பொருளடக்கம் 179 / 300
துப்பார்க்குத் துப்பாய
அச்சுப் பக்கம் 383–384 · ஸ்கேன் 400–401 · அதிகாரம் 2 (வான் சிறப்பு) — குறள் 12
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
ஒரு விசித்திரமான கற்பனை செய்து பார்ப்போம். இந்த இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் சாதனையால் மனிதன் சந்திரமண்டலத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து பார்த்துவிட்டு அங்கிருந்து கற்களையும் பொறுக்கிக் கொண்டு, தான் கண்ட பகுதிகளைப் புகைப்படமும் எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டான். அவன் அறிந்தவரை அங்கே உயிரினங்கள் வாழ்வதாக இதுவரை அறியப்பட்டுக் கூறவில்லை. இதைத் தொடர்ந்து நமது கற்பனையைத் தொடர்ந்திடுவோம்.
சந்திரமண்டலமோ, அல்லது செவ்வாய் போன்ற வேறு மண்டலமோ - அங்கிருந்து மனிதர்கள் ஓரிருவர், அவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞானக் கலங்களின் துணை யோடு பூமிக்கு வருகிறார்கள். தாங்கள் வாழும் கோளினைப்போல் இல்லாது இயற்கையின் பசுமை எழிலுடன் சிரித்துக் குலுங்குவதைக் கண்டு வியக்கிறார்கள். வயல்வெளிகளில் இளங்கதிர்களின் கதிராட்டம் கண்டு மெய்மறந்து விடுகிறார்கள். மலைகளில் அகிலும் தேக்கும் வளம் கொஞ்சிட நிற்பதைக் காணுகிறார்கள். கரும்புத் தோட்டங்களிலிருந்து முற்றிய கரும்புகளைக் கட்டிச் சென்று ஆலையில் பிழிந்து வெல்லத்தைச் சுவைத்துத் தின்றிடும் மக்களைப் பார்க்கிறார்கள். களத்துமேடுகள், அங்கே கதிர்க் கட்டுக்கள், கட்டுக்குலையா மங்கையர் அவற்றைத் தலையில் சுமந்து சென்றிடும் காட்சி; தங்கநிற நெல்மணிகள் முத்துப்போன்ற அரிசிகளாக ஒளிவிடும் புதுமை. அந்த அரிசியைப் பொங்கி அனைவரும் அமர்ந்து உண்டு மகிழ்ந்திடும் அருமை! வெள்ளரிப் பிஞ்சைக் கடித்துக் குதப்பும் ஒரு குழந்தை - மாங்கனியைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே எதிரே நிற்கும் எழில் வஞ்சி ஒருத்தியின் கழுத்துக்குக் கீழே கண்ணோட்டம் விடும் காளையொருவன்.
இவற்றையெல்லாம் கண்டு அந்த வெளிமண்டலத்து மனிதர்கள் அதிசயிக்கின்றனர். அவர்கள் செல்லும் திசையில் குளிர்ந்த காற்று வீசுகிறது. சிறிது நேரத்திற் கெல்லாம் மழை பெய்கிறது. மலையருவிகளில் தண்ணீர் பூவிதழ்களைச் சுமந்தவாறு ஓடுகிறது. வேலை செய்து களைத்துப் போனவர்கள், வயிறார உண்டு மகிழ்ந்தவர்கள், அந்த அருவியின் நீரை அள்ளி அள்ளிப் பருகுகின்றனர்.
அனைத்தையும் பற்றி வெளி மண்டல மனிதர்கள், புவியிலுள்ள மாந்தர்களிடம் விசாரித்து விபரம் சேகரிக்கிறார்கள்.
அவர்கள், தங்களின் சொந்தக் கோளுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிடுகிறது. அவர்கள் கொண்டுவந்த விஞ்ஞான விண்கலத்தில் ஏறிப் புறப்பட்டுப் போகிறார்கள்.
அவர்களை வரவேற்க, அந்த மண்டலத்து விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். “புவியில் கண்ட புதுமையைச் சொல்கிறோம் கேளீர்” என்று களிப்புடன் ஆரம்பிக்கின்றனர். அங்குள்ளோர் அவர்கள் வாய்களையே நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
“பூமியில் மழை என்று ஒன்று இருக்கிறது; அது ஓர் அற்புதமான பொருள்! அங்குள்ள மனிதர்கள் உண்பதற்கேற்ற உணவுப் பொருள்கள், அந்த மழை இல்லாவிட்டால் விளையாது! அந்த மழையால் கிடைக்கும் உணவு வகைகளை உண்டு வாழ்கிற மக்கள் அந்த மழை நீரையே குடித்துக் கொள்கிறார்கள்! என்னடா! நமக்கு உணவு வகைகளை வழங்குகிற மழையையே குடித்து வாழ்கிறோமே என்ற எண்ணம் பூமியில் உள்ளவர்களுக்கு இல்லவே இல்லை.”
இதைக்கேட்டு, அந்த மண்டலத்தில் உள்ளவர்கள் மழையைப் போற்றுகிறார்கள்! அப்படியொன்று நமக்குக் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகிறார்கள்! அவ்வளவு உதவி செய்கிற மழைக்கு நன்றி காட்டாமல் புவியில் உள்ளோர் அதையே குடிக்கின்றனரே; என்ன விந்தை என்று பேசிக் கொள்கிறார்கள்.
பூமிக்கு வந்து திரும்பியவர்களில் ஒருவன், அவர்களைப் பார்த்துச் சொல்கிறான்; “அந்த மழையின் சிறப்பைப் பற்றித் திருவள்ளுவர் என்ற மிகப் பெரும் மேதையொருவர், குறளே எழுதியிருக்கிறார்” என்று!
“என்ன எழுதியிருக்கிறார்?”
“என்ன எழுதியிருக்கிறார்?”
குரல்கள் எழுகின்றன.
“உண்பவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதுடன் அவர்களுக்குப் பருகுவதற்கேற்ற உணவாகவும் இருப்பது மழைக்குரிய சிறப்பாகும்.”
இப்படி எழுதியிருக்கிறார் என்கிறான். அந்த மண்டலம் முழுதும் ‘மழை’ பற்றியே பேச்சு!
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை”
அதிகாரம் - 2 - வான் சிறப்பு; பாடல் - 12
துப்பு = உணவு; துப்பார் = உண்பவர்; துப்பாக்கி = உணவுப் பொருள்களை உண்டாக்கி
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்