பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 196 / 300

கொக்கொக்கக் கூம்பும்

அச்சுப் பக்கம் 421422 · ஸ்கேன் 438439 · அதிகாரம் 49 (காலம் அறிதல்) — குறள் 490

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“ஆகா! விடக்கூடாது அவனை! என் தோள்கள் துடிக்கின்றன! வாள் புறப்பட்டுவிட்டது உறை நீங்கி! கீழ் மக்களின் வழக்கிலுமில்லாத இழிமொழிகளையன்றோ என்னை நோக்கி வீசியிருக்கிறான்! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த தமிழ் மரபு என்மரபு என்பதை மெய்ப்பிக்க இப்போதே சென்று அவனுக்குப் பாடம் புகட்டுகிறேன். அவனிடம் பெரும் படையிருக்கலாம். ஒப்பிட்டுப் பார்க்கும்போது அளவிலே சிறியதுதான் என் படை. எனினும் வலுவிலே பெரியது! நெஞ்சுறுதிகொண்ட வீரர்கள்; உயிரைத் துச்சமெனக் கருதும் தீரர்கள் - என் பின்னே அணிவகுத்து நிற்கின்றனர். என்னை யிகழ்ந்தவனைச் சுற்றியிருப்பதோ வெறும் சோற்றுப் பட்டாளம் - எனவே அமைச்சா பெருமகனாரே! என்னைத் தடுக்காதீர்கள்! உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நானில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.”

வயது முதிர்ந்து, நரை திரை விழுந்த நிலையில் அமர்ந்திருந்த மூத்த அமைச்சரின் முன்னால் அந்த நாட்டுக்குரிய இளம் மன்னன், கண்களில் கனல் கிளம்ப வாதிட்டுக் கொண்டிருந்தான்.

பெரிய மன்னர் மறைந்து - அப்போதுதான் முடிசூட்டிக் கொண்டிருந்த வயதில் இளைய - ஆனால் வலிமையில் சிறந்த - அந்த வீரநெஞ்சனை இகழ்ந்துரைத்ததுதான் அயல்நாட்டு அரசன் என்ற காரணம் பற்றியே போருக்குப் புறப்பட வேண்டுமெனத் துடித்தான் அவன்.

அமைச்சரோ முதுபெருங்கிழவர்! அவன் தந்தையின் காலந்தொட்டு அப்பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவர்! எனவே அவரது அனுபவ அறிவு இளைய மன்னனின் துடிப்புணர்வுக்கு அணையாக எழுந்து நின்றது. அயல்நாட்டு அரசனை எதிர்த்து ஆணவத்தை அடக்க வேண்டுமென்பதில் அவருக்கு ஆர்வமில்லாமல் இல்லை.

இருந்தாலும் படைகொண்டு மோதினால் பகைவனின் தலைகொண்டு திரும்ப வேண்டுமே தவிர - தோல்வியெனும் நிலைகண்டு கலங்கிடலாகாது என்பது அவர் போட்ட கணக்கு!

இளமன்னனோ இப்போதே புறப்பட்டாக வேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றான். அமைச்சர், அவனிடம் கனிவாகச் சொன்னார்:

“இளவலே! உன் வீரத்தையோ வைரம் பாய்ந்த உள்ளத்தையோ நான் சந்தேகிக்கவில்லை. நம்மை இகழ்ந்த பகைவனுடன் மோதியே தீர வேண்டும். அவன் மகுடம் கழற்றப்பட வேண்டும். இதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. இருந்தபோதிலும் இளைய மன்னா! என்னுடன் சிறிது நேரம் வருக! அரண்மனைக்கு அப்பால் சென்று உலவிவிட்டு வருவோம். அதன்பிறகு முடிவினைச் செய்வோம்.”

இளவேந்தனும் முதுபெரும் அமைச்சரும் அவ்வாறே உலவிடச் சென்றனர். சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலின் பக்கம் நடந்து கொண்டிருந்தனர். அமைச்சர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் உதடுகளின் அசைவையே எதிர்பார்த்துக் கொண்டு அந்த இளம் மன்னன் அவருடன் நடந்து கொண்டிருந்தான். திடீரென அமைச்சர் நின்றார். மன்னனும் நின்றான். “அதோ!” என்று விரல் நீட்டிக் காட்டினார். ஆம்! வாய்க்கால் ஓரம் கொக்கு ஒன்று ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தது.

“என்ன அமைச்சரப்பா! எனக்கு விளையாட்டுக் காட்டுகிறீர்களா? குழந்தாய்! குழந்தாய்! கொக்கு பார் என்று?”

சிரித்துக் கொண்டே மன்னன் கேட்டான்.

அமைச்சரும் பொக்கைவாய்ப் புன்னகையை அவிழவிட்டு - “ஒலியெழுப்பாமல் அந்தக் கொக்கின் செயலை உற்று நோக்கிடுக!” என்றார். இருவரும் அதனைப் பார்த்தவண்ணம் ஒதுங்கி நின்றனர்.

கொக்கு வாய்க்கால் நீர்மீது தன் கூரிய விழிகளை செலுத்திக் கொண்டிருந்தது. நீரில் நீந்தியவாறு ஒரு மீன் வராதா என்பதற்காகத்தான்! நீண்ட நேரம் காத்திருந்த கொக்கு, திடீரென நீர் மீது தன் நீண்ட அலகால் குத்தியது! ஒரு சிறிய கெண்டை மீன் சிக்கியது! கொக்கு அதை விழுங்கியவாறு கம்பீரமாக நிமிர்ந்து நின்றது.

“கோமகனே! கொக்கின் திறம் புரிந்ததா? கூம்பும் பருவத்தில் - அதாவது காலம் கனியாத கட்டம் வரையில் அது காத்துக் கிடக்கிறது. ஆனால் சீர்த்த இடத்து - அதாவது காலம் சரியாக வாய்க்கிற சமயத்தில் குறி தவறாமல் குத்தித் தன் காரியத்தை முடித்துக் கொள்கிறது. இதைத்தான் மன்னா! வள்ளுவர் அழகுறச் சொல்கிறார்.”

அமைச்சர் அந்தக் குறட்பாவை விளக்கினார்.

கூம்பும் பருவத்தில் கொக்குபோல் காத்திருந்து பொறுமை கடைப்பிடிக்க வேண்டும். வாய்ப்பு ஏற்படும்போது அதன் குத்துபோலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

முதுபெரும் அமைச்சரின் கருத்துக்கு அந்த இளைய மன்னன் இணக்கம் தெரிவித்து, அவர் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து”

அதிகாரம் - 49 - காலம் அறிதல்; பாடல் - 490

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்