பொருளடக்கம் 188 / 300
அ. நன்னீரை வாழி / ஆ. முறிமேனி முத்தம்
அச்சுப் பக்கம் 404–405 · ஸ்கேன் 421–422 · அதிகாரம் 112 (நலம்புனைந்துரைத்தல்) — குறள் 1111, 1113
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“மல்லிகையே வெண்சங்காய் வண்டே” எனப் புகழேந்திப் புலவர் பாடியபோது, அந்தப் பாட்டின் பொருளையே ஒட்டக்கூத்தர் மறுத்தார் என ஒரு கற்பனைக் கதையுண்டு. “மல்லிகை மலரை வெண்சங்கு போல வண்டு ஊதுகிறது” என்பது புகழேந்தியின் கற்பனை! வண்டு, மல்லிகையில் அமர்ந்திருக்கிற காட்சி, வெண்சங்கை ஊதுவதுபோலத் தோன்றுகிறதாம், புகழேந்திக்கு!
அதை மறுத்து ஒட்டக்கூத்தர் எடுத்துவைத்த கருத்து என்ன தெரியுமா? “சங்கினை ஊதுபவர்கள், அதன் பின்புறத்தில் அல்லவா உதடுகளைக் குவித்து ஊதுவார்கள்; வண்டு மல்லிகையின் முன்புறத்தில் அல்லவா ஊதுகிறது! இந்தக் கற்பனை எப்படிப் பொருத்தமாகும்?” இவ்வாறு கூத்தர் கேட்டாராம்! சட்டென்று புகழேந்தி அதற்குப் பதில் சொன்னார்.
“வண்டு, மதுவருந்திய மயக்கத்தில் மல்லிகையெனும் அந்தச் சங்கின் முன்புறமெது - பின்புறமெது - என்று தெரியாமல் ஊதுகிறது.”
புகழேந்தியின் இந்தப் பதில் கேட்டு புலவர் பெருமக்கள் மகிழ்ந்தனராம்! மலர்த்தேன் உண்ட மயக்கத்தில் வண்டினமே அந்தப் பாடுபடும்போது, காதல் தேனுண்ட ஆடவர் எப்பாடு படுவர் - எப்படியெல்லாம் முன்னுக்குப் பின்னாகக் காம மயக்கத்தில் பேசிடுவர் - என்பதை வள்ளுவர், சில குறட்பாக்கள் வழியாகக் காட்டுகிறார்.
இளங்காளை - இன்ப அருவியில் நனைந்து, நனைத்தவளை நினைந்து மகிழ்பவன் - அனிச்சப்பூவைக் காண்கிறான். அந்தப் பூவின் மென்மையைப் புகழ்ந்து வாழ்த்துகிறான். உடனே அவனுக்கு அனிச்சமலரை அவனது காதலியுடன் ஒப்பிட்டுத் தோன்றுகிறது. “நீ மென்மையாக இருக்கிறாய்! வாழ்க! ஆனால், என் காதலி உன்னைவிட மென்மையானவள்” என்று கூறுகிறான்.
“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்”
இப்படி அவன் அனிச்சமலர் நோக்கித் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும்பொழுது, அவன் காதலி எதிரே வருகிறாள். வந்தவளின் விழிகள், அவன் மீது பாய்கின்றன. இளநகை புரிகிறாள். அருகே நெருங்குகிறாள். அவள் தோளைப் பற்றுகிறான். தழுவுகிறான்.
தழுவும்போது சொல்கிறான்: தளிரே உன் மேனியென்று! தோளைப் பற்றும் போது, இள மூங்கில் எழிலுடையாள் என வர்ணிக்கிறான்! புன்னகை கண்டு பூரித்து, முத்துக்களே பற்கள் என்கிறான்! நெருக்கம் அதிகமாகிறபோது, இனிய நறுமணம் கமழும் ஏந்திழை எனப் பாராட்டுகிறான்! தன்னைக் கவர்ந்திழுக்கும் மை உண்ட அந்தக் கண், வேல் போன்றது என வியப்புத் தெரிவிக்கிறான்!
அனிச்சமலரைவிட மென்மையானவள் என அவனால் புகழப்பெற்ற அந்தக் காதலி, இப்போது அவன் கற்பனையில், வேல் தாங்கிய விழியினளாகத் தோன்றுகிற விந்தைதான் என்ன?
“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு”
மதுவுண்ட வண்டுக்கு மல்லிகைச் சங்கின் முன்பின் தெரியாமற் போனது போலவே, காதல் போதையில் சிக்குண்ட காதலனுக்கும் அனிச்சத்தைவிட மென்மையானவள் என்று சொன்ன காதலியை, வேல் விழிகொண்டவள் எனக் கூறுகிறோமேயென்ற முரண்பாடு தெரியாமற் போய்விட்டது போலும்!
அதிகாரம் - 112 - நலம்புனைந்துரைத்தல்; பாடல்கள் - 1111, 1113
முறி = தளிர் முறுவல் = பற்கள் முத்தம் = முத்து வெறிநாற்றம் = நன்மணம் வேய் = மூங்கில்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்