பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 180 / 300

காமக் கடும்புனல்

அச்சுப் பக்கம் 385387 · ஸ்கேன் 402404 · அதிகாரம் 114 (நாணுத் துறவுரைத்தல்) — குறள் 1134

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இரண்டு தோணிகளுக்குச் சொந்தக்காரன் அவன். கட்டிளங்காளை. அகன்ற நெற்றி. கூரிய விழிகள். சற்று தடித்த இதழ்களின் மேலே அரும்பனைய மீசைகள். முகத்தில் எப்போதும் வெற்றிப் புன்னகை.

தோளுயர்த்தி அவன் நடந்து செல்லும்போது, வீதியில் அவனைக் கடந்து செல்லும் பாவையர் பார்வை அவனை ஒருமுறை மொய்த்துத்தான் திரும்பும். இரண்டு தோணிகளுக்குச் சொந்தக்காரன் அவன்.

வேலெடுத்துச் சென்று களத்தில் வீரம் விளைத்து வருவான். குருதி கொப்பளிக்கும் விழுப்புண்களைப் பார்த்துப் பெருமை கொள்வான். அந்தக் காயங்களில் கசியும் குருதி, அவன் நீராடும் ஆற்று நீரைச் செந்நீராக மாற்றும். அவன் மனவலிமை கண்டு தாமரை மங்கையர் தங்கள் நெஞ்சம் பறிகொடுத்து ஆற்றங்கரையில் அசையாத சிலையென நின்றிடுவர்! இரண்டு தோணிகளுக்குச் சொந்தக்காரன் அவன்.

ஏடெடுத்துக் கவிதைகளை வடிப்பான். இசையிசையாக உருவெடுத்துத் தேன்மழையாகப் பொழிவான். அந்த இனிமையில் மூழ்கி இளங்குரும்பைப் பெண்கள் கூட்டம் மெய்மறந்து கிடக்கும்! இரண்டு தோணிகளுக்குச் சொந்தக்காரன் அவன்.

ஊர் கூடி அவன் புகழைப்பாடும், சீரார்ந்த செந்தமிழில் தென்றலாகக் குளிர்வான். சிறகின்ற புயலாகவும் எழுவான். சின்ன இடைச் சேல்விழிகள் அவன் மீது தேன்வண்டாய்த் தாக்கும். இரண்டு தோணிகளுக்குச் சொந்தக்காரன் அவன்.

எவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் - யாருக்கும் அசைந்து கொடுக்காமல் - எத்தனைவித மலர்கள் அவன் முன்னால் பூத்துக் காட்டியும்... எத்தனைவித மயில்கள் அவன் எதிரே கூத்துக் காட்டியும் - எதுபற்றியும் சலனமின்றி அவன் தன்னிரு தோணிகளில் மாறி மாறிப் பயணம் செய்து வந்தான். இரண்டு தோணிகளுக்குச் சொந்தக்காரன் அவன்.

அவன் பிடிவாதம் நொறுங்கிவிழ, ஒருத்தி அவன்மீது படையெடுத்தாள். அந்தக் காதல் முற்றுகையில் கடைசியில் அவன் தோற்றுப்போனான். அவளைத் தழுவித் துடித்துத் தாவிச் சென்றான். அவளோ, அவன் மார்பினில் சாய்ந்து மறைந்து விட்டாள்! தோளினில் உராய்ந்து பறந்து விட்டாள்! தொட்டான்! தொட்டான்! சிட்டெனக் கிளம்பி வானில் மிதந்துவிட்டாள்! முத்தம் கேட்டான்! ஒன்று கொடுத்தாள்! அதை நித்தம் கேட்டான்! வளையல் சத்தம் காட்டி ஒளிந்து கொண்டாள்!

காதல் நோய் பற்றியது! அது காமத்தீயாக எரிந்தது!

இரண்டு தோணிகளுக்குச் சொந்தக்காரன் அவன். அவற்றில் ஒன்றில் ஏறி காமவெள்ளத்தைக் கடக்கலாமென ஓடினான்! ஓடினான்!

இரண்டு தோணிகளையும் காணவில்லை!

முழுப்பக்க ஓவியம் — இப்பக்கத்தில் அச்சிட்ட உரை இல்லை.

எங்கே அந்தத் தோணிகள்?

அடடா! ஒரு தோணியின் பெயர் நாணம்!

மற்றொரு தோணியின் பெயர் ஆண்மை!

அய்யோ! இரண்டு தோணிகளுமே அவனைச் சுற்றிச் சுழன்று பற்றிக் கொண்ட காமவெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டன.

“காமம் என்னும் கடுமையான வெள்ளம்; ஓர் ஆடவனின் நல்ல ஆண்மையையும் நாணத்தையும் - அதாவது அந்த இரண்டு தோணிகளையும் அடித்துக் கொண்டு போய்விடுகின்றது.”

என்கிறார் வள்ளுவர்! அதற்கு இதோ குறள் :-

“காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை”

அதிகாரம் - 114 - நாணுத் துறவுரைத்தல்; பாடல் - 1134

புணை - தோணி

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்