பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 175 / 300

வினைகலந்து வென்றீக

அச்சுப் பக்கம் 375376 · ஸ்கேன் 392393 · அதிகாரம் 127 (அவர்வயின் விதும்பல்) — குறள் 1268

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மாந்தோப்பில் - மணங்கமழப் பூங்காவில் - மணல் பரந்த கடற்கரையில் - மண்டபத்தில் - மணவீட்டில் - மகிழிப்போன குடிசையில் - இன்னோரன்ன இடங்களில், காதல் தலைவனும் காதல் தலைவியும் ஒருயிர் ஈருடல் என ஓர் நாழிகை இடையில் புகாவண்ணம் இழுத்தும் அணைத்தும் போர்த்தியும் இதழ்கள் பொருத்தியும் சமைத்திடும் இன்ப விருந்தை, மாலைப்பொழுது பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறதாம்!

‘பொன்னே! மணியே! கண்ணே! கனியே!’ காதல் மொழிகள் தேன்துளிகளாகச் சொட்டும்! அரும்பெறும் புருவத்தில் வியர்வை அரும்பு கட்டும்! மென்மேனியில் அவன் விரல்கள் யாழ் மீட்டும் - அவள் மடியோ அவனுக்கு இன்பத் தாலாட்டும்!

மாலைப் பொழுதைப் பயன்படுத்தி ஆடவரும் பெண்டிரும் ஒப்பற்ற விருந்துண்டு, உளப்பசியும் உடற்பசியும் ஆற்றிக்கொள்வர்!

ஆனால், இதோ ஒருவன் மட்டும், தான் உண்ணப்போகும் இன்ப விருந்தைப் பெரிதாகக் கருதாமல், மாலைப் பொழுதுக்கு விருந்து செய்ய வேண்டுமென்று பரந்த மனத்துடன் நினைக்கிறான்.

அவன் நின்று நினைக்குமிடமோ; எதிரியின் கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் அவனது அரசனின் படைகள் அணிவகுத்திருக்கும் பாசறைக்கு அருகாமையில்!

பகையரசனின் ஆளுகைக்குட்பட்டிருந்த பல பகுதிகளை வென்று, இறுதியாக அவனைக் கோட்டைக்குள் சென்று வளைத்து வென்றிடத்தான் அந்த முற்றுகை.

முற்றுகையைப் பகையரசன் முறியடிக்க முடியாது! இறுதி வெற்றி அவன் வணங்கும் வேந்தனுக்கே! அந்த நம்பிக்கையுடன்தான் வீரன், தோள் உயர்த்தி நின்று கொண்டிருக்கிறான்.

“மனைவியும் கணவனும் மாலைப்பொழுதில் விருந்துண்கிறார்களே; நான் என் மாலைப்பொழுதுக்கு விருந்து வழங்கக் கூடாது?”

இப்படியொரு கேள்வி எழுகிறது அவன் உள்ளத்தில்! உடனே அவன் மாலைப்பொழுதுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லுகிறான். என்ன செய்தி அது?

“மாலைப்பொழுதே பொறுத்திரு! எனது அரசன் ஈடுபட்டுள்ள செயலில் முனைந்துநின்று வெற்றி பெற்றுவிடுவானாக! அந்த வெற்றிக்குப்பிறகு நான் ஓடோடி வந்து என் அன்பு மனைவியுடன் கூடிக்கலந்து உனக்கு விருந்து படைக்கிறேன்.”

மாலைப்பொழுதில் மனைவியும் கணவனும் இன்ப விருந்து அருந்துவார்கள் என்பதை மாற்றி - மாலைப்பொழுதுக்கு மனைவியும் கணவனும் இன்ப விருந்து படைப்பார்கள் என்று கூறுவதில்தான் எவ்வளவு சுவை! எவ்வளவு சுவை!

“மஞ்சமே! உன்மீது கொஞ்சிப் புரண்டு மகிழ்வோம்” என்பதற்கும், “மஞ்சமே! நாங்கள் கொஞ்சிப் புரண்டு மகிழ்ந்து உன் துயரம் தணிப்போம்” என்பதற்குமுள்ள தனிச்சுவை புரிகிறதல்லவா?

மஞ்சம் என்பதற்குப் பதிலாக வள்ளுவர் மாலைப்பொழுதைக் குறிப்பிட்டிருக்கிறார்; அவ்வளவுதான்!

விருந்து அருந்தினாலும் சரி; விருந்ததை அளித்தாலும் சரி; அந்தப் பயன் மனைவிக்கும் கணவனுக்குமே தவிர - நிச்சயமாக மாலைப்பொழுதுக்கு இல்லை!

என்னும் கற்பனை வளத்தை எண்ணும்போது வியப்பு மேலிட்டுத்தான் செய்கிறது.

“வினைகலந்து வென்றீக வேந்தன் மனைக்கலந்து மாலை அயர்கம் விருந்து”

அதிகாரம் - 127 - அவர்வயின் விதும்பல்; பாடல் - 1268

அயர்கம் = செய்வோம்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்