பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 178 / 300

கல்லார்ப் பிணிக்கும்

அச்சுப் பக்கம் 381382 · ஸ்கேன் 398399 · அதிகாரம் 57 (வெருவந்த செய்யாமை) — குறள் 570

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அவனோ பழிவாங்கும் இயல்பினன். அவன் உதடுகள் சில நேரங்களில் இன் சொற்களை உச்சரித்தாலும் உள்ளம் ஓர் எரிமலை! நச்சுமரத்தில் முற்றிய கனிதான் அவன் இதயம்! ஆட்சிக்குத் தலைவனாக - ஆம்! அரசனாகப் பட்டம் சூட்டிக் கொண்டான் அவன்!

பாகு மொழி பேசும் நாகம் அவன் என்பதை உணராமல் நச்சுப்பல்லுக்கு இரையானோர் பலருண்டு! செங்கோல் எனும் பெயரால் கடுங்கோல் ஆட்சி நடத்திய அவனது வன்முறைச் செயல்களால் வாழ்விழந்தோர்தொகை ஏராளம்!

சிறைச்சாலைகளின் வயிறு நிரம்பிட வேண்டுமென்று அவன் துடியாய்த் துடித்தான். அவன் காலடியில் அவனை எதிர்த்தோர் பிணங்கள் விழுந்தால், அவனுக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. மாற்றுக் கருத்துடையோர் யாராயினும் அவர்கள் விலங்கிடப்பட்டனர்; வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

நீதியை வளைத்து நேர்மையைக் குலைத்துத் தன் பகைவர்களை வதைத்துச் சிரித்தான். வரிக்கொடுமையோ நாட்டு மக்களை வாட்டியது. கடுகளவு குற்றத்துக்கும் கழுமரம் காத்திருந்தது!

அவன், தான் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் தன் பக்கத்தில் ஒரு கூட்டம் இருக்கவேண்டுமென்று விரும்பினான். அவன் நடத்திய காட்டாட்சியை, நல்லாட்சி என்று சிறப்பித்துக்கூற சிலரைக் கேட்டான். நீதி நூல்களைக் கல்லாதவர்களாக - ஒருவேளை அவற்றைக் கற்றிருந்தாலும் அதன்படி நடக்காதவர்களாக சிலர் - தன்னருகே இருந்து தன் புகழ் பாடவேண்டுமென்று திட்டம் தீட்டினான்.

நீதி நூலைப் படித்து அதற்கேற்ப ஒழுகாதவர், “கல்லாதார்” எனும் பட்டியலிலே சேர்க்கப்பட வேண்டியவர்தானே! அப்படியொரு கூட்டத்தின் ஆதரவைப் பெறுவது அந்த மன்னனுக்கு எளிதான காரியமாகவே இருந்தது.

அந்தக் கொடுங்கோலன், நீதி, நெறி கல்லாதவரைத் தனக்குத் துணையாகக் கொண்டிருக்கிறான் எனும் செய்தி வள்ளுவருக்கு எட்டியது! அவர் முகம் வாடியது. வேதனையோடு கூடிய ஒரு சிரிப்பு வெளிப்பட்டது.

“எது நீதி? எது நெறி? என்று கல்லாதவர்களைத் தனக்கு அரணாக ஒரு கொடுங்கோல் ஆட்சி அமைத்துக் கொள்ளுமேயானால், அதைப்போன்ற ஒரு சுமை, இந்த நிலத்துக்கு வேறு எதுவுமே இல்லை.”

சிரித்துக்கொண்டுதான் இந்த வார்த்தைகளை வள்ளுவர் கூறினார் என்றாலும் அவர் கண்கள் கலங்கியிருந்தன.

மனிதர்களையல்ல; வெறும் தசைப் பிண்டங்களைத் தாங்கும் சுமைதாங்கியாகவும் சில நேரங்களில் இருக்க வேண்டியிருக்கிறதே எனக்கூறி, மண்ணகள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

“கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை”

அதிகாரம் - 57 - வெருவந்த செய்யாமை; பாடல் - 570

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்