பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 170 / 300

பணியுமாம் என்றும்

அச்சுப் பக்கம் 365366 · ஸ்கேன் 382383 · அதிகாரம் 98 (பெருமை) — குறள் 978

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“அறம் எனக்கு வழிகாட்டுகிறது! நீதியும் நேர்மையும்தான் எனக்குத் துணை நிற்கின்றன! சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்வு மாசற்றது! மறை நான்கு வகுத்தவர்கள்கூட மதித்துப் போற்றக்கூடிய வாழ்வாகும்! நான் பிறர்மீது குறை சொல்லிக் கொண்டே இருப்பதற்குக் காரணம், யார் மீதும் பழி சுமத்த வேண்டும் என்பதற்காக அல்ல! அப்படிப் பிறரைக் குறை கூறி அவர்களை இழித்துப் பேசுவதால், என் சிறப்பு மக்களுக்குத் தெரிகிறது. நான் புத்தனைப்போல எதையும் துறந்துவிட்ட தியாகியாக இருப்பவன். நபிகள் நாயகத்தைப்போல எதிர்ப்புகளைப் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறவன். ஏசுநாதரைப்போல இலட்சிய வெற்றிக்காக, இழப்பு எதுவாயினும் அதனைப் பொருட்படுத்தாதவன்.”

- இப்படி ஒருவன் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்ததை ஆங்கு, ஓர் ஆசிரியரின் மகன் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் பேசி முடித்ததும் மக்கள் கலைந்தனர். கலைந்து சென்ற மக்களில் பலர் - ஆடவரும் பெண்டிருமாக - அவன் கால்களைத் தொட்டு வணங்கிச் சென்றனர்.

அந்தப் பெரிய மனிதனின் அருகே அவனது மெய்க்காப்பாளன் நின்று கொண்டு, ஏடொன்றில் எதையோ குறித்துக் கொண்டிருந்தான்.

மக்கள் அனைவரும் வெளியேறியபின்பு, அந்தப் பெரிய மனிதன், மெய்க்காப்பாளனைப் பார்த்துக் கேட்டான் : “இன்று என் காலில் விழுந்து வணங்காதவர் எத்தனை பேர்?”

“ஐயா, அந்தத் தொகை நேற்று இருந்ததைவிட சற்று அதிகம்.”

“நேற்று இருபது பேர் என்று கூறினாய்; இன்று எத்தனை பேர்?”

“இன்று ஐம்பது பேர் தங்களின் காலில் விழாது மட்டுமல்ல; தங்களைக் கைகூப்பிக்கூடத் தொழவில்லை!”

“அப்படியா? ஓகோ! சரி! சரி! நேற்று என் குறைகேட்க வந்தோர் எண்ணிக்கை என்ன? மகளிர் எண்ணிக்கை என்ன?”

“நேற்று ஐந்நூறு பேர் வந்தனர். அதில் பாதிக்கு மேல் பாவையர் கூட்டம். ஆனால் இன்றோ மொத்தமே இருநூறு பேர்தான்! அவர்களில் மகளிர் மிகக் குறைவு!”

“நேற்று என்பது கடந்த காலம்! இன்று என்பது நிகழ்காலம்! நாளை என்பது எதிர்காலம்! இப்படியே நிலைமை போகுமானால் கடைசியில் என் அறிவுரை கேட்க ஆட்களே இருக்கமாட்டார்களா?”

“அப்படித்தான் தெரிகிறது அடியேனுக்கு!”

“இந்த நிலையை மாற்ற வழி காண வேண்டும்! என்ன வழி காணலாம்?”

“தங்களின் பெருமையைத் தாங்களே பேசுகிறீர்கள்! இதைவிட வேறு வழி என்ன இருக்க முடியும்?”

“பிறகேன் நமக்கு நாளாக நாளாக மதிப்பு மங்கி வருகிறது?”

“தாங்கள் சொல்வதை மட்டுமே நம்பாமல், தங்களின் நடவடிக்கைகளையும் மக்கள் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள்.”

“முட்டாள்! நீயே எனக்குப் பகைவனாக இருப்பாய்போல இருக்கிறதே! போ! போ! என் முன் நில்லாதே! நான் தொடர்ந்து என்னைப் பற்றிய சிறப்புக்களையும் என் நேர்மையான வாழ்வு பற்றியும் பேசிக் கொண்டுதானிருப்பேன். என் வலையில் மக்கள் விழாவிட்டால், அவர்களை விலை கொடுத்து வாங்கவும் தயங்கமாட்டேன்.”

- இப்படிக் கூறிவிட்டு அந்தப் பெரிய மனிதன் வேகமாகச் சென்று விட்டான். மெய்க்காப்பாளனோ உதட்டைக் கடித்தவாறே வேறு திசையில் நடந்தான், கேலிக்குறி முகத்தில் தோன்ற!

இவற்றையெல்லாம் மன்றத்தின் சுவர் அருகே ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊர் ஆசிரியரின் மகன், தன் தந்தையிடம் ஓடிச் சென்று நடந்ததையெல்லாம் விவரித்தான்.

ஆசிரியர், தன்னுடைய அருமைச் செல்வனிடம் சொன்னார்:

“மகனே! நீ கண்டாயே... அதற்குப் பெயர்தான் சிறுமை.”

“என்னப்பா அப்படிச் சொல்கிறீர்கள்? அந்த மனிதன், தன்னுடைய பெருமைகளையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டினானே...!”

“மகனே! பெருமைப் பண்பு, தன்னைப் பிறர் பணிந்து புகழ வேண்டும் என்று விரும்பாது! பெருமைக்குரிய பண்பே பிறருக்குப் பணிந்து அடக்கமாக நடப்பதுதான். சிறுமைதான், தன்னைத்தானே வியந்து பாராட்டிக்கொள்ளும்! அதன் விளைவையும் விரைவில் காணும்! எனவே, நீ கண்ட உருவம் பெருமையின் வடிவம் அல்ல! சிறுமையின் சின்னம்.”

விளக்கம் பெற்ற மகிழ்ச்சியில் ஆசிரியரின் மகன், திருக்குறளை எடுத்துப் புரட்டினான் :

“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து”

அதிகாரம் - 98 - பெருமை; பாடல் - 978

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்