பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 194 / 300

அ. நகையுள்ளும் இன்னாது / ஆ. பண்பிலான் பெற்ற

அச்சுப் பக்கம் 416418 · ஸ்கேன் 433435 · அதிகாரம் 100 (பண்புடைமை) — குறள் 995, 1000

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

வெண்முகிற் கூட்டத்தைத் தொடும் வண்ணம் உயர்ந்திருக்கும் அந்த மாளிகையின் உச்சி! - அந்த உச்சி முகட்டில் நின்று அவன் கூரிய விழிகளைப் பாய்ச்சிடும் தொலைவுக்குக் காடு கழனிகள் அவனுக்குச் சொந்தமானவை.

ஆண்டுதோறும் அவனுக்குக் கிட்டும் வருமானத்தைத் தங்க நாணயங்களாக மாற்றி - அவற்றை எண்ணிவைக்க இயலாமல் குவியல் குவியலாகக் கருவூல அறையில் கொட்டி வைத்திருந்தான். இப்படியொரு செல்வச் செழிப்பில் முழுகிக் கிடந்தவனை நாடே அறியும்.

அவனுக்குப் பெயருங்கூட ‘நல் இதயன்’ என்றுதான் பெற்றோர் இட்டிருந்தனர்.

இளம் வயதில் அவனுடன் ஆடித் திரிந்த நண்பன் ஒருவனுண்டு.

பெயர் பொற்கோ!

பெயருக்கேற்பப் பொன்பரப்பி அதில் படுத்திருந்த குடும்பத்தினன்தான்; ஆனால், நடத்திய வாணிபத்தில் பேரிழப்பு ஏற்பட்டு பொற்கோவின் குடும்பத்தினர் உள்ளூரில் வாழ்ந்திட நாணமுற்று வெளியூர் சென்று விட்டனர்.

காலம் செல்லச் செல்ல பொற்கோவின் குடும்பத்தை வறுமை கொத்தித் தின்றது. பெற்றோர் மண்ணோடு கலந்தனர்.

தன்னை நம்பி வந்த இல்லத்தரசி நங்கைக்கு மாற்று ஆடை வாங்கித் தரவும் முடியாத நிலையில் கைபிசைந்து கண்ணீர் உகுத்து நின்றான். பொற்கோவின்பால் இரக்கம் கொண்டு மனமுருகியவர்கள், தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். அவர்களும் தொடர்ந்து உதவுகிற அளவுக்கு வளம் படைத்தவர்களல்லர்!

ஒரு நாள் அவர்கள் அவனை அணுகி, “உன் இளமைக்கால நண்பன் நல்லிதயன், அளவிலாச் செல்வத்துடன் வாழ்கிறானே - அவனிடம் சென்று உன் நிலையை விளக்கினால், வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுமே” என எடுத்துக் கூறினர்.

மனைவி நங்கை மறுத்துத் தடுத்தும்கூடக் கேளாமல் பொற்கோ, நல்லிதயனை நாடிப் புறப்பட்டான்.

காலை முதல் மாலை வரை மாளிகையின் வாயிற்புறத்தில் காத்துக் கிடந்தவனுக்குக் கடைசியாக நண்பனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

மாளிகையின் எழில் முற்றத்தில் ஆடிக் கொண்டிருந்த பொன்னூஞ்சல் ஒன்றில் - கோவைக் கனியிதழ்ப் பெண்ணொருத்தியின் மார்பகத்தில் பிடிபுரிந்த அவள் மடிமீது சாய்ந்து படுத்திருந்த நல்லிதயன், தன் எதிரே வந்துநின்ற பொற்கோவைக் கேலியாகப் பார்த்தான்.

“வா! பொற்கோ! வா! என்ன இது? திருவோடு வருவாய் என எதிர்பார்த்தேன். நீயோ திருவோடு ஏந்துபவனைப் போல வந்திருக்கிறாய்!”

- என்று குறும்புச் சிரிப்பு அவிழ - அதற்கேற்ப ஆணவத்தின் அரும்புச் சிரிப்பும் தவழ - நல்லிதயன் விடுத்த கேள்வி, சுடுகணையெனப் பொற்கோவின் நெஞ்சைச் சுட்டெரித்தது.

பொற்கோ, தன் பழைய நண்பனைப் பார்த்துச் சினத்துடன் பதில் அளித்தான். அந்தப் பதில் ஒரு குறட்பாவாக இருந்தது.

“நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு”

பொற்கோ இந்தக் குறளைச் சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி விட்டான். நல்லிதயனின் மடியில் கிடந்த மாம்பழ அழகி: “அன்பே! அவன் சொல்லிவிட்டுப் போன பாட்டுக்குப் பொருள் என்ன?” எனக் கேட்டுத் தன் கன்னத்தால் அவன் கன்னத்தைத் தேய்த்தாள்.

“பகைமையுணர்வு படர்ந்திருக்கும் நேரத்தில்கூட பிறருடைய இயல்பை அறிந்து நடப்பதே நல்ல பண்பாகும். விளையாட்டு வேடிக்கையாகக்கூட ஒருவனை இகழ்ந்து பேசுதல் துன்பம் தருவதால், அப்படிப் பேசுதல் பண்பாகாது.

இந்தக் குறளைத்தான் சொல்லி என்னை அவன் குட்டிவிட்டுப் போய் விட்டான்” என்று நல்லிதயன் கவலையுடன் முணுமுணுத்தான். முணுமுணுத்த இதழ்களுக்கு முத்தங்களை அதிரசங்களாக அடுக்கி, அவன் நினைப்பை மாற்றித் தன் மடியில் அவனை இழுத்துப் போட்டுக் கொண்டாள்.

நொந்து திரும்பிய பொற்கோவின் மனைவி நங்கை, அவன் வாயிலாக நடந்ததை அறிந்து அவனுக்கு ஆறுதல் வழங்கினாள்.

“இத்துணைப் பெருஞ்செல்வம் படைத்த என் பழைய நண்பன் இவ்வாறு நடந்து கொண்டானே என்பதை நினைக்கவே முடியவில்லை என்னால்!”

கண் கலங்கினான் பொற்கோ! நங்கை அவன் விழிநீரைத் துடைத்தவாறு சொன்னாள்:

“அத்தான்! பெருஞ்செல்வம் படைத்திருக்கும் காரணத்தினாலேயே அவன் உயர்ந்தவனாக விளங்க முடியுமா? சுவை பொருந்திய பசுவின் பாலைக் காய்ச்சிக் களிம்பு ஏறிய பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் அந்தப்பால் எப்படிக் கெட்டு விடுகிறதோ, அதைப் போலத்தான் பண்பு இல்லாதவன் பெற்றுள்ள பெரிய செல்வமும் மதிப்பிழந்து விடுகிறது.”

“ஆம் கண்ணே!” என்றான் பொற்கோ! நங்கை சொன்ன கருத்து அமைந்த அந்த அழகிய உவமைக் குறளும் அவன் நினைவுக்கு வந்தது.

“பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று”

அதிகாரம் - 100 - பண்புடைமை; பாடல்கள் - 995, 1000

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்