பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 195 / 300

வருகமன் கொண்கன்

அச்சுப் பக்கம் 419420 · ஸ்கேன் 436437 · அதிகாரம் 127 (அவர்வயின் விதும்பல்) — குறள் 1266

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

சேல்கெண்டை அவன் பெயர்! மீனவர் குப்பத்திலேயே குறும்புக்காரன் என்று பெயர் எடுத்த இளைஞன். வாயாடி வம்புக்கிழுப்பது அவன் வேலை என்பதுணர்ந்த மீனவர்கள், அவனைக் கடிந்து கொள்வதேயில்லை. சிறுசிறு வேலைகளை அயராமல் செய்வான். கரையில் மோதும் அலைகளைப்போல் சேல்கெண்டையும் ஓய்வறியாது அந்தக் குப்பத்தில் வீட்டுக்குவீடு சுற்றிக் கொண்டிருப்பான். எல்லா வீடுகளுக்கும் அவன் ஒரு செல்லப்பிள்ளை. பாட்டிகள் மத்தியிலும் அவன் பாட்டொலி கேட்கும்! பருவக்கிளிகள் மத்தியிலும் அந்தச் சின்னப்பிள்ளையின் சேட்டைகள் நடக்கும்! யாரும் அவனிடம் குற்றம் குறை கண்டதுமில்லை! அவனும் அப்படிப்பட்ட குணம் கொண்டவனுமல்ல.

ஒருநாள், கட்டுமரங்கள் மீன் பிடிக்கக் கடல் நோக்கிக் கிளம்பின. சேல்கெண்டையும் ஒரு மரத்தில் தொத்திக் கொண்டான். “நீ குப்பத்தில் அலைந்து கொண்டிருந்தால் எங்களுக்கெல்லாம் ஒரு துணை; நீயும் ஏனடா போகிறாய்?” என்று கயல்விழி எனும் கட்டழகுப் பெண் - கடுத்துப் பார்த்தாள்; அவன் கேட்கவில்லை! கயல்விழிக்கு மணமாகித் திங்கள்கள் நாலைந்துதான் கழிந்திருந்தன! அவள் கணவன் கடல் மீது சென்று, அன்று காலைத்தான் திரும்பியிருந்தான். அந்த மகிழ்ச்சியில் பூத்து நிற்கும் கயலின் பேச்சு, சேலின் செவிகளில் ஏறவில்லை!

அன்றிரவு பெரும் புயற்காற்று - கடற்கொந்தளிப்பு - ஊரெல்லாம் வெள்ளக்காடு! கடலில் சென்ற கட்டுமரங்களை ஐந்து நாட்களாகக் காணவில்லை! பதறிப்போயினர் குப்பத்து மக்கள் - அலறித் துடித்தனர் ஆண்களும் பெண்களும்! “இப்படியும் ஒரு பிழைப்பா, இறைவா! எங்களுக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாய்” என்று கண்ணீர் வடித்துக் கடலை வென்றனர்.

ஐந்து நாட்கள் கழித்த பின்னர், ஊண், உறக்கம் எதுவுமின்றி ஒட்டிய எலும்புக் கூடுகளை மரத்தில் கட்டியது போல கடலில் சென்றவர் திரும்பினர்! குப்பத்தில் கொண்டாட்டம்! வயிறு குளிர்ந்தது. வாழ்த்தித் தழுவி, அவரவர் வீட்டு ஆண்களை அழைத்துச் சென்றனர்.

சேல்கெண்டை மட்டும் தனியாய் நின்றான். கயல்விழி, ஓடி அவனைக் கண்டுபிடித்து “வாடா தம்பி! என் வீட்டில் சாப்பிடலாம்!” என்றாள்.

“அக்கா! ஐந்து நாள் பசி எனக்கு! கொண்டுவா சோற்றை! ஐந்து நாள் பசிக்கும் இன்று ஒரு நாள் தின்று தீர்த்துக் கொள்கிறேன்” என்றான்.

“அது எப்படியடா முடியும்? பசியின் பரபரப்பில் சோற்றை அள்ளி அள்ளி விழுங்குவாய்! அவசரமாய் விழுங்குவாய்! இருந்தாலும் ஐந்து நாள் சோறு ஒரு நாளில் உண்டிட இயலுமோ? ஏதோ உன் பசியின் துடிப்பைத்தான் காட்டுகிறாய்” எனக் கேலி செய்தாள் கயல்விழி!

சேல்கெண்டை, குறும்பனாயிற்றே; சும்மா இருப்பானோ?

“அக்கா! நீ மட்டும் உன் கணவன் உன்னைப் பிரிந்து இரண்டு நாள் கடலில் சென்றிருந்தபோது, அடுத்த வீட்டு உன் தோழி அயிரையிடம் என்ன சொன்னாய்?” என்று கேட்டான்.

“என்னடா சொன்னேன்?”

“நான் ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டுதானிருந்தேன்!”

“என்னடா கேட்டாய்? சொல்லடா!”

“என்னைப் பிரிந்து சென்றுள்ள என் கணவன் என்னிடம் வருவார்! வந்தவுடன் என்னுடைய துன்ப நோய் முழுவதும் தீருமாறு நான் அவரோடு கூடி நுகர்வேன்’ என்று சொன்னாயா; இல்லையா? அதைப்போலத்தான் நானும் ஐந்து நாள் பசியை ஒரு நாளில் தீர்த்துக் கொள்கிறேன் என்கிறேன்!”

இதை அவன் சொன்னதும், கயல்விழி மௌனமானாள்! அவன் சிறிய கன்னத்தை மட்டும் மெல்லக் கிள்ளிவிட்டாள்!

“சரி! சரி! வா சாப்பிடலாம்” என்றழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் போனாள். அவள் முகத்தில் மட்டும் நாணம், ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

“வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட”

அதிகாரம் - 127 - அவர்வயின் விதும்பல்; பாடல் - 1266

கொண்கன் = கணவன் பைதல் = துன்பம் பருகுவன் = நுகர்வேன்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்