பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 185 / 300

கெடுவல்யான் என்பது

அச்சுப் பக்கம் 397398 · ஸ்கேன் 414415 · அதிகாரம் 12 (நடுவுநிலைமை) — குறள் 116

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“பசுவின் கன்றின்மீது பாராளும் வேந்தனின் மகன் தேரை ஏற்றி விட்டானாம்! கன்று மாண்டது கண்டு கதறியதாம் தாய்ப்பசு! பசுவின் வேதனையை உணர்ந்த சோழமன்னன், தனது மகனையே தேர்க்காலில் படுக்க வைத்து அவன்மீது தேரைச் செலுத்தினானாம்! இதெல்லாம் என்ன நடக்கக்கூடியதா?” என்று நகைத்தவாறு கேட்ட நண்பன் நலங்கிள்ளியின் முதுகில் தட்டியவாறு, “நடக்காத கற்பனைக் கதையாகக்கூட இருக்கலாம்; ஆனால், அந்தக் கதை விளக்கும் ஆழமான கருத்தொன்று இருக்கிறதே, அதனை மறந்து விடாதே!” என்றான் மறைமுதல்வன்!

“என்னப்பா ஆழமான கருத்து?”

“நாட்டுக்கு - சமுதாயத்திற்கு - ஏன் - ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான கருத்து அஃது!”

“முன்னுரை இருக்கட்டும்! முடிவுரையை எழுதுக!”

“எழுத்தத்தான் போகிறேன்! ஒருவனைப் பார்த்து நீ விரைவில் கெட்டுப் போகிறாய் என்று கூறிவிட முடியும், தெரியுமா?”

“ஓ! ஆரூடம் கற்றுக் கொள்கிறாயா?”

“அந்த மூடநம்பிக்கையெல்லாம் என்னை அண்டியதே இல்லை! இப்போது உன்னைக்கூடச் சொல்ல முடியும்; நீ விரைவில் கெடுவாய் என்று!”

“எப்படி? ஏன்?”

“அதுதான் வள்ளுவர் வாக்கு!”

“அதைத்தான் விளக்குக என்கிறேன்!”

“உன் தம்பியை நம்பியிருந்த ஒருத்தி - ஆம்; இளஞ்சிட்டு - அவனால் கைவிடப்பட்டு இறுதியில் இறந்தாளா, அல்லது கொல்லப்பட்டாளா என்று தெரியாமலே புதைக்கப்பட்டுவிட்டாள் அல்லவா?”

“கொல்லப்பட்டாளா?”

“வியப்புத் தோன்ற விழிகளை உருட்டாதே! அதனை விசாரித்து, உண்மையை ஊருக்கு அறிவித்து, உன் தம்பியையும் தண்டிக்க வேண்டிய ஊர்த் தலைவன் பொறுப்பிலே நீ இருக்கிறாய்! ஆனால் நீயே கேட்கிறாய்; கொல்லப்பட்டாளா என்று! இன்னும் சிறிது நேரம் போனால், உன் தம்பியும் அவளும் காதலித்தார்களா என்றுகூடக் கேட்பாய்! பருவமயிலைப் பாழ்படுத்திப் புதைகுழிக்கும் அனுப்பியதுமல்லாமல், அந்த மங்கையைப் பெற்றோரையும் மிரட்டி உண்மையை இருட்டில் தள்ள முயற்சிகளை மேற்கொள்கிறாய்! அதனால்தான் சொல்கிறேன், பசுவின் கன்றுக்காகத் தன் மகனையே பலியிடத் துணிந்த சோழன் கதையில் ஆழமான கருத்து இருப்பதாக!”

மறைமுதல்வன் சொற்கேட்டு நலங்கிள்ளி, தலை குனிந்து நின்றான். மறைமுதல்வன் தொடர்ந்து பேசினான்:

“நண்பன் என்ற முறையில் இப்போதும் கூறுகிறேன்! தனக்குக் கேடு வரப்போகிறது என்பதை ஒருவன் முன்கூட்டி அறிந்து கொள்ள வேண்டுமாயின், அவனுடைய நெஞ்சம் நடுவு நிலைமை நீங்கித் தவறு செய்ய நினைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால்போதும்! ஆருடக்காரனின் வாக்கை வெல்லும் அறிவார்ந்த வாக்கு - அதனிலும் மேலான வாக்கு - அன்றே அருளிச் செய்துள்ள வள்ளுவர் வாக்கு!”

இப்படி எச்சரித்துவிட்டு நண்பன், குமுறிக்கொண்டே போய்விட்டான். நலங்கிள்ளியின் நெஞ்சம் நடுங்கியது; கேடு வரப் போவதை அறிந்து!

“கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்”

அதிகாரம் - 12 - நடுவுநிலைமை; பாடல் - 116

நடுஒரீஇ = நடுநிலை நீங்கி அல்ல செயின் = தவறு செய்தால்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்