பொருளடக்கம் 168 / 300
காலைக்குச் செய்த நன்று
அச்சுப் பக்கம் 361–362 · ஸ்கேன் 378–379 · அதிகாரம் 123 (பொழுதுகண்டு இரங்கல்) — குறள் 1225
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
இன்பமளித்த இரவுக்கு வாழ்த்துக்கூறி பேரன்புப் பெட்டகமாம் காதலனின் கன்னத்தில் நூறு கொடுத்துத் திரும்ப வட்டியுடன் அட்டியின்றி அக்கணமே பெற்றுக் கொண்டு “இரு இரு” என அவனிழுக்க - “ஊஹூம்” என அவள் தடுக்க - அன்றைய காதல் காவியத்தை அத்துடன் முடித்துக் கொண்டு இருவருமே காலைக் கதிருக்கு வணக்கம்கூறிக் கடமையாற்றக் கிளம்பி விட்டனர்.
அழகிய வாசல்புறத்தில் அரிசிமாக்கோலம் இட்டிட வந்தாள். அன்னப்பறவை போல் அமைத்த கோலம் அவள் எண்ணப்பறவையின் சிறகை அசைத்தது. “அன்னம் போல் இருக்கின்றாய்” எனச் சொன்ன அத்தானிடம் “அள்ளி உண்ணுங்களேன்” என்று கேலி புரிந்து தோளில் சாய்ந்துகொண்டதும் - அந்த இனிய பதிலின் தித்திப்பைச் சுவைத்து அவன் அவளை இறுகத் தழுவிக் கொண்டதும் கோலத்தில் கோலம் காட்டின.
வாசல்புறம் விடுத்து அடுக்களைக்கு வந்தவுடன் காய்ச்சுவதற்குப் பால் எடுத்த போது, முன்னாள் இரவு முப்பாலை எழுத்தெழுத்தாய்ப் பிரித்தெடுத்துப் பொருள் கண்டு இன்பம் துய்த்ததெல்லாம் எதிர்நின்று மகிழ்வூட்ட - அந்த மங்கை நல்லாள் மயங்கிப் போனாள்.
கூடத்தில் வந்தமர்ந்த அத்தானுக்கு அப்பத்தை எடுத்து வைத்து - அதனை அவன் விரலாலே தொடுகின்ற அழகினையும் அதனை மெல்ல விழுங்குகின்ற பாங்கினையும் பார்த்துக்களித்துப் பணிபுரிய விடை கொடுத்து அனுப்பிவிட்டு, அவன் போகும்வழி விழிவிடுத்து வீட்டில் ஒரு தூண்போல அசையாமல் நின்றிருந்தாள்.
இரவில் அனுபவித்த இன்பத்தையெல்லாம் அசை போட்டுப் பூரித்துப் போக, அந்தக் காலநேரம் அவளுக்குத் துணையாக இருந்தது.
அதன் பின்னர் அவள் கடமைகளும் தொடர்ந்தன. பணிபுரியப் போயிருந்த கணவனுக்குப் பிற்பகல் உண்பதற்குக் கட்டுமுதும் அனுப்பி வைத்தாள்.
அதன்பிறகு மாலை வந்தது. காலைபொழுதில் களிப்பிலாடிய அந்த மயில், மாலைப் பொழுது கண்டு மனங்கலங்கி நின்றது! ஏன்? எதற்காக? இரவுதான் அவன் வருவான். அப்படித்தான் சொல்லிவிட்டுப் போயுள்ளான். அதற்குள் காலையில் அரும்பி மாலையில் மலரும் அந்தக் காதல் நோய் அவளைப் பற்றிக் கொண்டதே; அவள் என் செய்வாள்! நோயின் கொடுமையால் துடித்துப் போனாள்! மாலை நேரம் அவளை வருத்தி வாட்டியது. அவளுக்குக் காலையையும் மாலையையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.
“நான் காலை பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? இந்த மாலைப் பொழுதிற்கு நான் பகையுணர்வுடன் செய்த தீமை தான் என்ன?”
என்று தன்னையே கேட்டு நொந்து கொண்டாள்.
அவள் கேள்வியின் நோக்கத்தைப் புலப்படுத்துவதே: இதோ இந்தக் குறள்!
“காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை”
அதிகாரம் - 123 - பொழுதுகண்டு இரங்கல்; பாடல் - 1225
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்