பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 174 / 300

அ. இருபுனலும் வாய்ந்த / ஆ. உறுபசியும் ஓவா / இ. ஆங்கமை வெய்திய

அச்சுப் பக்கம் 373374 · ஸ்கேன் 390391 · அதிகாரம் 74 (அரணியல்) — குறள் 737, 734, 740

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

நாட்டுக்குரிய சிறப்புக்களைத் தெரிந்துகொள்ள யாரை நாடவேண்டுமென, ஆசிரியரை நோக்கி மாணவன் ஒருவன் கேட்டான். “நாடு பற்றித் தெரிந்து கொள்ள வள்ளுவரை நாடு!” என்றார் ஆசிரியர். “அவர் எங்கிருக்கிறார் இப்போது?” என ஏக்கத்துடன் வினவினான் மாணவன். “குறள் நூல் வடிவம்தான் வள்ளுவர்! அரணியல் எனும் பகுதி, பொருட்பாலில் உள்ளது! அதில் நாடு குறித்து பத்துப் பாடல்கள் உண்டு. அத்தனையும் முத்துப் பாடல்கள்.” ஆசிரியர் முகம் ஒளி உமிழ்ந்தது, அந்தக் குறட்பாக்களின் பெருமை குறித்து மொழிந்தபொழுது!

ஊற்றுப் பெருக்கு, மழை வளம் ஆகிய இருவகையான புனலும் வகையாக வாய்த்த மலைத் தொடரும் அந்த மலையிலிருந்து உருவாகி வரும் ஆற்று வளமும் வலிமை மிக்க அரணும் நாட்டின் உறுப்புக்களாகும்.

“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு”

என்கிறார் அந்தத் தமிழ்ப் பெருந்தகையாளர். அது மட்டும் அல்ல தம்பி, பசிக்கொடுமையும் நோய் நொடிகளும் பாழ் செய்யும் படையெடுப்புகளும் தன்னை அணுகிடாமல் இயங்குவதுதான் நாட்டுக்குரிய இலக்கணத்தைப் பெற்றதாகும் என்றும் வள்ளுவர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு”

இந்தக் குறள் அந்தச் சிறப்பினைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

ஆசிரியர், மாணவனுக்கு அளித்த விளக்கங்கள், அவனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின.

“அய்யா! நாட்டுக்குத் தேவையான பெருமைகளைப் பற்றிக் கூறினீர்கள். எல்லா வளமும் பொருந்தியதாகவும் வள்ளுவர் கூறுகிற அத்துணைச் சிறப்புக்களையும் உடையதாகவும் அமைந்த நாடு, எந்த ஒரு காரணத்தினாலாவது அதன் சீர்த்தியை இழக்க நேரிடுமா? அப்படியானால் அது என்ன காரணமாக இருக்கக் கூடும்?”

மாணவனைத் தட்டிக் கொடுத்தவாறு ஆசிரியர் விடையளித்தார்.

“அன்புத் தம்பி! அதையும் குறளே கூறுகிறது கேள்! எல்லாச் சிறப்புக்களும் வளமும் வலிமையும் ஒருசேர அமைந்திருந்தபோதிலும் அவற்றைக் கட்டிக் காத்துச் சீருடன் நடத்தும் அரசு ஒன்று இல்லாவிட்டால், நாட்டுக்குரிய சிறப்புக்களால் பயன் எதுவும் மக்களுக்குக் கிட்டாமல் போய்விடும் என்று குறளார் அழுத்தம் திருத்தமாக முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்!”

“ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு”

இந்தக் குறளுக்கான பொருள் கேட்டு, அந்த மாணவன் வியந்து நின்றான். அவன் விழிகள் சிந்தனைச் சுடர்களாகப் பிரகாசித்தன. ஆசிரியர், அவன் கையில் தந்த அழகிய குறட்பாச் சுவடியைக் கண்களில் ஒற்றிக் கொண்டான். நாடு எப்போது சீர் பெற்றதாக விளங்குமென்பதையும் எப்போது சீரழியக்கூடும் என்பதையும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் என்பதை எண்ணி எண்ணி அவன் மலைத்துப் போனான்.

அதிகாரம் - 74 - அரணியல்; பாடல்கள் - 737, 734, 740

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்