பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 192 / 300

ஊக்கம் உடையான்

அச்சுப் பக்கம் 412413 · ஸ்கேன் 429430 · அதிகாரம் 49 (காலம் அறிதல்) — குறள் 486

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“அவன் பெயரே அரிமா! அனல் தெறிக்கும் அவன், போர்க்குரல் கொடுத்தால்! கனல் உமிழ்ந்து களத்திலே பகைப்புலத்தை மிரண்டோடச் செய்யும் அவன் கண்கள்! குறிக்கோள் நிறைவேற, அவன் குருதி கொட்டவும் தயங்காத தீரன்! தலை கொடுத்தேனும் தன் மக்களின் தலையுயர்க்கத் தயங்காத வீரன்! குன்றனைய அவன் தோள்களின் மீது வலிமை கூத்தாடும்! குத்தீட்டி, கொடுவாள், எது வரினும் தாங்கிக் கொள்ளும் இரும்புக் கவசம் எனலாம் அவன் மார்பை! தன்மான உணர்வென்னும் ஓடங்கள் மிதந்தோடும் அருவியோட்டம், அவனது இரத்த ஓட்டம்!

அவன் இன்று அமைதியாகக் காட்சி தருகின்றான். அவனை வலுவில் போருக்கு இழுக்கின்றனர் எதிரிகள். எனினும் அவன் பொறுமையின் கடல்போலக் காட்சி தருகின்றான். “என்னம்மா நேர்ந்தது அவனுக்கு? சொல்லுங்கள் தாயே!” மீசை துடிக்க - விழிகளில் மின்னல் ஒளி கிளம்ப - வாளுயர்த்தி ‘வந்துவிட்டது போர்க்கள விருந்து!’ என முரசுபோல் முழக்கிடுவோனே; அவன் ஏனம்மா - இன்று இன்னமும் கச்சை கட்டாமல், கவசம் பூணாமல், கடகம் ஏந்தாமல் - சிந்தனையை எங்கோ செலுத்திக் கொண்டிருக்கிறான்? உங்கள் மகன் குணம் உங்களுக்குத்தானே தெரியும்; அதனால்தான் கேட்கிறேன் - சொல்லுங்கள்!”

“மகன் போன இடம் தெரியவில்லை. ஆனால் அந்தப் போர்ப்புலி வாழ்ந்த குகையிதோ!” என்று தன் வயிற்றைக் காட்டினாள் வீரமகனைப் பெற்ற தாயொருத்தியென்று புறநானூறு பேசுமே; அந்த வழிவந்த தாயல்லவோ நீங்கள், விளக்கம் கூறுங்களம்மா; வீரப்புதல்வன் வெகுண்டெழுந்து வெஞ்சமர் விளைக்கப் புறப்படாத காரணம் என்ன?”

அரிமாவின் அன்னையிடம், பரிதி இந்தக் கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டான். முதலில் பதில் சொல்லாமலிருந்த அந்தத் தாய், பரிதியின் பிடிவாதத்திற்குப் பணிந்து புன்னகையை உதட்டில் தேக்கி விடையளித்தாள்:

“பரிதி! அடக்கமற்றோர் ஆணவ மொழி பேசுகின்றனர். அதனைக் கேட்டும் என் மகன் அடங்கிக் கிடக்கிறானேயென்று வியப்படைகிறாய்! அது மட்டுமல்ல; ‘போர்! போர்!’ எனத் துடிக்கும் அவன் நெஞ்சுறுதியும் - வீரமும் - பகைவர்களால் இழித்துரைக்கப்பட்ட பிறகும் அவன் உறைவிட்டு எழாத வாளாக - நாணேற்றப்படாத அம்பாக - இருக்கின்றானே; என்ன காரணம் என அறிந்துகொள்ளப் பறக்கிறாய்! என் மகன் களம் பல கண்டவன் எனினும் வள்ளுவரின் ‘காலம் அறிதல்’ எனும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களை வழுவறக் கற்றவன் என்பதை நீ அறியமாட்டாயா?”

“அம்மா! தன் கை வேலை யானைமீது வீசிவிட்டு, பகையைத் தாக்க வேறு வேல் இல்லையே எனத்தேடும்பொழுது, தன் உடலில் தைத்திருந்த ஒரு வேல் கண்டு மகிழ்ந்து அதனை எடுத்துப் போரிட்ட ஆற்றல் மறவனல்லவோ அரிமா! அவனா ‘காலமறிதல்’ எனும் குறள் படித்துக் காத்துக் கிடக்கிறான்?”

“ஆமாம்! அவன் மறந்துவிட்டாலும் நினைவூட்ட அவனைப் பெற்ற தாய் நானிருக்கிறேனே! எழுச்சிமிகுந்த போர் வீரன் அடங்கியிருப்பதானது, போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகத் தன் கால்களைப் பின்னே வாங்குதலைப் போன்றது! எவ்வளவு பின் வாங்குகிறதோ அவ்வளவு வேகமாக முன்னோக்கிப் பாய்ந்து பகையைத் தாக்கும். என் மகன் அந்த ஆட்டுக்கடா போன்றவன். அவன் அடங்கியிருப்பதுபோல் தோற்றமளிப்பதைக் கோழைச் செயலெனக் கருதிவிடாதே!”

அந்தத் தாயின் விளக்கம் கேட்டுப் பரிதி, பூரித்துப் போனான். “என் ஐயப்பாடு நீங்கிற்று அம்மா!” எனக் கூறி விடை பெற்றுக் கொண்டு பீடுநடை போட்டான்.

“ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து”

அதிகாரம் - 49 - காலம் அறிதல்; பாடல் - 486

ஊக்கம் = மனஎழுச்சி தகர் = ஆடு பேரு = பின்னே கால் வாங்கும்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்