பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 190 / 300

குணமென்னுங் குன்றேறி

அச்சுப் பக்கம் 408409 · ஸ்கேன் 425426 · அதிகாரம் 3 (நீத்தார் பெருமை) — குறள் 29

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

நற்குணங்கள் அனைத்தும் கொண்ட பொற்குன்றமாகத் திகழ்பவர்தான் முதியவர் முகிலன்! அவர் அறிவுரைகேட்டு நடந்திட, அந்த ஊரே அவர் இல்லத்தின் முன் நிற்கும். அவருக்கு வாய்த்த துணைவியும் அந்த ஊருக்கே மூதாட்டியாக விளங்குகிற நல்லம்மை! ஊரில் எந்த வீட்டில் நடக்கும் இன்ப நிகழ்ச்சி, துன்ப நிகழ்ச்சியாயினும் முகிலனும் நல்லம்மையும் அங்கு முன்னிலை வகிக்காமல் இருக்கமாட்டார்கள். அந்த நல்லார் இருவருக்கும் பிறந்த செல்வனோ, தாய்தந்தையர் பெருமையைக் குலைத்திடும் தீயோனாகத் திரிந்திடுகின்றான் என்ற பொல்லாத நிலை! பெற்றோர் சூட்டிய நல்லான் என்ற பெயரை அவனே மாற்றி விட்டு, வல்லான் என வைத்துக்கொண்டான். முகிலனும் நல்லம்மையும் தங்களுக்கு வாய்த்த பிள்ளையைத் திருத்திட பெரும் பாடுபட்டு, முடியாத காரணத்தால் அவன் மனம்போல் விட்டுவிட்டனர்.

வல்லானின் வன்முறைச் செயல்கள், ஒழுக்கக்கேடுகள், அந்த ஊரார் அறிந்ததாயினும் அவற்றைப் பெரிதுபடுத்தாது, அவன் தந்தையார் முகிலனிடம் தனித்தோர் மரியாதை காட்டி வந்தனர்.

ஒரு நாள், தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த முகிலனை, பக்கத்து வீட்டுக் காளைமாடு பாய்ந்துவந்து முட்டித் தள்ளியது! விலாப்புறம் குருதி கொட்டியது முகிலனுக்கு! தெருவில் உள்ளோர் அந்த மாட்டைத் தாக்கிடத் தொடங்கினர். அதைத் தடுத்து நிறுத்தி - “வாயற்ற உயிர்! அதையேன்வதைக்கிறீர்கள்?” எனக் கேட்டுத் தனது குண நிறைவைக் காட்டிக் கொண்டவர்தான் அந்தப் பெரியவர்!

இன்னொரு முறை, குறும்புக்காரச் சிறுவர்கள் சிலர் கூடிக்கொண்டு அவர் மீது சேற்றை வாரி வீசிவிட்டனர். அந்தச் சிறுவர்களின் பெற்றோர், செய்தி கேள்வியுற்று அவர்களைத் தங்கள் வீட்டு தூண்களில் கட்டிப் போட்டனர். தகவல் அறிந்ததும் அந்தத் தங்கக் குணநலனார், விரைந்தோடிச் சென்று, “அறியாக் குழந்தைகள்

விளையாடினர்! அதற்காக இப்படியொரு தண்டனையா? வேண்டாம்! வேண்டாம்!” எனக் கூறி, சிறுவர்களை அவிழ்த்துவிட்டு அவர்தம் உச்சியிலே முத்தமிட்டு, தன்னால் அவர்களுக்குற்ற தொல்லைக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

“ஊருக்குப் பெரிய மனிதர்! இவர் மகன் மட்டும் ஊதாரியாகத் திரிகிறானே!” இவ்வாறு, அவர்பால் அழுக்காறுகொண்ட இரண்டொருவர் ஊர்ப்பொது மண்டபங்களில் பேசியது அவர் செவிகளில் விழுந்தபோதுகூட, தனது நிலையை நொந்து கொண்டாரே தவிர பேசியவர்கள் மீது கோபங் கொள்ளவில்லை, அந்தக் குணக்குன்று!

ஒரு நாள், இப்படியென ஒரு செய்தி வந்தது! முகிலனின் முரட்டு மகன் அந்த ஊர்க்கோயில் சிலையொன்றைத் திருடிக் காவலரிடம் சிக்கிக் கொண்டான், என்று!

சினத்தால் முகம் சிவந்தறியாத முகிலனின் முகம், செந்தணல்கூட மாயிற்று! “சிலை திருடியவனைக் கொலை செய்துவிட்டுத் திரும்புகிறேன்” என்று புலிக்குரல் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார், கையில் கொடுவாளுடன்!

தெருவில் உள்ளோர், “என்னம்மா! பெற்ற மகனைக் கொன்று குவிக்கப் போகிறாரா! தடுக்காமல் நிற்கிறீர்களே?” என்று நல்லம்மையைச் சூழ்ந்துகொண்டு கேட்டனர்.

“சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே; அதுபோல இன்று நடக்கப் போகிறதே - மகனையும் இழந்து, மணவாளனையும் மரண மேடைக்கு அனுப்பப் போகிறீர்களே” - என்று அனைவரும் துடித்தனர்.

நல்லம்மை, அமைதியாக அவர்களுக்குப் பதில் அளித்தாள்!

“என் கணவர் குணமென்னும் குன்றேறி நிற்பவர்! அவருக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை அவரால் நீண்டநேரம் நெஞ்சில் வைத்துக்கொள்ள முடியாது! கணநேரம்கூட அந்தக் கோபம் தங்காது! கோபம் குறைந்து மறைந்து இப்போதே திரும்பி விடுவார் பாருங்கள்!”

நல்லம்மையின் இந்தப் பதிலைக் கேட்டு, ஒருவர் சொன்னார்:

“அம்மா! குணக்குன்றுகளான பெரியவர்களின் கோபத்தை, கோபிக்கப்பட்டவர்களால் கணநேரங்கூடத் தாங்கிக் கொள்ள முடியாது என்பார்களே, அப்படித்தானே குறள்கூடக் கூறுகிறது!”

இப்படிக் கேட்டவருக்கு, நல்லம்மை சொன்ன பதில் பின்வருமாறு:

“அப்படியல்ல! பெரியவர்களுக்குரிய குண நலன்களில் ஒன்று; அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிற கோபம் - கணநேரங்கூடத் தங்காமல் மறைந்துவிடும் என்பதுதான்! அதோ பாருங்கள், கொண்ட கோபத்தைக் காத்திட முடியாமல் என் கணவர் திரும்பி வருகிறார்.”

முகிலன் திரும்பி வந்துவிட்டார்! “காவலர் கையில் சிக்கிவிட்டான்! நீதிமன்றம் அவனுக்குத் தரவேண்டிய தண்டனையைத் தந்துவிடும்... நான் திரும்பிவிட்டேன்.” எனக் கூறியவாறு, கையிலிருந்த கொடுவாளைக் கீழே வீசி எறிந்தார் முகிலன்.

ஊரார், பெருமூச்சுடன் நிம்மதியாகக் கலைந்து சென்றனர்.

“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது”

அதிகாரம் - 3 - நீத்தார் பெருமை; பாடல் - 29

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்