பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 177 / 300

சாயலும் நாணும்

அச்சுப் பக்கம் 379380 · ஸ்கேன் 396397 · அதிகாரம் 119 (பசப்புறு பருவரல்) — குறள் 1183

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

ஒற்றையடிப்பாதை வரப்பு ஒன்றில், ஒடிந்துவிடும் இடைகொண்ட அந்தப் பாவை நடந்து வந்தாள். கழனிகளில் இளம் நாற்றுகள் காற்றில் சிலிர்த்திடும் காட்சி, கயல்கள் துள்ளி விளையாடும்போது குளத்தில் குவங்கும் அலைகளைப் போல் இருந்தது! பசும்புல் பத்தைகளின்மீது அந்தப் பாவையின் பாதங்கள் மெல்லச் சதிராடிக் கொண்டிருந்தன. இரண்டு கயிறுகளை முறுக்கியது போன்ற வெள்ளித் தண்டைகள், அவள் கால்களில் சேற்றின் கறைபட்டு அசைந்து கொண்டிருந்தன. முழங்கால் வரையில் அழகு தெரியும்படியான உடை! தோளைத் தொடும் தொடாமலும் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தாவணி! அந்தச் சிற்றாருக்கெனச் செதுக்கப்பட்ட சிற்பம்!

அவள் அழகைத் தொலைவிலிருந்து ஆடவர் பெண்டிர் அனைவருமே அள்ளிப் பருகினர். நெருங்கியிருந்து நெஞ்சோடு நெஞ்சு புதைத்து வயல்வெளியை - களத்து மேட்டை - பஞ்சணையாக்கிக் கொண்டு அவளுக்கே உரியவனாகிவிட்டவன்தான் அழகன்! பெயரில் மட்டுமல்ல, காண்பதற்கும் கட்டழகு கொண்டவனைத்தான் அந்த மொட்டவிழ்ந்த மலர்க்கொடியும் தன்னுடையவனாக ஆக்கிக் கொண்டாள்!

இப்போது அவனின்றித் தனியே வருகிறாள்! அன்றில் பறவைகள்கூடப் பிரிந்திருக்கக்கூடும்; அவர்களிடம் பிரிவு எனும் பெரும்பாவி இதுவரையில் தலைகாட்டியதே இல்லை!

வாடிய முகம்! புன்னகை பூட்டப்படாத இதழ்கள்! ஒளி மங்கிய விழிகள்! இவ்வாறு அழகிழந்துவரும் மலர்க்கொடியை, வயலின் எதிர்ப்புறத்தில் நிற்கின்ற அவள் தோழிகள் வியப்புடன் நோக்குகின்றனர்.

“என்னம்மா மலர்க்கொடி! ஏன் இத்தனை சோகம்? அடடே! மேனியெங்கும் பசலை படர்ந்துவிட்டதே! என்னடி நடந்தது?”

“மறைப்பதற்கு நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? நாணம்தான் என்னை விட்டுப் போய்விட்டதே! என்னைப் பிரிந்து வெளியூர் சென்றிருக்கும் அவரை நினைத்தவுடன் பசலை படர்ந்துவிட்ட என் உடல்தான், என் நாணமற்ற தன்மையை ஊராருக்குப் புலப்படுத்திவிட்டதே!”

“அடி! அதற்காகவா இத்தனைக் கவலை? அம்மா மலர்க்கொடி! நாணம் மட்டும் உன்னிடமிருந்து போகவில்லை; கொள்ளையழகுக் கோமானமே! உன் அழகும் கொள்ளை போய்விட்டதுபோல் தோன்றுகிறதடி!”

“ஆமாம்! உண்மைதான். என் உடல் அழகையும் நாணமெனும் தன்மையையும் அவர் என்னிடமிருந்து எடுத்துக் கொண்டு அதற்குப் பதிலாக அவர் எனக்குக் காமநோயையும் - பசலை நிறத்தையும் கொடுத்துவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார்.”

காதலின் பிரிவை மறைக்க முடியாமல் தவிக்கும்போதே நாணம் பறந்து போய்விடுகிறது. அதனை உறுதிப்படுத்த உடலைப் பசலை நிறமும் முற்றுகையிடுகிறது.

எனவே, காம நோயையும் பசலை நிறத்தையும் அவளுக்குக் கைமாறாகக் கொடுத்துவிட்டு, அவளது அழகையும் நாணத்தையும் அவன் அவளிடமிருந்து பெற்றுக் கொண்டான் என்று வள்ளுவர் விளக்குவது பொருத்தம்தானே!

“சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து”

அதிகாரம் - 119 - பசப்புறு பருவரல்; பாடல் - 1183

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்