பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 184 / 300

நெடும்புனலுள் வெல்லும்

அச்சுப் பக்கம் 395396 · ஸ்கேன் 412413 · அதிகாரம் 50 (இடம் அறிதல்) — குறள் 495

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

சோவியத் ருஷ்யாவை உருவாக்கிய லெனின் என்ற மாவீரனுக்குப் பிறகு அந்தப் பொதுவுடைமைப் பூமியைக் கட்டிக்காத்த பெருமை ஸ்டாலினுக்கு உண்டு. இட்லரின் மிகப்பெரும் படையெடுப்பிலிருந்து நாட்டையும் காத்து, பொதுவுடைமைத் தத்துவத்தையும் காப்பாற்றியவர் ஸ்டாலின்! அவர் மறைவுக்குப் பிறகு மாலங்கோவும், அவரை வீழ்த்திவிட்டு குருஷேவும் தலைமைப் பொறுப்பேற்றனர். குருஷேவ், ஸ்டாலினை விமர்சிப்பதில் பெரும் பொழுதைக் கழித்தார்.

ஒரு முறை கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்றக் கூட்டத்தில், குருஷேவ் மறைந்த ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குகளைக் குறித்து கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஒருவர் குறுக்கிட்டு, “ஸ்டாலினின் சர்வாதிகார முறைகேடுகள் நடைபெற்றபோது அதனைத் தட்டிக் கேட்காமல் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” எனக் கேட்டாராம். கேட்டவரை குருஷேவ் சினத்துடன் நோக்கினாராம்! கேட்டவர் மெளனமாகி அடங்கி உட்கார்ந்து விட்டாராம்! குருஷேவ் அமைதியாக, “இதைத்தான் நானும் செய்து கொண்டிருந்தேன்” என்று பதில் அளித்தாராம். இப்படி குருஷேவ் காலத்தில், மேற்கூறப்பட்ட செய்திகள் வருவதுண்டு.

மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் லெனின் உடலும் அருகே ஸ்டாலின் உடலும் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. குருஷேவுக்கு ஸ்டாலின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ஸ்டாலினின் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உடலை அகற்றி விடுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆணையும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு விட்டது.

ஸ்டாலின் பெயர்கள், சின்னங்கள், சிலைகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டன; அகற்றப்பட்டன.

இத்தனையும் செய்த குருஷேவ், ஓரிரு ஆண்டுகளில் அவரது கட்சியினராலேயே பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

அவர் எங்கு போனார், என்ன ஆனார் - என்ற விவரங்களே தெரியாமல் இருந்தது.

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு செய்தி வந்தது; சோவியத்தில் நடைபெற்ற தேர்தல் ஒன்றில், எங்கேயோ ஒரு வாக்குச் சாவடியில் குருஷேவ் வாக்களிக்க வந்தார் என்றும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை யென்றும் அந்தச் செய்தி குறிப்பிட்டது.

பின்னர் அவர் இறந்துபோன செய்திகூட ஏடுகளில் இருட்டான ஒரு மூலையில் மிகச் சிறிய அளவில் வெளியிடப்பட்டது.

உலகத்து ஏடுகளில் எல்லாம் ஒரு காலத்தில் முதல் பக்கம் - முழுப் பக்கத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த குருஷேவின் மரணச் செய்திக்குக் கிடைத்த மரியாதை அவ்வளவுதான்!

நீரில் இருக்கும் வரையில்தான் முதலை, பலம் வாய்ந்தது! நீரைவிட்டு வெளிவந்து விட்டால், அதனை ஒரு சாதாரணப் பிராணிகூட வென்றுவிடுமல்லவா? அதிகாரத்தில் உள்ள மனிதர்களில் பலர் முதலையைப் போன்றவர்களாகவும் இருப்பர்! அவர்கள், தாங்கள் அந்த நீரை விட்டு நீங்கினால் என்ன ஆவோம் என்பதையும் சிந்திக்க மறந்துவிடக் கூடாது என்பதற்குக் குருஷேவின் வரலாறு எடுத்துக்காட்டாக விளங்குகிறதல்லவா?

“நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற”

அதிகாரம் - 50 - இடம் அறிதல்; பாடல் - 495

புனல் = நீர் அடும் = வெல்லும்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்