பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 198 / 300

உறின்நட்டு அறின் ஒரூஉம்

அச்சுப் பக்கம் 425426 · ஸ்கேன் 442443 · அதிகாரம் 82 (தீ நட்பு) — குறள் 812

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

நாள் தவறினாலும் தவறும்; நாகன் - நல்லானைச் சந்திப்பது தவறாது; நல்லான் அந்த ஊரில் உள்ள பெருநிலக் கிழார்களில் ஒருவன். கண்ணுக்கெட்டிய தூரம் அவனுக்குக் கழனிகள் உண்டு. ஆற்றுப்பாசனம் - அதுவும் ஆற்றுப் படுகையை ஒட்டிய வளம் பொருந்திய பூமி! முப்போகம் விளையக்கூடிய செழிப்பான நிலம்! அவன் வீட்டுக் களஞ்சியத்தில், மாணிக்க நெல்மணிகள் நிறைந்திராத நேரமே இருந்ததில்லை.

நாகன், அவனுக்கு நண்பன். அவனைத் தன் உயிரினும் மேலாக நேசித்தான் நல்லான். எளிதில் யாரையும் நம்பி, அவர்பால் அளவற்ற அன்பும் நட்பும் கொண்டு அவர்கட்குத் தேவையான உதவிகளைச் செய்வது நல்லானின் இயல்பு!

அவனிடம் மிக நெருங்கிப் பழகிய நாகன், நல்லானின் இதயத்தில் சிறந்ததோர் இடத்தைப் பிடித்திருந்தான். நாகன் தங்கைக்குத் திருமணம், அந்த விழா இனிது நிறைவேற தேவையான பணமும் பொருளும் கொடுத்து நாகனுக்கு, நல்லான் உதவினான்.

கிழமைதோறும் நாகன் வீட்டுக்கு நல்லான் மாளிகையிலிருந்து தும்பைப்பூ போன்ற அரிசி, அவன் வீட்டுத் தேவைக்கேற்ப அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். குடிசை வீட்டில் வாழ்ந்த நாகனுக்கு, அழகிய கல்வீடு ஒன்று கட்டிப் பரிசாக வழங்கியிருந்தான் நல்லான்.

நாகன், நல்லானைச் சந்திக்கும்போதெல்லாம் அவன் செய்யும் உதவிகளுக்கு நன்றி கூறிக்கொண்டே யிருப்பான். நல்லானின் அறிவாற்றல் - செயலாற்றல் - இனிய குணம் - நல்ல பண்பு - நட்புக்கு இலக்கணமாகத் திகழும் தன்மை இவற்றையெல்லாம் நாகன் பாராட்டிக்கொண்டே யிருப்பான். நல்லானுக்கே சலித்துப்போகிற அளவுக்கு நாகன் அவனைப் புகழ்ந்துரைப்பான்.

“போதுமப்பா! போதும்! என் நண்பனுக்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்கிறேன். அதற்குக் கைமாறாக நீ என்னைப் பாராட்டத் தேவையே இல்லை. எந்த நிலையிலும் நமது நட்பு அழியாமல் நீடித்தால், அது ஒன்றே எனக்கு மனத்தெம்பினை அளிக்கும். மகிழ்ச்சியைத் தரும்” என்று கண்களில் நீர்துளிர்க்க நல்லான், நாகனிடம் கூறுவான்.

திடீரென ஓராண்டு கடும் புயல் - மழை - ஊரெங்கும் வெள்ளம்! தொடர்ந்து பத்துப் பதினைந்து நாட்கள் பெய்த மழையாலும் - அடித்த புயலாலும் ஆறு திசைமாறியது. ஆற்றின் கரைகள் இருந்த இடம் தெரியவில்லை. அதன் விளைவு, ஆற்றுப் படுகையையொட்டிய நல்லானின் கழனிகள் அனைத்தும் மண்மூடிப் போய்விட்டன. அந்த ஊரில் எந்த நிலக்கிழாருக்கும் ஏற்படாத இழப்பு நல்லானுக்கு ஏற்பட்டுவிட்டது.

மழையும் புயலும் ஓய்ந்தபிறகு, நல்லான் தன் நிலங்களைக் காணச் சென்றான். மண்மேடுகள்தான் தென்பட்டன.

குவிந்து கிடக்கும் மண்ணையும் மணலையும் அகற்றி, அமிழ்ந்து கிடக்கும் வயல்களைச் சீர்படுத்துவதற்கு ஓராண்டுக் காலமாகும். நல்லான் மனமொடிந்து போனான். எனினும், மீண்டும் அந்த வளமிகு பூமியைச் செம்மைப்படுத்த முடியுமென்று உறுதியாக நம்பினான்.

தன் துயரத்தை நாகனுடன் பங்கிட்டுக் கொள்ளத் துடித்தான். நாலைந்து நாட்களாகவே நாகன், அவன் வீட்டுக்கு வரவில்லை. வெள்ளத்தில் ஏதாவது நாகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதோ என்ற கவலையில் அவனை அழைத்து வர நல்லான், ஆளை அனுப்பினான். அனுப்பப்பட்ட ஆளிடம் நாகன், “நாளை வருகிறேன்” என்று சொல்லியனுப்பினான். இதே பதில்தான் நாகனிடமிருந்து ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்தது.

பிறகு நல்லான் கேள்விப்பட்டான்; நாகன் இப்போதெல்லாம் அந்த ஊரில் மற்றொரு நிலக்கிழார் வல்லான் என்பாரின் வீட்டிலேயே இருக்கின்றான் என்று!

வல்லானின் நிலங்கள் மேட்டுப்பாங்கான இடத்தில் இருந்ததால் அதிகம் பாதிக்கப்படவில்லை. நல்லானுக்கு ஏற்பட்டது போன்ற பேரிழப்பு ஏற்படவுமில்லை. நாகன், வல்லானைப் புகழவும் வாழ்த்தவும் தன் நாக்கை வளைத்துக் கொள்வது அவனுக்கு எளிதாகவே இருந்தது.

நல்லான், தன் நிலம் மண்மூடிட்டது குறித்துக் கவலைப்பட்டதைவிட, நாகனின் நட்பு எத்தகையது என்பதை எண்ணித்தான் அதிகமாகக் கவலைப்பட்டான்.

“தமக்குப் பயன் உள்ளபோது நட்புகொண்டு நெருங்கியிருந்துவிட்டு, பயன் இல்லாதபோது நீங்கிவிடுகிறவர்களின் தகுதியற்ற நட்பைப்பெற்றால் என்ன? அல்லது இழந்தால்தான் என்ன?”

என்ற குறள்மொழியை நல்லானின் நெஞ்சம் குமுறலாக வெளிப்படுத்தியது.

“உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்”

அதிகாரம் - 82 - தீ நட்பு; பாடல் 812

உறின்=பயனுள்ளபோது அறின்=பயனில்லாதபோது ஒரூஉம் = நீங்கிடும்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்