பொருளடக்கம் 172 / 300
நிறைநீர் நீரவர்
அச்சுப் பக்கம் 369–370 · ஸ்கேன் 386–387 · அதிகாரம் 79 (நட்பு) — குறள் 782
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
இந்தியத் திருநாட்டு விடுதலைப் போராட்டத் தொடக்க காலத்தில், அவர்கள் இருவரும் தோளோடு தோள் நின்று முரசு கொட்டினர். விடுதலை பெறுகிற சுதந்திர நாட்டில் சமுதாயம் எல்லா வகையிலும் முன்னேற்றம் பெற வேண்டுமென்ற நோக்கம் நிறைவேற, இருவருமே தனித்தனி வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பணியாற்றினர். அவர்தம் வழிமுறைகளை மக்களிடம் விளக்கிடும்போது, இருவரது கருத்துக்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன! அந்தக் கருத்து மோதுதல்களுடனேயே ஏறத்தாழத் தொண்ணூற்றி ஐந்து வயதை எட்டுகிறவரையில் அந்த முதுபெரும் கிழவர்கள் உயிர் வாழ்ந்தனர்!
ஒருவர் காடுமேடெல்லாம் சுற்றினார். கருத்து மழை பொழிந்தார். கடுமையான பணியினை ஏற்றார் - பேசினார்! எழுதினார்! அவர்தான் பெரியார்! அறிவுலக மேதை! இன்னொருவர் அரசியல் மேதை! மக்களோடு சென்று அவர்களுக்குப் பிடித்தமான கருத்துக்களைச் சொல்லித் தன் வழிக்கு மெல்ல இழுத்து அதன் வாயிலாகப் புதிய சமுதாயப் பொலிவை உருவாக்க எழுதிப் பேசி உழைத்தவர்! அவர்தான் மூதறிஞர் இராஜாஜி!
கருத்துக்குக் கருத்து - கொள்கைக்குக் கொள்கை - தீப்பொறி பறக்க எதிர் எதிராகப் பாய்ந்த நிலையிலும் இருவரது தொடக்ககால நட்புக்குத் துளியளவு குந்தகமும்
என்றைக்கும் ஏற்பட்டதில்லை. “நானும் பெரியாரும் அன்பான எதிரிகள்” என நெஞ்சம் இனிக்கக் கூறியவர் மூதறிஞர்! அந்த அன்பு பொழியும் நட்புணர்விலேயிருந்து என்றுமே விடுபட்டவர் அல்லர் தந்தை பெரியார்!
பெரியாருக்கு முன்னரே இயற்கையின் மடியில் நீடுதுயில் கொண்டார் இராஜாஜி! அவரது உயிரற்ற உடல்கண்டு பதறிக் கண்ணீர் வடித்தார் பெரியார்! எரியூட்டப்பெறும் இடம் வரையில் தனது இதய நண்பரின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டு பின் தொடர்ந்தார்! நான்குபேர் பிடித்து நடக்க வைக்க வேண்டிய அந்தத் தள்ளாத நிலையிலும் எரியூட்டும் இடத்திற்கருகே சென்று மண் தரையில் அமர்ந்து கொண்டார்! கடைசியாகத் தன் இனிய நண்பரின் சடலத்தின்மீது தீயின் நாக்குகள் சுழலத் தொடங்கியவுடன், அருகிருந்த ஆயிரமாயிரம் பேர் கண்ணுருகிடும் வண்ணம், பெரியாரின் ஒளிமிகு விழிகளில் இருந்து, அருவிபோல் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது கண்ணீர்!
கடுமையான பயணங்கள் - கொடுமையான அடக்குமுறைகள் - இவற்றை ஒன்றாக இருந்து ஏற்ற நண்பர்கள்; இடையிலே இலட்சிய மாறுபாடுகளால் பிரிந்தனர். எனினும் பிரிந்த பின்னர் புயலென ஒருவரையொருவர் எதிர்த்தனர் எனினும் - அனைத்துக்கும் அப்பாற்பட்டதும் யாராலும் பிளந்திட முடியாததுமான நட்பு உணர்வு, அந்த இருவரிடமும் கொடிகட்டிப் பறந்திருக்கிறது!
அறிவுடையவர்களின் நட்பு, இளமதி முழுமதியாவது போல வளர்ந்திடும் தன்மை வாய்ந்தது. அறிவற்றோரின் நட்போ முழுமதி தேய்ந்திடும் தன்மையைப் போன்றது என வள்ளுவர் கூறியதற்கேற்ப வாழ்ந்து காட்டிய அறிவுலக மேதைகளன்றோ இருவரும்!
“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு”
அதிகாரம் - 79 - நட்பு; பாடல் - 782
நீர - தன்மையுடையது நீரவர் - அறிவுடையார்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்