பொருளடக்கம் 191 / 300
அ. புல்லி விடாஅப் / ஆ. ஊடுக மன்னோ
அச்சுப் பக்கம் 410–411 · ஸ்கேன் 427–428 · அதிகாரம் 133 (ஊடலுவகை) — குறள் 1324, 1329
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அறம் போற்றிப் புகழ் மணக்க இல்லறம் நடத்திடும், இளமை பொங்கும் இன்பக் காதலர்!
புறப்பாட்டின் திருஉருவாய் மண் காக்கும் மாவீரன்!
மறக்குலத்து ஒளிவிளக்காய் மனைக்காத்து, மணாளனையும் வாழ்த்துகின்ற மங்கை நல்லாள்!
போர்ப்பரணி முழக்கிச் சென்று, பகை தொலைத்து, வெற்றி ஆர்ப்பரிப்பு, நகரில் நாதமழையாய்ப் பொழிய - “நெற்றிக் குங்குமம் பிழைத்தது அத்தான்” என்று தோளில் ஒட்டிக் கொண்டவளைத் தழுவிக் கொண்டான்! அவன் நெஞ்சகத்து விழுப்புண்கள் எல்லாம், மெய்மறந்த அணைப்பினிலே கிடைத்த ஒத்தடத்தால் அணுப்பொழுதில் வலி நீங்கி மறைந்தே போயின!
“போர்க்களத்துப் பணி முடிந்தது! பகை பறந்தது! இனி, போகக் களத்தில் சோகத்தைத் தீர்த்துக் கட்டிக் களியுண்போம், கனியமுதே! காதல் தேன் உண்போம் களிப்பிலாட! நாம் பிரிந்திருந்த நாடெல்லாம் யுகமாய் நகர்ந்தது; இனி நாளும் காலமும் நமக்கு அடிமை! என்னத்தான் சொல்கிறீர்?” என அவள் கேட்க, “அதைச் சொல்லத்தான் கற்கண்டே, நானும் நினைத்தேன்!” என்று அணைத்தான் வீரன்!
இன்பத்துச் சிகரத்தில் உடனடியாகப் போய் நின்றால், இரவெல்லாம் விழித்திருந்து - இத்தனை நாள் எண்ணியிருந்த சுவையெல்லாம் பருகிட முடியாதேயென ஏங்கி, அவனைத் தழுவிக் கொண்டே கிடப்பதற்கான தந்திரமாய், அவள் ஊடல் கொண்டு நடித்தாள். ஆனால், அந்தத் தழுவலில் தன்மேறிப் பாய்கின்ற உணர்ச்சி, அந்த ஊடலை நீடிக்கவிடாமல் அவளது உள்ளத்தை உடைக்கின்ற படைக்கருவியாகத் தோன்றுகிறதாம்! அடடா! ஊடலை முடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே; அதனால் நெடுநேரம் தொய்வின்றி நுகரவேண்டிய இன்பம் கெடுகின்றதேயென்று அவள் தவிப்பதும் அவனுக்குத் தெரிகிறது!
“புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை”
காதலரைத் தழுவிக் கொண்டேயிருப்பதற்குக் காரணமாக அமையும் ஊடலுக்குள்ளேயே அவளது உள்ளத்தைக் குலைத்திடக்கூடிய படைக்கருவியும் தோன்றிவிடுவதால், ஊடலை நீடிக்க முடியாமல் அவள் துடித்துத் துவளுகிறாள்.
அவனும் அவ்வாறே, அவள் ஊடல் நீடிக்க வேண்டுமென்று விரும்புகிறான். இன்ப வானில் ஒரே தாவாகத் தாவிக் களைப்பு மேலிட்டுக் கீழே விழுவதில் பயன் என்ன? அதனால் அவள் ஊடல் புரிய வேண்டும்! அந்த ஒளியிழையாள் மஞ்சத்தின் விளிம்புக்குப் போக வேண்டும்; அவன், அவளைத் தழுவியவாறு புரட்டித் தன்னுடனே சேர்த்துக் கொள்ள வேண்டும்!
முத்தமாரி! மாரி - மாரி! மீண்டும் தழுவல்! தழுவல்! ஆகா! அவள் ஊடல் புரிந்தவண்ணமிருப்பதிலும் அதைத் தணிக்க அவன் வஞ்சியிடம் கெஞ்சிடுவதிலும் கொஞ்சிடுவதிலும் எத்துணை இன்பம்! அவளுக்கும்தான்! அவனுக்கும்தான்!
ஆனால், அந்த அவசரக்கார இரவு அதற்குள் விடிந்துவிடும் போலிருக்கிறதே! இன்பவல்லியுடன் ஊடல் தீர்த்திட முனைந்தவாறு இதழ்த்தேனும் எல்லையிலாத் தித்திப்பும் உணரும் தரவேண்டுமென வரம் கேட்கும் அவன், இராக்காலத்தை நோக்கியும் ஒரு வரம் கேட்கிறான், கட்டிளமையின் கருந்தவத்திற்கிடையே!
“என் காதலி இன்னும் ஊடுவாளாக! அந்த ஊடலைத் தணிக்க நான் தழுவல் தவம் புரிந்து இரந்து நிற்குமாறு இந்த இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக!”
எப்படிப்பட்ட முறையீடு? அவளோ, தனது ஊடலை நீடிக்க முடியாமல் தவிக்கிறாள்! அவனோ, அந்த ஊடல் வளர்ந்தால் அதைத் தணிப்பதில் தனிச்சுவை காணலாமே எனக் கருதி, இரவுப் பொழுதை நோக்கி இறைஞ்சுகிறான்; “பொழுதே! நீ விடியாதே!” என்று!
“ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா”
அதிகாரம் - 133 - ஊடலுவகை; பாடல்கள் - 1324, 1329
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்