனை செய்தான்!

குற்றம் சாட்டியவனைத் தளபதிகள் சிறைப் பிடித்தனர்! குதிரைகளில் வீரர்கள் - கோட்டைக்கு வெளியே குருதி வெள்ளம் - மக்கள் ஆயிரக்கணக்கில் மாண்டொழிந்தனர்.

அவையிலிருந்தோரைப் பார்த்து மன்னன் கேட்டான்: “மாசற்ற என்னைப் பார்த்தா களங்கம் கற்பித்தான் கயவன்! நீங்கள் நம்புகிறீர்களா?” என்று!

“நாடாளும் நாயகனே! நாங்கள் நம்பவில்லை” என்றனர், அவையில் இருந்தோர்.

அவை கலைந்தது! மன்னன் அந்தப்புரம் வந்தான் - தங்கப்பாளங்கள் நிரம்பியிருந்த இருப்புப்பேழை அவனை எதிர்கொண்டு அழைத்தது! அருகே சென்றான். தனது நாட்டு மக்களைப் பட்டினி போட்டுக் கொண்டு, அவன் திரட்டிய செல்வம் அது! அவற்றைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

அவன் நெஞ்சில் பலமான ஓர் அடி! அய்யோ என அலறினான்! எதிரே அந்த மன்னனைப் போலவே ஓர் உருவம்! கலகலவெனச் சிரித்தது! அந்தச் சிரிப்பு பயங்கரமாக இருந்தது! உருவம் பேசியது:

“தெரியவில்லையா என்னை? நான்தான் உன் மனச்சாட்சி! நீ வெளித்தோற்றத்திற்கு நீதிமான் - நேர்மையாளன் - மாசற்றவன் - இப்படிச் சொல்லி நீ உலகை ஏமாற்றலாம் - ஆனால், உன் மாசு நிறைந்த செயல்களை என்னிடம் மறைக்க முடியுமா?”

இந்தக் கேள்வி, மன்னன் தலையில் சம்மட்டி அடியாக விழுந்தது. அடி தாங்க முடியாமல் அவன் இருப்புப் பேழைமீது சாய்ந்து, கீழே மயங்கி விழுந்தான். மனச்சாட்சி, மீண்டும் உரக்கச் சிரித்தவாறு அந்த இடத்தைவிட்டு மறைந்தது!

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற”

அதிகாரம் - 4 - அறன்வலியுறுத்தல்; பாடல் - 34

ஆகுல நீர = ஆரவாரத் தன்மை

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்