பொருளடக்கம் 173 / 300
துறந்தார் பெருமை
அச்சுப் பக்கம் 371–372 · ஸ்கேன் 388–389 · அதிகாரம் 3 (நீத்தார் பெருமை) — குறள் 22
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
எண்ணிலடங்காது என்று கூற முற்படுகிறவர்கள்; “வானத்து விண்மீன்களைக் கூட எண்ணிவிடலாம்; அந்தப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கூற இயலாது” என்பர்!
‘நீடு வாழ்க! நெடிது வாழ்க! பல்லாண்டு வாழ்க! பல்லாயிரத்தாண்டு வாழ்க!’ என ஒருவரை வாழ்த்திடும் புலவர் பெருமக்கள், ‘காவிரி மணல்களைவிட எண்ணற்ற ஆண்டுகள் வாழ்க!’ எனக் கூறிக் களித்திடுவர்.
வள்ளுவருக்கு ஒரு துறவியின் பெருமைகளைப் புகழ்ந்து கூறும் எண்ணம் ஏற்படுகிறது!
அவர் எல்லாத் துறவிகளையும் பெருமைமிக்கவர்கள் என்று சிறப்பித்து விடுவாரா?
நாடுபோற்றும் மடாலயம்! அங்கே காவியுடுத்திய பெருந்துறவி! அவரைச் சுற்றித் தண்டு கமண்டலங்களுடன் அவரது மாணவமணிகள்! ‘பெருந்துறவி என்றைக்குக் கண்ணைமூடி நீங்காத்துயில் கொள்வார்; மடாலயத்தின் அதிகாரி மாணிக்கமிழைத்த
பீடத்தில் அமர்ந்து - முத்தும் பவளமும் பதித்த தங்கப் பல்லக்கில் ஏறி, பக்தர்களை ஆசீர்வதித்து, பகலை விரட்டிய இரவுக்கு வாழ்த்துக்கூறி, கொள்ளை வழிவரும் முல்லைகளைக் கொஞ்சிக் குலவிடலாம் - அதரபானம் இருக்கிறதா? அல்லது அமுதமொழியாள் கையிலேந்தியிருக்கும் திராட்சைரசம் தித்திக்கிறதா? என ஒப்பிட்டுக் கிடந்து உருண்டு புரண்டு, உதயமானதும் ‘ஓம்!’ என ஒலித்தவாறு உலகத்தாரை ஏமாற்றி உடலை வளர்க்கலாம், பொன்போல’ என்று தவமிருக்கும் சில துறவிகளைப் பற்றி அறியாதவரா வள்ளுவர்!
எந்த ஒரு துறவி என்றைக்குத் தன் கழுத்தை நெறித்துக் கொன்று யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டு, ‘பெருந்துறவியார், நேரடியாக பெருமானடி சேர்ந்தார்’ எனச் சொல்லித் தப்பித்துவிடுவோமோ என்ற அச்சத்தில் பெருந்துறவிகள் பலர் மடாலயத்தைவிட்டே தப்பிப் பிழைக்க ஓடிவிட்ட கதைகள் எல்லாம் இன்று நடப்பதுபோல் அன்றைக்கும் நடந்திருக்குமன்றோ?
அந்த வகைத் துறவிகளின் போலி வாழ்க்கையை வள்ளுவர் ஏற்றுக் கொண்டதேயில்லை.
தூய வாழ்க்கை! உலகை ஏமாற்றாத ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை! பற்றற்ற வாழ்க்கை! பண்பார்ந்த வாழ்க்கை! அப்படியொரு துறவியார் அவர் கண்ணில் படுகிறார்! தொண்டு செய்வதற்கென்றே தோன்றிய துறவி!
அவரது பெருமைகளை எண்ணிச் சொல்ல இயலாது என்பதைக் குறளார் உணருகிறார்.
விண்மீன்களைவிட எண்ணிக்கை மிகுந்த பெருமைகளுக்குரியவர் என்று கூறினாரா? இல்லை!
காவிரியாற்று மணலினும் அதிகமான எண்ணிக்கையுடைய பெருமைகளுக்குச் சொந்தக்காரர் என்று சிறப்பித்தாரா? இல்லை!
வேறு எப்படித்தான் அந்தத் துறவியின் பெருமைகளைப் பற்றி வள்ளுவர் பேசுகிறார்!
“பற்றுக்களைத் துறந்த தூய்மையான துறவிகளின் பெருமையை அளந்து கூறுவது என்பது; உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்ற கடினமான செயல்!”
விண்மீன்கள் வரவில்லை! காவிரியாற்று மணல் துகள்கள் வரவில்லை! உலகில் இதுவரை எத்தனைபேர் பிறந்தனர், எத்தனைபேர் இறந்தனர் எனக் கணக்கிட முடியுமா? அதுபோல முற்றும் துறந்த முழுமையான துறவிகளின் பெருமைகளைக் கணக்கிட முடியாது என்கிறார்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எத்தகைய கற்பனை வளம்!
“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று”
அதிகாரம் - 3 நீத்தார் பெருமை; பாடல் - 22
துணைக்கூறின் = அளந்து கூறுதல்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்