பொருளடக்கம் 176 / 300
மனைத்தக்க மாண்புடையள்
அச்சுப் பக்கம் 377–378 · ஸ்கேன் 394–395 · அதிகாரம் 6 (வாழ்க்கைத் துணை நலம்) — குறள் 51
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
நூற்றி அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது வானளாவிய சிந்தனையை நிறுத்திக்கொண்டு பூமிக்குள் கல்லறை யாகிவிட்ட சமதர்மச் சிற்பி காரல் மார்க்சின் சித்தாந்தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறோம். அவரது பொதுவுடைமைச் சிந்தனைகளைச் செயலாக்கும் குறிக்கோள் என்றைக்கும் வெற்றிபெறும் என்ற ஆர்வத்தோடு, உழைக்கும் கூட்டம் இன்னமும் இந்த உலகின் பல நாடுகளில் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கின்றது.
அந்த மாமனிதன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்து மிகச் சாமானிய வாழ்வு வாழ்ந்து வறுமையின் கோரப்பிடியில் அடிக்கடி சிக்கி அறுபத்தி ஐந்தாவது வயதில் கண் மூடும்வரையில் தனது கடமையை ஓய்வின்றி ஆற்றியதற்கு, எங்கெல்ஸ் போன்ற உற்ற நண்பர் ஒருவர இருந்தபோதிலும் அருகிலேயே இருந்து இறுதிவரையில் இல்லறம் நடத்திய மாதரசு ஜென்னி என்னும் குடும்ப விளக்கின் பெருமையைப் பலர் அறியமாட்டார்கள்.
செல்வக்குடும்பத்தில் உதித்தவள், அழகில் மிகச் சிறந்தவள். அவளை மணக்கப் பலர் தவித்தனர். ஆனால் அவளோ, வளமற்ற குடும்பத்தில் பிறந்த - தனது அழகிற்குப் பொருத்தமற்ற - தன்னைவிட நான்கு வயது குறைவான காரல் மார்க்சையே மணப்பேன் என்று ஏழு ஆண்டுகள் காத்திருந்தாள். அவ்வாறே மணந்து கொண்டாள். கணவன் நாடுகடத்தப்பட்டபோதெல்லாம் அவளும் அவனுடன் சென்றாள். அவன் கைது செய்யப்பட்டபோது, அவளும் கைது செய்யப்பட்டாள்.
அந்தப் பெண்மணி ஜென்னி, தங்களின் குடும்ப நண்பருக்கு எழுதிய மடல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறாள்:
“எனக்குத் தாங்க இயலாத மார்பு வலி! முதுகு வலி! குழந்தைக்குப் பால் கொடுக்க ஒருத்தியை ஏற்பாடு செய்யக்கூடக் கையில் போதுமான பணமில்லை. என் மார்பு வலியைப் பொறுத்துக்கொண்டு நானே குழந்தைக்குப் பால் கொடுத்தேன். குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, அதனால் என் மார்பு கடியுண்டு ரணமாகி குருதி வழியத் தொடங்கியது. அதனால் பாலும் குருதியும் கலந்து அது குடிக்க வேண்டியிருந்தது. அந்த நிலையில் கடன்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து எங்கள் துணிமணிகள், குழந்தைகளின் தொட்டில், விளையாட்டுப் பொம்மைகள் அனைத்தையும் ஏலம் போடுவதற்கு எடுத்துக் கொண்டார்கள். மூன்று நாள் சாவுடன் போராடிய குழந்தை இறந்துவிட்டது. அதன் உடலைப் பின்புறத்து அறையில் மூடிவைத்துவிட்டு, நாங்களும் மற்ற குழந்தைகளும் முன்புறத்து அறையில் இரவு முழுவதும் தரையில் படுத்துக் கிடந்தோம். விழுந்தால் அந்தக் குழந்தைக்கு ஒரு சவப்பெட்டி தயார் செய்யக்கூட எங்களால் முடியவில்லை.
நான் மட்டும் தனிமையில் இந்தத் துன்பங்களை அனுபவிக்கவில்லை. ஒரு வகையில் நான் கொடுத்து வைத்தவள். என் கணவன்தான் எனக்கு எல்லாம்! அவர் என் பக்கத்திலேயே இருக்கிறார் என்பதே எனக்கு ஆறுதல்! நான் அவருடன் அவருக்குத் துணையாக இருப்பதே என் துன்பங்களுக்கெல்லாம் பரிகாரமாகக் கருதுகிறேன். ஆனால், என்னுடையவரிடம் பல வகையிலும் ஆதாயம் பெற்றவர்களில் ஒரிருவரே உதவிக்கு வருகிறார்கள். அதை நினைக்கும்போது என் நெஞ்சம் நெருப்பாகிறது; உதவியற்ற நிலையிலும் கடமையாற்றிடும் அவருடன் துணையாக இணைந்து நிற்பதே எனக்கு இன்பமல்லவா?”
இன்று உலகத்தின் கண்கள் எல்லாம் எந்தக் கருத்துக்களைப் படித்திடத் துடிக்கின்றனவோ அந்தக் கருத்துப் புதையலுக்குச் சொந்தக்காரனான காரல்மார்க்சின் இல்லறவாழ்க்கையில் விளைந்த துன்ப துயரங்கள் ஒன்று இரண்டல்ல! ஓராயிரம்! அத்தனையும் தாங்கிக் கொண்டு அவனையும் தாங்கி நின்ற அந்தத் தாய்க்குலத்துத் திருச்சுடர் ஜென்னியை “வாழ்க்கைத் துணை நலம்” என்று வாயார மனமார வாழ்த்த வேண்டாமோ? இதோ வாழ்க்கைத் துணை நலத்தின் இலக்கணத்தைக் குறள் கூறுகிறது:
“மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”
அதிகாரம் - 6 -வாழ்க்கைத் துணை நலம்; பாடல் - 51
“இல்லறத்துக்கேற்ற நற்பண்பு கொண்டவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்திற்குத் தகுந்த வாழ்க்கையை மனக்குறையேதுமின்றி நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணையாவாள்” என்பது பொருள்.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்