பொருளடக்கம் 189 / 300
வினைவலியும் தன்வலியும்
அச்சுப் பக்கம் 406–407 · ஸ்கேன் 423–424 · அதிகாரம் 48 (வலியறிதல்) — குறள் 471
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
மக்கள் ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்ட ஒருவன், நாட்டாண்ட மன்னனுக்கு மாசு கற்பித்து, மக்களையும் தன்வயப்படுத்திக் கொண்டு, திடீரெனத் தாக்குதல் நடத்தி நாட்டையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டுவருகிறான். போரில் விழுப்புண் பெற்ற பழைய மன்னன், பகைவனின் காலடியில் வீழ்ந்து விட்ட தனது நாட்டை மீட்டே தீருவேன் எனச் சூளுரைத்து, மலைக்கோட்டை யொன்றில் வாழ்ந்து வருகிறான்.
பகைவனோ, தன் ஆளுகையின்கீழ் வந்த நாட்டு மக்களுக்கு நலம் விளைக்கும் திட்டங்கள் எதுவும் வகுப்பது பற்றி அக்கறை கொள்ளாது மட்டுமல்ல; நலிவு தரும் செயல்கள் பலவற்றைச் செய்து வருகிறான். பகைவனின் சிந்தனை முழுவதும் பழைய மன்னன் வாழ்ந்துகொண்டிருக்கிற மலைக்கோட்டையையும் கைப்பற்றி, அந்த மன்னனையும் அவனைச் சார்ந்த உறுதிமிக்கப் படை வீரர்களையும் உருத்தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்பதுதான்.
புதிய மன்னன் ஆட்சி, காட்டாட்சியாக இருப்பதை உணர்ந்து மக்கள் பதைத்தனர். புதியவனின் படைத்தளபதிகள், நாள்தோறும் நாட்டில் நடத்திடும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமற்போயின. அவனை நத்திக்கிடப்போர் சிலர் தவிர, அறிவுத் தெளிவு படைத்தோர் அனைவருமே புதியவனின் போலித்தனத்தைப் புரிந்து கொண்டனர். தெளிவற்ற மக்கள் பகுதியினரையும் தனக்குத் தெண்டனிட்டு வாழ்வோரையும் பயன்படுத்திக் கொண்டு, கருவூலத்து நிதியனைத்தையும் படைக்கலன்களையும் படை வீரர்களையும் பெருக்கிடவே செலவிட்டுத் தொடர்கிறான் புதிய மன்னன்.
மலைக்கோட்டையிலிருந்த மன்னனிடம், அவனைச் சுற்றியிருந்த தளபதிகளும் வீரர்களும் முறையிட்டனர். “நமது நாடு காடாகிறதே வேந்தே! நாட்டையும் மக்களையும் காத்திட நமது உயிர் குறித்துக் கவலைப்படாமல், இப்போதே புதிய மன்னனின் கோட்டையின்மீது போர் தொடுத்திடுவோம். ஆணையிடுக!” என்று கூறினர். மன்னன், புன்னகை புரிந்தவாறு அவர்களுக்கு விளக்கமளித்தான்.
“உயிரைப் பற்றிக் கவலைப்படுகிறவனா நான்? என் உயிரோ உங்கள் உயிரோ போர்க்களத்தில் இழக்கப்பட்ட பிறகும்கூட நாட்டுமக்களின் நலிவு தொலைய வில்லையென்றாலோ - அந்த நரிக்குணம் கொண்டவனே தொடர்ந்து நாட்டை நாசமாக்கிக் கொண்டிருப்பான் என்றாலோ - அதனால் என்ன பயன் என்பதைச் சிந்தித்துப் பார்த்திடுங்கள்! என் அன்புக்குரிய வீரர்களே! போர் மீண்டும் மூளத் தான் போகிறது. பகைவனைக் களத்தில் சந்திக்கத்தான் போகிறோம். அதற்கிடையே வள்ளுவர் கூறியுள்ள நான்கு வகை வலிமைகளையும் ஆராய்ந்து, அதன் பிறகே களத்தில் இறங்க வேண்டும்.”
ஒரு தளபதி, பணிவாகக் கேட்டான்:
“மன்னவா! குருதி வெள்ளம் திரண்டோடும் களத்தில் வாள் வீசிப் பகைவர் தலைகளைப் பந்தாடிடப் பயின்றவன் நான்! வள்ளுவரைப் பயின்றதில்லை. வலிமை பற்றிய வகை நான்கு வகுத்திருப்பதாகச் சொன்னீர்களே; என்னவென்று அறிந்து கொள்ளலாமா?”
மலைக்கோட்டைவாழ் மன்னன், படைத் தளபதியின் முதுகைத் தட்டிக் கொடுத்து முறுவலித்தவாறு விடையளித்தான்.
“நாம் நடைமுறைப்படுத்த இருக்கும் செயலின் வலிமை எத்தகையது என்பதை ஆராய்ந்து, அந்தச் செயலை வலிமை பொருந்தியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்ததாக, அந்தச் செயல் புரியத் தொடங்கும் நமது வலிமையை உணர்ந்து பார்த்து, அது போதுமானதாக இல்லாவிட்டால், மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும். மூன்றாவதாகப் பகைவனுடைய வலிமையைக் குறைத்துக் கணக்கிட்டுவிடக் கூடாது. சூது, சூழ்ச்சி, இவற்றையும்கூட அவன் படைக்கலன் களாகக் கொண்டவன் என்பதை மறந்துவிடக் கூடாது. மக்களின் அறியாமையை ஆயுதமாகக் கொண்டே முதலில் நம்மை வென்றான் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். அவற்றுடன், அவனிடமுள்ள படை வலிமையையும் நாம் சரியாகக் கணக்கிட வேண்டும். நான்காவது மிக முக்கியம். அவனுக்குத் துணையாக இருக்கும் மன்னர்கள் யார்? நமக்குத் துணையாக இருக்கும் மன்னர்கள் யார்? அந்தத் துணையின் வலிமையை நாம் உணர வேண்டும். ஆம்; வலிமைவாய்ந்த மன்னர்களின் துணை நமக்கு வேண்டும். இந்த நாலு வகை வலிமையையும் ஆராய்ந்து, அதன் பின்னர் எடுக்கும் முடிவுதான் போரில் நமக்கு வெற்றி தரும்! அஞ்சாதீர்கள்! அந்த வெற்றி முகட்டை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.”
மன்னன் தந்த குறள் விளக்கம், மலைக்கோட்டையில் உள்ள அவனைச் சார்ந்தோர் அனைவரையும் சிந்திக்க வைத்தது; செயல்பட வைத்தது.
செயலின் வலிமை சேர்த்தனர். மாற்றான் வலிமையைக் குறைத்திட முனைந்தனர். தங்கள் படை வலிமையை வளர்த்தனர். வலிமை மிக்க துணைகளைப் பெற்றுக் கொண்டனர்.
போர் மூண்டது! புதிய மன்னன் வீழ்ந்தான்! நல்லாட்சி மீண்டும் தோன்றியது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்”
அதிகாரம் - 48 - வலியறிதல்; பாடல் - 471
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்