பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 183 / 300

பன்மாயக் கள்வன்

அச்சுப் பக்கம் 393394 · ஸ்கேன் 410411 · அதிகாரம் 126 (நிறையழிதல்) — குறள் 1258

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“சிலை வேற்கணை கொலைவேலென விரிமார்பினில் நடுவே தொளை செய்வது கண்டிவை இன்னமே - என்ன செய்தேனோ நான்பழி முன்னமே?”

அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச்சிந்துப் பாடலைப் பயன்படுத்தி, அவனது நெஞ்சுறுதியெனும் முற்றுகையை உடைத்து வெற்றி காண முனைந்தான் அவன். மன்மதனின் அம்பு, கொலைபுரியும் வேலைப்போல் அவனது மார்பில் பாய்ந்து துளைக்கிறதாம். அதைக் கண்டு உன் மனம் இரங்கவில்லையா என்று கேட்டான். அவள் அசைவதாக இல்லை! தன் உள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனை நெருங்காமலும் - அதைப் போல அவனை நெருங்கவிடாமலும் - அவளிருந்தாள்.

பள்ளிப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லித் தருபவள், அந்தக் கிள்ளை. அவன் அந்த ஊர் பண்ணையார் வீட்டிலே கணக்கப்பிள்ளை! வீதியோரம் - ஆற்றோரம் - கோயில் சுவரோரம் - விழிகள் நான்கும் மோதி, ஏற்கனவே காயமுற்றிருந்தன. எனினும் அவள் எளிதில் வாய்ப்பளவில்லை! அவனும் விடுவதாக இல்லை! வரமாட்டானா? வந்து, வேண்டும் வரம் தரமாட்டானா? இப்படி அவள் பெருமூச்சால் வான் பார்த்துப் பேசுவது உண்டு! ஆனால், அருகே அவன் வந்துவிட்டால் சுடுநெருப்பாய்த் தோன்றிடுவாள்.

அன்று கல்விக்கூடம் முடிந்து - சிட்டுக்களும் புறாக்களும் பறப்பதுபோல் பிள்ளைகள் வீடு நோக்கி ஓடினர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் இல்லம் நோக்கி நடந்தனர். அவளும் தெருவில் போய்க் கொண்டிருந்தாள். பண்ணையார் வீட்டுப் பணிமுடிந்து அவனும் அவளைப் பின்தொடர்ந்தான்.

அவன் வரவேண்டுமெனத் துடிக்கிறது நெஞ்சம்! ஆனால், நடையோ அவன் வருவதை விரும்பாததுபோல் நடிக்கிறது!

தனி வீடு! தனியாகத் தானிருக்கிறாள்! கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறான்! கணக்கப்பிள்ளை - ஆம்; அந்தக் கட்டழகு ஆண்பிள்ளை - காவடிச் சிந்துடன் பின் தொடர்கிறான்.

“வாடியிருப்பது வஞ்சமோ? - பொல்லா வன் கருங் கல்லோஉன் நெஞ்சமோ? - கொண்ட மையல் வைத்தியம் கொஞ்சமோ? - சிலை மதனாகம முதுகாவியம் அதிலேமொழி சுகலையின் மார்க்கம் உனக்கென்ன நஞ்சமோ? - ஒரு வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ?”

சுவை மிகுந்த சொல்லாரம் தொடுத்தான்! சுவைத் தமிழில் காதல் கணை விடுத்தான்!

தன் நெஞ்சத்தை அடக்கியாளும் பெண்மையை அவன் வெற்றிகொண்டு விடாமல் - நிறையழியாமல் - பாதுகாத்துக் கொள்வதில் அவள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தாள்.

“இனியவளே! கனியமுதே! இன்னும் என்ன தயக்கம்? அன்று தேரடியில் கண்டபோது உன் தேனிதழ்கள் துடித்தனவே; அவை எனக்கு என்ன கட்டளையிட்டுப் போகின்றன எனக் கேட்கத்தானே இப்போது கைகட்டி நிற்கின்றேன்! திருவிழாக் கூட்டத்தில் ஓர் நாள் உன் விழிகள் என்னைத் திருடிக் கொண்டிருந்தன! திரும்பிப் பார்த்தேன்! அதே விழிகள் தீச்சுடர்களாய் மாறின! குற்றமென்ன செய்தேன் எனக் கேட்கத்தானே கூப்பிய கரமுடன் உன் முன் இப்போது ஓடிவந்திருக்கிறேன்! உன் அசையும் இடை காட்டும் நடனத்தை ஆணையாக ஏற்று நடக்க அடியேன் என்றைக்கும் எப்போதும் தயாராக இருக்கிறேன். பிறகேன் விழிகளில் தணல்? தாமரை முகம் எனை நோக்கித் திரும்பிடத் தயங்குவது ஏன்! நான் உனைத் தழுவ - நான் முழுவதும் மண்டியிட்டுத் தவம் புரிய வேண்டுமா? அப்படியில்லை! பஞ்சுபட்டாலும் வலிக்கின்ற உன் பாத மலர்களில், காமபூஜைக்குரிய மலராக என் இதயத்தைப் படைத்திருக்கிறேனே; அதைக்கூட நீ பார்க்கவில்லையா? இன்னும் உனக்கு என்மேல் இரக்கமில்லை பெண்ணால், புருவ வில்லை வளைத்து என்னை உருவம் தெரியாமல் அழித்துவிடு!”

அவன் பேசிக்கொண்டேயிருந்தான். பணிவும் பாசமும் நிறைந்த அந்தப் பேச்சின் முன்னே அவளது பெண்மையெனும் அரண் அழிந்துவிட்டது!

ஒட்டிக்கொண்டாள்! அவன் கட்டிக் கொண்டான்! தெருக்கதவு மூடிக் கொண்டது! அந்தச் சிறிய வீட்டில் ஒரே அமைதி!

அவள் நெஞ்சு மட்டும் அவளுடன் பேசியது, “நாளை வருகிறேன்” என்று அவன் விடை பெற்றுச் சென்ற பிறகு!

“மாயக்கள்வனான என் காதலனின் பணிவு நிறைந்த மொழி, என் பெண்மையெனும் அரணை உடைக்கும் படையாக அல்லவா இருக்கிறது!”

இப்படி வியப்புத் தெரிவித்தது அவள் நெஞ்சு! அதனால் விம்மியது அவள் மார்பகம்!

“பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை”

அதிகாரம் - 126 - நிறையழிதல்; பாடல் - 1258

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்