பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 169 / 300

வசையெனப வையத்தார்க்கு

அச்சுப் பக்கம் 363364 · ஸ்கேன் 380381 · அதிகாரம் 24 (புகழ்) — குறள் 238

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

தமிழ்நாட்டுக் கலையுலகில் ஒளிமிக்கவராகவும் அறிவாற்றல் செறிந்தவராகவும் வள்ளல் தன்மை வாய்ந்தவராகவும் மக்களைச் சிரிக்கவைத்துச் சிந்திக்க வைக்கும் திறம் கொண்டவராகவும் இந்த நூற்றாண்டில் திகழ்ந்தவர் கலைவாணர் அவர்களாவார்கள்.

பகுத்தறிவு நெறியில் அவரது வாழ்க்கை அமைந்திருந்தது. மூடநம்பிக்கை களை அகற்றி, மக்களை முன்னேற்றப் பாதையில் நடமாடச் செய்ய வேண்டுமென்பது அவரது பேரவா!

தேனில் கலந்து மருந்து கொடுக்கும் மருத்துவ முறை போன்று, கசப்பான உண்மைகளையும் அவர் தமது சொல்வன்மையின் வாயிலாக மக்கள் மனத்தில் பதிய வைத்தார்.

யாருடைய உள்ளத்தையும் புண்படுத்தாமல் பண்படுத்த வேண்டுமென்பதில் அக்கறை கொண்டவர்.

சொர்க்கம் - நரகம் என்று கூறப்படும் இடங்கள் கற்பனையே என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அந்த இடங்களுக்குக் கூறப்படும் தன்மைகளை மனிதனின் வாழ்க்கையோடு அவர் ஒப்பிட்டுப் பார்த்தார். அவ்வாறே மற்றவர்க்கும் ஒப்பிட்டு விளக்கிக் காட்டினார். அதற்கென அவர் கூறும் நகைச்சுவைக் கதை பின்வருமாறு :

இறந்துவிட்ட ஒருவரின் உடலை, இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். பெருங்கூட்டம் பின்தொடர்ந்தது. உடல் தளர்ந்த நிலையில் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், தன்னுடைய பேரனை அழைத்து, “ஏ! ஓடிப்போய் அந்தச் செத்தவன் எங்கே போகிறான் என்று அறிந்துவா!” என்றார். ஓடிச் சென்ற பேரன் சிறிது நேரத்தில் திரும்பிவந்து, “தாத்தா! அவன் நரகத்துக்குப் போகிறான்” என்றான்.

சிறிது நேரம் கழித்து, அதே வழியில் மற்றொரு சவத்தைச் சுமந்துகொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்தும் பெருங்கூட்டம் சென்றது. தாத்தாவின் ஆணைப்படி பேரன் ஓடினான். பிறகு திரும்பி வந்தான்.

“இவன் எங்கேடா போகிறான்?”

“தாத்தா இவன் சொர்க்கத்துக்குப் போகிறான்”

அருகே அமர்ந்து வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டிருந்த கிழவி, அந்தக் கிழவரின் துணைவி - வியப்புடன் கேட்டாள் : “இந்தச் சின்னப் பையனுக்கு அது எப்படித் தெரிந்தது” என்று!

“பாட்டி! முதலில் போன சவத்தின் பின்னால் சென்றவர்கள் - ‘எப்படியோ தொலைந்தான் பாவி!’ என்று மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு மெதுவாகப் பேசிக் கொண்டு போனார்கள்! அடுத்தபடி சென்ற சவத்தின் பின்னால் சென்றவர்கள், ‘அய்யோ! ஊருக்காக உழைத்தவன் இப்படி எதிர்பாராமல் போய் விட்டானே’யென்று கண்கலங்கப் பேசிக்கொண்டு போனார்கள். அந்த இரண்டு விதமான பேச்சுக்களையும் வைத்து முதலில் போனவனுக்கு நரகமும், அடுத்தாற்போல் போனவனுக்குச் சொர்க்கமும் என்று முடிவுக்கு வந்தேன். எல்லாம் தாத்தா சொல்லிக் கொடுத்ததுதான்.”

இதைச் சொல்லிவிட்டுப் பேரன், பாட்டியின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் மலர்ந்தது. கிழவர், கிழவியிடம் சொன்னார் : “சொர்க்கம், நரகம் என்று தனியாக இடங்கள் எதுவுமில்லை. ஒருவன் தனது வாழ்க்கைக்குப் பிறகு மிச்சமாக விட்டுப் போகிற புகழ்ச்சியையோ அல்லது இகழ்ச்சியையோ பொறுத்ததாகும் அது” என்று!

பேரன், தனக்குத் தாத்தா சொல்லிக்கொடுத்த திருக்குறளுக்கான விளக்கத்தையும் பாட்டிக்குக் கூறி அவள் பாராட்டைப் பெற்றான்.

“தமது வாழ்க்கைக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறாவிட்டால் அப்படிப் பெறாத வாழ்க்கை, உலகத்தார் எல்லார்க்கும் பழியெனக் கூறத்தக்க அளவுக்கு ஆகிவிடும்.”

“வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்”

அதிகாரம் - 24 - புகழ்; பாடல் - 238

இசை - புகழ் வசை - பழி

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்