பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 187 / 300

அ. ஏற்றிற் குரியர் / ஆ. மக்களே போல்வர்

அச்சுப் பக்கம் 401403 · ஸ்கேன் 418420 · அதிகாரம் 108 (கயமை) — குறள் 1080, 1071

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

குறள் வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்த இளங்கோ, இளந் தோழர்களுடன் விளையாடிக் களித்துவிட்டு முகம், கை, கால் கழுவிக்கொண்டு விளக்கடியில் அமர்ந்து, ஆசிரியர் அன்று கற்றுத்தந்த குறட்பாக்களுக்கான பொருள் விளக்கங்களைப் படித்து முடித்தான்.

அவனை அன்புடன் அழைத்து உணவு பரிமாறினாள் அன்னை. தாயின் அருகிலேயே படுத்துக்கொண்ட அந்த இளங்கொழுந்தின் சிந்தனையில் குறட்பாக்கள் பற்றிய விளக்கங்கள் நிழலாடிக் கொண்டிருந்தன. பெற்றவளின் கரங்கள், மென்மையாக அவன் தோள்பட்டையைத் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தன. உறக்கம் இளங்கோவின் இமைக்கதவுகளை மெதுவாக மூடிற்று. கண்ணுறங்கும் அந்தக் கற்கண்டுச் செல்வனைக் கனவுலகம் இரு கையேந்தி எடுத்துச் சென்றது.

எதிரே வள்ளுவர் நின்றார். அவனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.

விரிந்து பரந்த நெற்றி, விழிகளில் ஒளிவெள்ளம், அள்ளிச் செருகி முடிந்து போட்ட தலைமுடி, அகன்ற மார்பகம் வரையில் நீண்டு வளர்ந்த அழகான தாடி, நீளமான விரல்களின் இடையே உள்ளங்கையில் உறவாடும் ஓலைச் சுவடி, கனிவு நிறைந்த புன்னகை.

இளங்கோ ஓடிச் சென்று அந்தத் தமிழ் மலையின் அடிவாரத்தில் விழுந்து வணங்கினான். குழந்தாய் என்று கொஞ்சுமொழி கூறியவாறு இளங்கோவை

வாரியணைத்துக் கொண்டார் வள்ளுவர். “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டுக் கொண்டே அவன் உச்சியில் முத்தமிட்டார்.

“நான் கயவனைப் பார்க்க வேண்டும். நீங்கள் அவனை எனக்குக் காட்ட வேண்டும்.”

இளங்கோ இப்படிச் சொன்னதும் வள்ளுவர் கலகலவென நகைத்தார்.

“உலகில் காணவேண்டியவைகள் எத்தனையோ இருக்க, உனக்கு ஏனப்பா இந்த வேடிக்கையான ஆசை!”

“நாளைக்குக் குறள் வகுப்பில் என் ஆசிரியர், கயவர் யார் என்று காட்டுகிறேன் எனக் கூறியிருக்கிறார். அதற்குள் நான் அவனைப் பார்த்துவிட்டால் ஆசிரியர் பாடம் சொல்லும்போது - கயவன் எப்படியிருப்பான் என்று நான் முந்திக் கொண்டு கூறி, ஆசிரியரின் பாராட்டைப் பெற்று விடுவேன். அதனால்தான் கேட்கிறேன், வள்ளுவப் பெரியவரே! அவனை எனக்குக் காட்டுங்கள்.”

“அப்படியா சரி! சரி! என்னுடன் வா!”

வள்ளுவர், இளங்கோவை அழைத்துக்கொண்டு போனார். வானத்தில் வண்ண வண்ண வடிவங்கள்! நுரை கடலின் அலையைப் போல் முகிற் கூட்டங்கள்! அனைத்தையும் கடந்து வள்ளுவர் பின் சென்றான் இளங்கோ.

“அதோ பார் குழந்தாய்” என்று சுட்டிக் காட்டினார். இளங்கோ, ஆவலுடன் அவர் காட்டிய திக்கை நோக்கினான்.

மகுடம் புனைந்த மன்னன் ஒருவன்; அவன் காலடியில் மண்டியிடும் மற்றொருவன். மண்டியிட்டுக் கிடப்பவன் பேசுவது இளங்கோவின் காதில் விழுகிறது.

“மன்னா! என்னை மன்னித்து விடுக! எங்கள் குலம் காக்கும் போரில் நான் ஒரு தளபதியாக இருந்தேன். எங்கள் குலத்தலைவராம் எமது மன்னரின் கோட்டையை முற்றுகையிட்டு, அதனைத் தரைமட்டமாக்கத் திட்டம் தீட்டி விட்டாய்! அதை எதிர்த்துத் தாக்க வந்த முதல் படையின் தளபதியாகிய எனக்கு, உனது பெரும்படையைக் கண்டதும் அச்சம் ஏற்பட்டுவிட்டது. போரில் எனக்கு விளையும் துன்பத்தைத் தாங்குவது என்பது என்னால் இயலாது!”

“எதிரிப்படையின் தளபதியே! இப்போது என்ன கூறுகிறாய்? உன் முடிவுதான் என்ன?” அந்த மன்னன் சீற்றத்துடன் கேட்கிறான்.

மண்டியிட்டவன் சொல்கிறான்: “என்னை உனக்கு விற்றுவிட்டேன் வேந்தே!” என்று!

மன்னன், அவனைத் தட்டிக் கொடுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். இந்தக் காட்சியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவிடம் வள்ளுவர்:

“குழந்தாய்... எதற்கு உரியவர் கயவர் தெரிகிறதா? ஒரு துன்பம் வந்த காலத்தில் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர். அந்தக் கயவரில் ஒருவனே இவன்! நன்றாகப் பார்த்தாயா?”

“எற்றிற் குரியவர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து”

இந்தக் குறளையும் வள்ளுவர் கூறினார். இளங்கோவின் ஆவல் அடங்கவில்லை.

“கயவனும் மனிதனைப் போலவே இருக்கிறானே” என்று வியப்புடன் கேட்டான்.

“ஆம் குழந்தாய்! கயவரும் மக்களைப் போலத்தான் இருப்பார்கள். வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் காணமுடியாத தோற்றத்து ஒப்புமை மனிதரைப் போலத் தோன்றும் கயவரிடத்திலேதான் உண்டு. இதோ, இவன் உருவத்தில் மனிதன்! உள்ளத்தில் கயவன்! இது பற்றியும் குறட்பா உண்டு; கூறுகிறேன் கேள்:

“மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல்”

இளங்கோ விழித்துக் கொண்டான். கனவு கலைந்தது. “அம்மா! அம்மா! கயவனும் மனிதனைப் போலத்தானம்மா இருக்கிறான்!” என்று கூவினான்.

அவன் தாய், “தூக்கத்திலேகூட குறள் பாடந்தானா? காலையில் பேசிக் கொள்ளலாம் தூங்கு” என்று தட்டிக் கொடுத்தாள்.

அதிகாரம் - 108 - கயமை; பாடல்கள் - 1080, 1071

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்