பொருளடக்கம் 197 / 300
அரிதாற்றி அல்லல்நோய்
அச்சுப் பக்கம் 423–424 · ஸ்கேன் 440–441 · அதிகாரம் 116 (பிரிவாற்றாமை) — குறள் 1160
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
ஒரு துளி தேன்; இருவர் இதழ்களிலும்! ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டது! இதழில்பட்ட தேனை, நாவில் சுவைத்து இன்பமுறக்கூட நேரமில்லை; அதற்குள் அந்த முரட்டுக் குரல் தோட்டத்துப் பக்கம் கேட்டது - “அடியே அழகம்மை! அங்கே என்னடி செய்கிறாய்?” என்று! அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி அழகம்மையின் தாயார்தான்! பெண்ணைப் பேழையில் வைத்துப் பூட்டிப் பாதுகாக்காத ஒன்றுதான் பாக்கி! பிணைத்த இதயங்களுடன் அணைத்துக் கிடந்த அழகம்மையும் அன்புமதியும் அதிர்ச்சியுடன் பிரிந்தனர். “ஊருக்குக் கிளம்பத் தெருவிலே வண்டி கட்டித் தயாராக நிற்கிறது, அப்பா காத்துக் கொண்டு நிற்கிறார். நான் உன்னைத் தேடி அலைகிறேன். வாடி இங்கே!” அவளைப் பரபரவென்று இழுத்துச் சென்று வண்டியில் ஏற்றி உட்காரவைத்தாள் அந்தத் தாய்!
அன்புமதியோ, அவன் வீட்டுத் திண்ணையிலிருந்தவாறு அழகம்மையை ஏற்றிக் கொண்டு அசைகின்ற அந்த வண்டியைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
அவள், வெளியூரில் வாழ்கிறாள். அடிக்கடி உறவினர் வீட்டுக்கு வருவாள் பெற்றோருடன். அப்போதுதான் அடுத்த வீட்டு அன்புமதியின் இதயத்தில் குடியேறிக் கொண்டு அவனையும் தன் இதயச் சிம்மாசனத்தில் கொலுவிருக்கச் செய்தாள். திருமணத்திற்கெல்லாம் திட்டம் போட்டுத்தான் வைத்திருக்கின்றனர் இருவரும்! அதற்கிடையே திங்களுக்கொருமுறையோ இருமுறையோ சந்திக்கும் வாய்ப்புக்
கிட்டும்போது, ஒருவரையொருவர் அள்ளிப் பருகிட - அமுதம் சுவைத்திட - அகிலத்தை மறந்திட - துடித்தனர்! ஆனால், அந்த ஒவ்வொரு சந்திப்பின் போதும் “அடியே! அழகம்மை!” என்ற அந்தக் கடுமையான குரல் தடுப்புச் சுவராக எழுந்து நிற்கத் தவறவில்லை.
ஆனாலும் அவர்கள் பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு - அதனால் ஏற்படும் துன்பத்தினால் கலங்குவதை விட்டுப் - பிரிந்த பிறகும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்கிறவர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள் அல்லவா; அவர்களைப் போலவே உயிர் வாழ்ந்து என்றோ ஒருநாள் ஒன்று சேர்வோம் என்ற உறுதியோடிருந்தனர். பிரிவைத் தாங்கிக் கொள்கிற கடின இதயம் படைத்த பலரும் இருக்கிறார்களே; அந்தப் பட்டியலில் தங்களையும் இணைத்துக் கொண்டு, தங்களையே கடிந்து கொண்டனர், அந்தக் காதலர்கள்!
அந்த உள்ளங்களின் வேதனை ஒலியைத்தான் இதோ - இந்தக் குறள் விளக்குகிறது.
“அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர்”
அதிகாரம் - 116 - பிரிவாற்றாமை; பாடல் - 1160
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்