பொருளடக்கம் 182 / 300
தன்னுயிர்க்கு இன்னாமை
அச்சுப் பக்கம் 391–392 · ஸ்கேன் 408–409 · அதிகாரம் 32 (இன்னா செய்யாமை) — குறள் 318
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
செல்வந்தர் வீட்டுப் பணியாள் அவன்! பெயர் சேவல்! அந்த வீட்டில் பெரியவர் முதல் குழந்தைகள் வரையில் எல்லோருக்கும் அவன் அடிமை! வயிறு வளர்க்க வேண்டுமே; வேறெப்படி வாழமுடியும் - வறுமைச் சூழலில் சிக்கிக் கொண்ட வனால்! செல்வந்தரின் பாட்டிக்குத் தொண்ணூறு வயது. அந்த அம்மையார் “அடே! சேவல்!” என்று அதிகாரக் குரலில் அழைப்பார். பேரனுக்கு எட்டு வயது. அவனும் “அடே! சேவல்!” என்றுதான் அழைப்பான். அடிமை வேலை செய்யு மிடத்தில் மரியாதையென்ன வேண்டிக் கிடக்கிறது. ஆனால் ஐம்பது வயதான சேவல், அந்த அழைப்புக்களைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதேயில்லை.
பேரப்பிள்ளைகளைப் பெட்டி வண்டியில் வைத்து, சேவல்தான் பள்ளிக்கு இழுத்துக் கொண்டு போவான். தேர், திருவிழாக்கள் பல கல் தொலைவில் உள்ள ஊர்களில் நடைபெற்றாலும் பெட்டி வண்டி இழுக்கும் வேலை அவனுடையது தான். நாள்தோறும் கழனிகளைப் பார்வையிடச் செல்வந்தர் செல்லும்போதும் சேவலின் தோள்களே சிவக்கும், வண்டியிழுத்து!
குண்டு குழிகளில் வண்டியேறிச் சற்று ஆடிவிட்டாலோ - அல்லது வண்டியிலிருப்போரின் விருப்பத்திற்கேற்ப வேகமாகப் போகாவிட்டாலோ, சேவலுக்குச் சவுக்கடிகள் விழுவதும் வாடிக்கை!
அந்த வடுக்கள் எல்லாம் அவனது தோளிலும் முதுகிலும் விலாப்புறத்திலும் செந்நிறம் காட்டிக் கொண்டிருக்கும். அடிக்கும்போது வலி பொறுக்க முடியாதுதான்; வாங்கிக்கொண்டால்தான் வயிறு நிரம்பும்! தாங்கிக் கொண்டால்தான் வாழ்வை நடத்த முடியும்!
“அடக் கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? வாயில்லாத இந்த ஊமையை இப்படி அடிக்கிறார்களே!” என்று சேவல் தன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் கண்ணீர்விட்டு அழுவான்!
செல்வந்தர் வீட்டில் திடீரென ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது.
பெட்டி வண்டியிழுக்க, இரண்டு காளைமாடுகள் வாங்கப்பட்டன.
சேவலுக்கு ஒரே கவலை! தனக்கிருந்த வேலை போய்விடுமோ என்பதுதான், அவன் கவலைக்குக் காரணம்!
அப்படியொன்றும் நிகழவில்லை! காளை மாடுகளை வண்டியில் பூட்டி ஓட்டுகிற வண்டிக்காரன் பதவி அவனுக்கு வழங்கப்பட்டது. சேவலுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
பெட்டி வண்டியில் மாடுகளைக் கட்டி, முன்னே அமர்ந்து அவற்றை ஓட்டிச் செல்லுகையில் அவன் தனக்குக் கிடைத்த பதவி உயர்வாகக் கருதிப் பெருமை கொண்டான்!
அவன் கால்களால் மாடுகளை உதைத்து ஓட்டுவான்! கைகளால் தட்டி ஓட்டுவான்! மேலும் வேகமாகப் போகவேண்டுமென்றால், காளைகளின் வாலை முறுக்கு வான்! ஓடி ஓடிக் காளைகள் அயர்ந்துபோய், சற்று வேகத்தைக் குறைத்திடுமானால், சேவலுக்குப் பொல்லாத கோபம் வந்துவிடும்! கையில் உள்ள சவுக்கால் ஆத்திரம் தீர அடிப்பான். தார்க்குச்சியால் காளைகளின் முதுகெல்லாம் குத்துவான்! அவற்றின் முதுகில் குருதி கொப்பளிக்கும், அதைச் சுவைக்க ஈக்கள் மொய்க்கும்.
அவன் அடிமையாக இருந்து அடிபட்டான். இப்போது அவனுக்கு இரண்டு அடிமைகள் கிடைத்துவிட்டன.
ஒருநாள் இரவு அவன் தூங்கிடும்போது கனவில் அந்தக் காளைகள் வந்தன. இரண்டும் அவனிடம் பேசுவதுபோல் தெரிந்தது. சேவல், காளைகள் பேச்சை உற்றுக் கேட்டான்; கனவில்தான்!
“அய்யா வண்டிக்காரரே! உமது உடலெல்லாம் இருக்கிற வடுக்கள், நீர் வண்டியிழுத்தபோது வாங்கிய அடிகளின் அடையாளம்தானே! அப்போது உமக்கு எப்படி வலித்திருக்கும்? நீர் எங்களை இப்போது அடித்துக் குத்தி வால்களை முறுக்கிடும்போது எங்களுக்கும் அப்படித்தானே வலிக்கும்?”
காளைகளின் இந்தக் கேள்வி காதில் விழுந்ததுதான் தாமதம்; சேவல் கனவு கலைந்து விழித்துக் கொண்டான். இனிமேல் அந்தக் காளைகளை அடிப்பதில்லை என்று உறுதி செய்துகொண்டு தொழுவத்திற்குச் சென்றான். அவற்றின்மீது மொய்த்துக்கொண்டிருந்த ஈக்களை விரட்டிவிட்டு, அன்புடன் அந்தக் காளைகளைத் தட்டிக் கொடுத்தான்.
“தன்னுயிர்க்குத் துன்பம் தரக்கூடியவை, எவையென்று உணர்ந்த ஒருவன்; மற்ற உயிர்களுக்கு அந்தத் துன்பங்களைச் செய்வது என்ன காரணத்தாலோ?”
என்றுதான் வள்ளுவர் வேதனையோடு கேட்கிறார்:
“தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்”
அதிகாரம் - 32 - இன்னா செய்யாமை; பாடல் - 318
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்