பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 181 / 300

உறுவது சீர் தூக்கும்

அச்சுப் பக்கம் 388390 · ஸ்கேன் 405407 · அதிகாரம் 82 (தீ நட்பு) — குறள் 813

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“நீ பெண்ணல்ல! புராணங்கள் கூறுகின்ற தேவர் உலகத்து ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரில் ஒருத்தியாகத்தான் இருக்க வேண்டும்.”

“ஓ! அப்படியா! அவ்வளவு அழகா நான்?”

“அவர்களைவிட நீ அழகியென்பேன்!”

“அந்த மூவரையும் பார்த்திருக்கிறீர்களா?”

“புராணக் கதைகள் வாயிலாகக் கேட்டிருக்கிறேன்.”

“என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?”

“கண்ணே! இந்த மீனைப் பிடித்துவிட்ட தூண்டில்முள் அல்லவா உன் பார்வை!”

“ஓ! நல்ல இரசிகர்தான்! அப்புறம்?”

“அடடா! உன் மெல்லிய இதழ்கள், என் நெஞ்சத்தைத் துளைக்கும் மத யானைகளின் பருத்த கால்களைப்போல் காட்சி தருகின்றனவே!”

“உம்! பேசுங்கள்!”

“அலை அலையாய்ச் சுருண்டு கிடக்கும் உன் கரிய கூந்தல்! அழகேறி நிற்கும் உன் அரும்புப் புருவங்கள்! என் நெஞ்சிலே உணர்ச்சி வெறியேற்றிய உன் நீண்ட மூக்கு! மனிதனை மயக்குவதற்கென்றே மாயனால் படைக்கப்பட்ட உன் மாம்பழ மேனி... இன்பவல்லியே! நான் உன்னை விரும்புவதுபோல நீ என்னை விரும்புகிறாயா?”

“நிச்சயமாக! நீங்கள்தான் இந்த இரதிதேவிக்கு ஏற்ற மன்மதன்! இந்த சுபத்திரைக்கு ஏற்ற அர்ச்சுனன்!”

“அப்படியா? இன்றே நான் பிறவியெடுத்த பயனைப் பெற்றேன்! கண்மணி! என்னையே உனக்குத் தந்துவிட்டேன்.”

“அன்பு ததும்புகிறது உங்கள் உள்ளத்தில்!”

“உன் உள்ளமும் அப்படித்தானே!”

“அன்பில்லாமலா உங்களுடனே வந்தேன்... ஆனாலும், ஆனாலும்....!”

“என்ன, என்ன சொல்கிறாய்...? ஏன் ஆனாலும் என்கிறாய்?”

“இன்றிரவு என்னுடன் இருக்க எவ்வளவு பொருள் தருவீர்கள்? தருவதாகச் சொன்னால் மட்டும் போதாது; முதலில் தந்துவிட்டுத்தான் என்னைத் தொடவேண்டும்!”

“சே! விலைமகளா நீ! நல்ல வேளை, உன் விழிவீச்சில் வீழ்ந்த நான் அடுத்த விபத்தில் சிக்காமல் தப்பிவிட்டேன்.”

- இப்படிக் கூறிவிட்டு, அவன் அந்த இடத்தைவிட்டு விரைந்து நடந்தான். அவள், கவலையேதுங் கொள்ளாமல், கண்வலை வீச வேறுபக்கம் திரும்பினாள்.

ஏமாற்றத்தால் தாக்குண்ட அவன், ஒரு சோலையோரமாகச் சென்று கொண்டிருந்தான். ‘என்ன அண்ணே! சுகம் தானா?’ எனக் கேட்டபடி ஒருவன் முதுகில் தட்டினான். இன்னொருவன் ‘வருகிறேன்னப்பா, குறைச்சல்!’ என்று சிரித்தவாறு எதிரே வந்து நின்றான். நலம் விசாரித்த இருவரும் அவனுக்கு அறிமுகமானவர்கள். நயவஞ்சக் கள்வர்கள். அவன் கைப்பொருளைக் கவர்ந்திட வந்தவர்கள். அவர்களிடமிருந்து தன்னையும் பொருளையும் காப்பாற்றிக் கொள்ள இடையில் செருகியிருந்த கத்தியை எடுத்துப் பாய்ந்தான். கள்வர் இருவரும் கதிகலங்கிப் போய் ஓடி மறைந்தனர்.

விலைமகள், கள்வர் - இவர்களிடமிருந்து தானும் பிழைத்துத் தன் பொருளும் பிழைத்தது பற்றி எண்ணிப் பெருமூச்சுவிட்டான்.

வீட்டுக்குச் சென்றான். வீட்டுத் திண்ணையில் அவன் நண்பன் உட்கார்ந்து கொண்டிருந்தான். “எப்போது வந்தாய்?” என்று அவன், நண்பனைப் பார்த்துக் கேட்டான்.

“எப்போது வந்தால் என்ன? இத்தனை நாள் உன்னோடு எதற்காகப் பழகினேனோ அதை நீ சிறிதுகூட எண்ணிப் பாராமல் உன் வாணிபக் கூட்டத்து மேலாளராக

வேறொருவனை நியமித்துக் கொண்டாயே; இது நியாயந்தானா என்று கேட்கத்தான் வந்தேன்!”

“நீ இப்படியொன்றை எதிர்பார்த்துக்குத்தான் என்னுடன் நட்புக் கொண்டாய் என்பது எனக்குத் தெரியாது! வாணிபக்கூடத்து மேலாளர் பணிக்கு யார் தகுதியோ அவனைத் தேர்ந்தெடுத்து நியமித்தேன். அதில் என்ன தவறு!”

“போதும் உன் நட்பு! போய் வருகிறேன்!”

“தாராளமாகப் போய் வா! அன்பை எதிர்பார்க்காமல் பொருளை எதிர்பார்க்கும் விலைமகளும் கள்வரும் பயன் கருதித் தோழமைகொண்டு கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர்களும் ஒரு நிகரானவர் என்று வள்ளுவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்! போய்வா நண்பா! போய் வா!”

நண்பன் எனப்பட்டவன் வேகமாகப் போய்விட்டான். வீட்டுக் கதவும் தாழிடப்பட்டது.

“உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்”

அதிகாரம் - 82 - தீ நட்பு; பாடல் - 813

பெறுவது கொள்வார் = விலைமகளிர் உறுவது = பயன்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்