பொருளடக்கம் 186 / 300
இன்கண் உடைத்தவர்
அச்சுப் பக்கம் 399–400 · ஸ்கேன் 416–417 · அதிகாரம் 116 (பிரிவாற்றாமை) — குறள் 1152
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அழகுமிகும் மணிமாட வீதியது! பகல் முழுவதும் தொடர்ந்து, பாதி இரவு முடியுமட்டும் நடமாடும் நம்பியர்கள், நங்கையர்கள், பண்டங்களைச் சுவைத்துவிட்டு வீசியெறிந்த இலைகளின் குப்பை, வீதியெங்கும் பரவிக் கிடக்கிற காட்சி! அசையாது கிடக்கும் இலைகளையும் கூளங்களையும் அசைத்து விளையாடிக் காலைக்காற்று குதியாட்டம் போடுகிறது! கழனிகளில் இருந்து இல்லம் நோக்கி எருதுகளை ஓட்டிப்போவர் மாலை நேரத்தில்; அவை கழிக்கும் சாணம், ஆங்காங்கு சிதறிக் கிடக்கிறது. மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆயர்கள் ஓட்டிவரும் பசுக்கள், அவற்றின் வாயிலிருந்து சிந்திய புல்லைத் திரும்பிப் பாராது செல்லும் காரணத்தால் அந்த வீதியில் ஆங்காங்கு பச்சைத் திட்டுகள்.
காலை மலர்ந்ததும் வீதியை அழகுபடுத்தும் கடமையாற்றிட கையில் நீண்ட துடைப்பக் கம்புடன் வழக்கம்போல் வைகை வந்தாள். அவள் வருமட்டும் காத்திருந்து - வந்தவுடன் வீதி கூட்ட வந்துவிட்டான் வடிவழகன்!
ஒரு முனையிலிருந்து வைகை, வீதியைத் தூய்மைப் படுத்திக் கொண்டு குப்பைக் கூளங்களை அள்ளிக் கூடையில் போட்ட வண்ணம் பணியைத் தொடங்கி நடத்தினாள்.
மற்றொரு முனையிலிருந்து வடிவழகன், வீதியிற் குவிந்துள்ளவற்றை அகற்றியவாறு அவளருகே நெருங்கிக் கொண்டிருந்தான்.
நாள்தோறும் இருவரும் அந்த வீதியில் தூய்மைப் பணியாற்றி வருகின்றனர். எனினும் - அவர்களையும் மீறி அவர்கள் கண்கள் பேசிக் கொள்ளத் தலைப்பட்டன.
பெற்றோர்க்கு அடங்காத பிள்ளைகளைப்போல அவர்களின் விழிகள் மட்டுமல்ல; நெஞ்சங்களும் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஒன்றையொன்று நெருங்கிக் கொண்டிருந்தன.
அன்றைக்கு என்னவோ, வீதியைப் பெருக்கிக் கொண்டே வந்தவன், குப்பைக் கூடையைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ள முடியாமல் வைகை, சற்றுத் திணறுவதைக் கண்ணுற்றான். அதைவிட வேறு வாய்ப்பு வேண்டுமா? துணை புரியச் சென்றான்.
குப்பைக் கூடையைத் தூக்கி அவள் தலையில் வைத்தான். அவளை, அவள் பொலிவுமிக்க அங்கங்களை, மிக நெருக்கமாக காணும் பேறு பெற்றான். அவன் பார்வை, அவள் மேனி முழுவதும் படர்ந்தது. அந்தப் பார்வை, அவளை அப்படியே தூக்கி இன்பச் சிகரத்தில் அமர்த்திவிட்டது.
கூடையுடன் நகர்ந்தாள். அவளது கடைக்கண், அவனைத் தொடர்ந்து வருமாறு கட்டளையிட்டதாக அவன் கருதிக் கொண்டான். விலங்கு மாட்டி இழுத்துச் செல்லப்படும் கைதி தப்பிக்க முடியாததுபோல், அவளது விழியில் சிக்குண்ட வடிவழகன், அவள் பின்னாலேயே போனான்.
குப்பையைப் பெரும் பள்ளமொன்றில் கொட்டிவிட்டு - திரும்பிப் பார்த்தாள். வடிவழகன் பார்வை அவளையே மொய்த்துக் கொண்டிருந்தது. அந்தப் பார்வை தரும் இன்பத்தை, அவள் தனக்குள்ளாகவே வியந்து கொண்டாள்.
அவளது விரல்களைத் தனது விரல்களால் பற்றினான். இப்போது அவள், பின்னால் சென்றாள். குப்பைப் பள்ளத்தையடுத்துப் பெரும் புதர் ஒன்று!
புதர் மறைவில் அவளை அழைத்துச் சென்றான். நாணித் தலைகுனிந்து நின்றாள், தழுவினான். அந்தத் தளிர்மேனி நடுங்கியது. அவள் கண்கள் சுற்றுமுற்றும் சுழன்றன. யாருமில்லை.
வீதி பெருக்கிடுவோர் இருவரும் வீணையும் நாதமுமாகிவிட்டனர்.
அவன் தன்னைப் பார்த்தபோது அவளுக்கு ஏற்பட்ட இன்பக்கிளுகிளுப்பு, அவனைத் தழுவிக்கிடந்தபோது அவளுக்கு இல்லை! மாறாகத் துன்பத்தால் துவண்டாள்! என்ன துன்பம் அது!
“ஆகா! அவர் என்னைப் பார்வையால் விழுங்கியது எனக்கு இன்பமூட்டியது! இப்போது அவரைக் கூடியிருக்கிறபோது அவர் என்னைப் பிரிந்து போகக் கூடுமேயென்ற அச்சம்; எனக்குப் பெருந்துன்பத்தையல்லவா அளிக்கிறது!”
இப்படிக் கவலைப்படுகிறாளாம் அவள்!
அதற்கு இதோ குறள்:
“இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு”
அதிகாரம் - 116 - பிரிவாற்றாமை; பாடல் - 1152
புன்கண் = துன்பம் இன்கண் = இன்பம் பார்வல் = பார்வை
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்