பொருளடக்கம் 193 / 300
புறத்துறுப் பெல்லாம்
அச்சுப் பக்கம் 414–415 · ஸ்கேன் 431–432 · அதிகாரம் 8 (அன்புடைமை) — குறள் 79
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
விழி மின்னல் உயிர் வாங்கும்! மொழிச் சுவையோ மயக்கிப் போடும்; கன்னங்கள் கவர்ந்திழுக்கும்! கழுத்துக்குக் கீழே இன்பமேடு! இடையொன்றே இடையென்றால் எவர் மறுப்பார்! காந்தள் தலைகுனியும் கைவிரல்களின் முன்! காந்தம், உடல் முழுதும்! இத்தரை மீது இப்படியொரு நிறம் பத்தரைமாற்றுப் பசும் பொன்னுக்கே உண்டு! அவள் தோற்றத்தின் எதிர் நிற்க முடியாமல் தோற்றோமென ஓடுவர், புராணக் கற்பனையில் ஆடுகின்ற ஊர்வசி, ரம்பை, திலோத்தமை எல்லாம்!
அந்த அழகின் சிகரம், ஒரு நாள் ஓடைக் குளிர்புனலில் குளிக்க வந்தாள். குளித்துக் கொண்டிருந்தாள். அப்போது இடுப்பினிலே குழந்தையொன்றும் தலையினிலே குடமொன்றும் சுமந்தவாறு வேறொருத்தி அந்த ஓடைக்கு வந்தாள். வந்தவள் குழந்தையை இறக்கிக் கரையினில் குந்தவைத்துக் குடத்தைத் தேய்த்து அழுக்கைப் போக்கும் பணியில் ஆழ்ந்தாள்.
அழகிய குழந்தை! அழுகக் கட்டி! ஓடைக் கரையில் உட்கார்ந்து பார்த்தது; என் நினைவோ ஊர்ந்திடத் தொடங்கியது! ஊர்ந்த குழந்தை ஓடைக் கரையைக் கடந்து கீழே ஓடும் புனலை அள்ளிட வந்தது! அது வந்த பக்கம் அழகியின் பக்கம்! குடம்
புதுக்கிக் கொண்டிருந்த தாயார், குழந்தை நீருக்கருகே நெருங்கியதுணர்ந்து அதனிடம் தாவ முயன்றாள்! அதற்குள் அந்த அழகியைப் பார்த்து, “குழந்தையைக் கொஞ்சம் பிடி! பிடி!” எனக் கூவி அலறினாள்! அழகியோ அதனைக் காதில் வாங்கிக் கருத்த முகத்துடன் கரையினில் ஏறி ஈர உடையைச் சரி செய்துகொள்ள ஓர் ஓரம் போனாள்! தாய் வந்து பிடிப்பதற்குள் குழந்தை தவிற்று தண்ணீருக்குள்! இருப்பினும் குழந்தையை உடனே தூக்கி, இறப்பின் வாயிலிருந்து மீட்டுக்கொண்டாள்!
உடலெங்கும் நடுநடுங்கக் குழந்தைக்கு முத்தமிட்டு “என் உயிரே! நீ பிழைத்தாயா!” என்று தழுவிக் கொண்டாள்!
“அங்கமெல்லாம் அழகிருந்து என்னடி பயன்? அகத்தில் அன்பில்லாதவருக்கு புறத்தழகு என்பது ஒரு போலித்தனம்! அன்பின் அழகு உன் அகத்தில் இல்லை! என்புதோல் போர்த்த உடல் அழகுக்கு என்றுமே மதிப்பில்லை, போ!”
என்று அந்தத் தாய், அந்த அழகு மங்கையைப் பார்த்துச் சினத்தைக் கொட்டி விட்டுப் போனாள்.
“புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு”
அதிகாரம் - 8 - அன்புடைமை; பாடல் - 79.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்