பொருளடக்கம் 171 / 300
ஊடி யவரை
அச்சுப் பக்கம் 367–368 · ஸ்கேன் 384–385 · அதிகாரம் 131 (புலவி) — குறள் 1304
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“அலுவல் முடிந்து எவ்வளவு நேரமாகிறது; இத்தனை நாளிகை எங்குதான் போயிருந்தீர்கள்? பணி முடிந்தவுடன் பாவையெனைக் காணும் துடிப்புடன் மனை நோக்கி ஓடிவந்தால் குறைந்தா போய்விடுவீர்கள்? அடுக்களைக்குச் செல்வதும் - வாயிலண்டை வந்து நின்று வீதிமுனை வரையில் விழிகளை எறிந்து, வருகிறீர்களா என்று நோக்குவதும் - அப்பப்பா, எனக்கு எப்படி வேதனையாக இருந்து தெரியுமா?”
கையில் மல்லிகைச் சரத்துடன் வீட்டுக்குள் நுழைந்த கணவனிடம், மனைவி, இப்படித் தனது இதய கீதத்தை இசைத்தாள். அவனோ அவளின் மனோநிலையைப் புரிந்து கொள்ளாமல், “அலுவல் முடிந்ததும் எனக்கு வேறு பொழுது போக்கே கிடையாதா? நண்பர்கள் வந்தனர். அவர்களுடன் கடற்கரை சென்றிருந்தேன். அங்குதான் இந்த மல்லிகைச்சரம்கூட வாங்கினேன்” என்று சற்றே கடுத்த முகத்துடன் கூறிவிட்டான்.
அதன்பிறகு அவள் பேசவில்லை. சிலையொன்று உயிர்பெற்று - ஆனால் ஊமையாக நடமாடுவதைப் போலச் செயல்பட்டாள். இலை போட்டாள். உணவு பரிமாறினாள். படுக்கையைத் தட்டித் தூய்மைப்படுத்தினாள். அவன் படுத்துக் கொண்டான். பழத்தட்டை அருகில் வைத்தாள். அவன் சாய்ந்தவாறே பழங்களைக் கடித்துச் சுவைத்துத் தின்று முடித்தான். பால் கிண்ணத்தையும் அவனிடம் நீட்டினாள். எப்போதும் அப்படி வழக்கமில்லை. உணவருந்திய பிறகு சிறிது நேரம் பூரிப்பு பொங்க உரையாடுவார்கள். அவன் மடியில் அவளும் அவள் மடியில் அவனுமாக மாறி மாறிப் படுத்துக் கொண்டு இதழ்களை நனைத்துக் கொண்டு இன்பபுரிக்குச் சென்று
வருவார்கள். அதற்குள்ளாகக் கிண்ணத்துப்பாலில் ஆடை படரும்! அவர்களுக்கோ ஆடை அகலும்! விளக்கோ, தன் முகத்தை இறுக மூடிக் கொள்ளும், வெட்கத்தால்!
எல்லாம் இன்பமயம்! அதன்பிறகே பால் அருந்துவர். இது வாடிக்கை. இன்றைக்கோ அவள், பால் கிண்ணத்தையும் அவனிடம் தந்துவிட்டு - ஒரு பாய்தனை விரித்துத் தரையினில் படுத்துக் கொண்டாள்.
அவள் எதிர்பார்க்கிறாள்; கணவன் அருகில் வருவான். ‘அன்பே! கோபமா?’ என்பான். அணைத்துவாரித் தூக்குவான். ‘இனிமேல் அலுவல் முடிந்ததும் ஓடோடி உனைக் காண வருகிறேன்’ என்பான். உச்சிமுதல் உடல் முழுதும் “இச்” ஒலியுடன் அவன் இதழ்கள் அழுந்தி விளையாடும். அதன்பிறகு ஊடலை உதறிவிட்டு உடல்கள் பின்னிக் கொள்ளும். இப்படியொரு கற்பனைக் காவியம் தீட்டியவாறு கண்களை மூடியும் மூடாமலும் அவள் பாயில் புரண்டு கொண்டிருக்கிறாள். அவனோ, பாலையும் அருந்திவிட்டு அதன் தொடர்ச்சியாக ஏப்பம் ஒன்றையும் வெளிப்படுத்திவிட்டு - எக்கமுடன் கீழே கிடப்பவளைப் பற்றிக் கவலைப்படாமலே கட்டிலில் கொட்டாவி விடுகிறான்.
“என்னடி பெரிய கோபம்! ஒழுங்காக வந்து படுக்கப் போகிறாயா இல்லையா?”
இதுதான் அவளின் ஊடலைத் தீர்க்க அன்றைக்கு அவன் கையாண்டமுறை!
அவள் பேசவில்லை. அவனோ தூங்கிவிட்டான். விடிய விடியத் தூங்காமல் அலைந்த அவள் விழிகள், காலையில் சிவந்து காணப்பட்டன. கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் உருண்டு கொண்டுதானிருந்தன.
தான் அழைத்தும் வரவில்லையே என்ற கோபம் கொப்பளிக்க, அவன் காலையுணவுகூட அருந்தாமல் கடமையாற்றப் புறப்பட்டுவிட்டான்.
மாலையில் வீடு திரும்பினான். அவளோ கடுங்காய்ச்சலுடன் முனகிக் கொண்டு படுத்திருந்தாள். மருத்துவரை விரைந்தோடி அழைத்து வந்தான். அவர் விவரமறிய விரும்பினார். மருத்துவர் நெருங்கிய நண்பர் என்ற காரணத்தால், முதல் நாளிரவு நடந்தவற்றை விவரித்தான். அவர் குறளுங்கூடக் கற்றுத் தெளிந்தவர்.
“ஊடலால் பிணங்கியவரை ஊடலைத் தெளிவித்து அவர்களிடம் அன்பு செலுத்தாமலிருந்தால், ஏற்கனவே வாடிப் போயிருக்கிற கொடியின் வேரையும் அறுப்பது போன்ற செயலாகிவிடும்.
இப்படி வள்ளுவர் எழுதியிருக்கிறார் தெரியுமா உனக்கு? எனவே நண்பா! இந்த நோய்க்கு மருந்து உன்னிடமே இருக்கிறது! அதைக் கொடு; காய்ச்சல் நின்றுவிடும்...”
எனக் கூறிவிட்டு மருத்துவர் போய்விடுகிறார்.
“ஊடிய வரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று”
அதிகாரம் - 131 - புலவி; பாடல் - 1304
உணராமை = ஊடல் தீராமை வள்ளி = கொடி
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்